நான் உங்கள் ரசிகன் : மனோபாலா



என்னோட திருமண விஷயம் பத்தி இதுவரை, நெருக்கமான சினிமாக்காரங்க பல பேர்கிட்ட சொல்லியிருக்கேன். ஆனா, மீடியாவில பகிர்ந்துக்கறது இதுதான் முதல் தடவை. தாலி கட்டிட்டு மாலையும் கழுத்துமா வந்து நிக்கும்போதே எங்க அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்னா ஊர் என்ன சொல்லும்? ‘‘இந்தப் பொண்ணு வந்த நேரம் மாமனாரை சாய்ச்சுப்புட்டா’னு ஆளாளுக்கு பேச, என் மனைவி மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க.

இப்பவும் நான் மனைவிகிட்ட பேச சந்தர்ப்பம் வாய்க்கல! உடனடியா ஒரு வண்டியைப் பிடிச்சி அப்பாவை ஆஸ்பிட்டலுக்கு கூட்டிப் போறோம். ட்ரீட்மென்ட் கொடுத்த டாக்டர், ‘‘ஒண்ணும் பயமில்ல... நல்லா இருக்கார்’’னு சொன்னதும்தான் இன்னொரு அவசரம் எங்களுக்கு உறைக்குது. அன்னைக்கு சாயங்காலமே எங்களுக்கு மனைவி ஊரான மன்னார்குடியில ரிசப்ஷன்.

மதுரையில இருந்து மன்னார்குடி கிளம்பறப்ப ‘திருச்சி வெக்காளியம்மன் கோயிலுக்கு அப்படியே போலாம்’னு அந்த ரூட்டைப் பிடிச்சோம். வழியெல்லாம் நல்ல மழை. எங்களோட எங்க அக்காவும் வந்ததால அப்பவும் நான் மனைவிகிட்ட பேச சந்தர்ப்பம் வாய்க்கலை. வெக்காளியம்மன் கோயிலுக்குப் போயிட்டு, மன்னார்குடி ரிசப்ஷனுக்கு நாங்க போய்ச் சேர்ந்தபோது நைட் மணி ஒன்பது. ஏழு மணிக்கு ரிசப்ஷன்னு இன்விடேஷன் பார்த்துட்டு வந்து காத்திருந்த ஜனமெல்லாம் வீட்டுக்குத் திரும்பிப் போயிட்டாங்க!

நாங்க சைலன்ட்டா என் மாமனார் வீட்ல சாப்பிட்டுட்டு எங்க ஊருக்குக் கிளம்பிட்டோம். மருங்கூருக்கு நாங்க வந்து சேர்ந்தப்போ மணி ராத்திரி ஒன்றரை. அந்த நடுராத்திரில எங்க கிராமத்து மக்கள் தடபுடலா மேளம் கொட்டி எங்களுக்கு வரவேற்பு கொடுக்கறாங்க. ஒரு வழியா வீட்ல செட்டில் ஆனதும், ‘‘உன் வொஃய்ப்கிட்ட போய் பேசுடா’’னு எங்க அக்கா பர்மிஷன் குடுக்குறாங்க.  இப்பதான் என் வொய்ஃப்கிட்ட முதல் முறையா பேசப் போறேன்.

‘‘நான் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ்ல படிச்சிருக்கேன்...’’னு ஆரம்பிச்சி, சினிமாவுல டைரக்டர் ஆனது எப்படி?னு விலாவாரியா மூச்சு விடாம என் பிரதாபங்களைச் சொல்லி முடிச்சேன். ஆனா, அவங்க ஒரு வார்த்தை குறுக்கே வாயைத் திறந்து பேசலை. அதுக்குப் பிறகு, ‘‘என்ன நான் இவ்வளவு பேசுறேன். நீ ஒண்ணுமே பேசமாட்டேன்றே?’’னு கேட்குறேன்... ‘‘முஜே தமிழ் நஹி மாலும்’’ங்கறாங்க, இந்தியில! நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். அவங்க அப்பா ராணுவத்துல சேர்ந்து பஞ்சாப்ல வேலை பார்த்தவர். இவங்க அங்கேயே படிச்சு வளர்ந்ததால தமிழே தெரியாது; இந்திதான் தெரியுமாம். எனக்கு ஸ்கூல்ல செகண்ட் லாங்குவேஜ் இந்திங்கறதால, நாங்க அப்படியே மெல்ல மெல்ல ட்யூன் ஆகிட்டோம். என் மனைவி பெயர் உஷா.

நாட்டியப் பேரொளி பத்மினி அம்மா என்னோட சீரியல்ல நடிச்சப்போ, இந்தக் கதையை அவங்ககிட்ட சொன்னேன். விழுந்து விழுந்து சிரிச்சிட்டு,  ‘‘ஏன் மனோ... இந்த சீன்கள் எல்லாத்தையும் நீ ஒரு படத்துல வைக்கலாமே’’னு  சொன்னாங்க. பத்மினி அம்மா மட்டுமில்ல... சரோஜாதேவி அம்மா, சௌகார் ஜானகி  அம்மாவில இருந்து என்னோட பட ஹீரோ, ஹீரோயின்கள் எல்லாருக்குமே இது தெரியும். ராதிகா இதைச் சொல்லிச் சொல்லி செம கலாய் கலாய்ப்பாங்க.

‘நான் உங்கள் ரசிகன்’ படம் ஃபர்ஸ்ட் காப்பி பார்க்குறதுக்கு என் மனைவியையும் அழைச்சுட்டுப் போயிருந்தேன். அவங்க முன்னாடி ராதிகா என்கிட்ட, ‘‘மனோ, போன வாரம் உனக்கு அது வாங்கிக் குடுத்திருந்தேனே... அது உனக்கு ஓகேதானே?’’னு மர்மமா கேட்டு சிரிச்சாங்க. என் வொய்ஃப் அப்பாவியா என்னைக் கேள்வியோட பாக்குறாங்க! ‘‘நீ ஒண்ணும் தப்பா எடுத்துக்காதே... ராதிகா கலாய்க்கறாங்க’’னு புரிய வைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு. நகைச்சுவைங்கறது என் வாழ்க்கையோட இயைந்த விஷயம்னு நான் புரிஞ்சிக்கிட்ட தருணங்கள் இதெல்லாம்!

திருமணத்துக்கு அப்புறம் நான் இயக்கிய படம், ‘சிறைப்பறவை’. கலைமணி கதை. ஹீரோயினா வழக்கம் போல ராதிகாவை புக் பண்ணிட்டோம். ஹீரோ யாருனு தெரியல. அப்போ, விஜயகாந்த் வளர்ந்து வர்ற நேரம். அவர்கிட்ட பேசிப் பார்க்கலாம்னு போனோம். அவர் கதையைக் கேட்டதும், ‘‘இது ஹீரோயின் சப்ஜெக்ட்டா இருக்கே... இதுல எனக்கு வேலையே இல்லையே?’’னு கேட்குறார். ‘‘நீங்க சரினு சொன்னா... உங்களுக்கான சீனை கூடுதலா வச்சிக்கலாம். தவிர, அடுத்து உங்களை மெயினா வச்சி ஒரு படம் பண்றோம்!’’னு நானும் கலைமணியும் ப்ராமிஸ் பண்ணோம். அதனால, ‘சிறைப்பறவை’யில நடிக்க விஜயகாந்த் சம்மதிச்சார். அந்தப் படம் வெற்றியடைஞ்சு, எனக்கு பெரிய பெயர் கிடைச்சிடுச்சு.

இந்த நாட்கள்ல என் படங்களுக்கு இசையமைக்கணும்னு நாராயணன்னு ஒரு பையன் என்னை அடிக்கடி வந்து சந்திச்சுக்கிட்டே இருந்தார். அவனை எனக்குப் பிடிச்சுப் போனதால நான் போற இடத்துக்கெல்லாம் அவனையும் கூட்டிட்டுப் போனேன். இளையராஜா கூட நான் கம்போஸிங் போனால் கூட நாராயணனையும் அழைச்சிட்டுப் போவேன். தனியா இசையமைப்பாளர் ஆகணும்னு ஆர்வத்தோட இருந்த பையன். நேரம் வந்தப்போ அவனுக்கும் ஒரு சான்ஸ் கொடுக்க முடிவு பண்ணிட்டேன். நாராயணன்ங்கிற பெயரை சிற்பினு மாத்தி, நான் அவரை கமிட் பண்ணின டைம்ல விக்ரமனோட ‘கோகுலம்’ படமும் பண்ணினார் அவர்.

இதற்கிடையே நான் என்னோட அடுத்த பட டிஸ்கஷனுக்காக கலைமணியோட குற்றாலத்திற்கு போயிருந்தேன். அங்கே எனக்கு ரெண்டு போன் கால்கள் வருது... ரெண்டுமே மிகப்பெரிய கம்பெனிகள். ஒண்ணு, ஆர்.எம்.வீ அவர்களுடைய சத்யா மூவீஸ்ல இருந்து. இன்னொண்ணு, கலைஞர் அவர்களுடைய பூம்புகார் பிலிம்ஸ்ல இருந்து. ஒரு கணம் சந்தோஷம். ஆனாலும் அடுத்த நொடி, யாருக்கு முதல்ல படம் பண்றதுன்னு குழம்பிப் போயிட்டேன்.

உடனடியா சென்னைக்குக் கிளம்பி வந்து பூம்புகார் பிலிம்ஸ்ல செல்வம் அவர்களைப் போய்ப் பார்த்தேன். ‘‘என்னோடது, ‘பாலைவன ரோஜாக்கள்’னு ஒரு ரீமேக் படம். ஆனா, சத்யா மூவீஸுக்கு நீங்க பண்ணப்போறது ரஜினிகாந்த் படம். அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கிறது பெரிய விஷயம். அதனால நீங்க ரஜினி படத்தை விட்டுடாதீங்க. உங்கள அடுத்த கட்டத்துக்கு கொண்டு போற சான்ஸ் அது’’னு தெளிவு படுத்தி, என்னை ஆசீர்வாதம் பண்ணி அனுப்பி வச்சார்.

அப்படிப் பண்ணின படம்தான் ‘ஊர்க்காவலன்’. இந்தப் படத்துக்கு சிற்பியை இசையமைக்க வைக்கலாம்னு நினைச்சு, ஆர்.எம்.வீ கிட்ட அவரை அழைச்சிட்டுப் போனேன். சிற்பி பாடிக் காட்டினது, ட்யூன்ஸ் எல்லாம் அங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சுப் போச்சு. ரஜினி படத்துக்கு இசை... சத்யா மூவீஸ் படம் வேற... சிற்பிக்கு பயங்கர ஹேப்பி. அன்னிக்கே நானும் ஏ.எல்.நாராயணனும் கதை டிஸ்கஷன்ல உட்கார்றோம். மறுநாள் சத்யா மூவீஸ் போறேன். அங்கே உள்ளுக்குள்ள இருந்து வேறொருத்தர் வாத்திய சத்தம் கேட்குது. ‘சிற்பி இன்னும் வந்து சேரலியே... உள்ளே இசையமைக்கிறது யாரா இருக்கும்?’னு நான் திகைச்சுப்போய்
நிக்கிறேன்..!

ராதிகா என்கிட்ட, ‘‘மனோ, போன வாரம்  உனக்கு அது வாங்கிக் குடுத்திருந்தேனே... அது உனக்கு ஓகேதானே?’’னு மர்மமா  கேட்டு சிரிச்சாங்க. என் வொய்ஃப் அப்பாவியா என்னைக் கேள்வியோட பாக்குறாங்க! 

(ரசிப்போம்...)

தொகுப்பு: மை.பாரதிராஜா
படங்கள் உதவி: ஞானம்