அக்கட தேசங்களின் அழகு ராட்சஸிகள்!
மல்லுவுட்
மலையாளத்திலிருந்து ஒரு நித்யா மேனன், கன்னடத்திலிருந்து ஒரு ப்ரணிதா என அடிக்கடி அழகுப் புயல்கள் வந்து கோலிவுட் கரையைக் கடக்கும். லேட்டஸ்ட்டாக தமிழ் தவிர தென்னிந்திய சினிமாக்களில் யார் கொடி பறக்கிறது? ஒரு சுவாரசிய ரவுண்ட்-அப்...
தென்னிந்தியாவிற்கே இங்கிருந்துதான் ஹீரோயின்கள் ஏற்றுமதி ஆகிக்கொண்டிருக்கிறார்கள். மலையாளத்தில் ஆயிரக்கணக்கில் சம்பளம்... தமிழில் லட்சங்கள்... இந்தியில் கோடிகள். இதுதான் ரூட்! மஞ்சு வாரியர், நித்யா மேனன், பார்வதி மேனன் என தெரிந்த முகங்களே இன்றும் அங்கே கோலோச்ச, புதியவர்களுக்கான ரேஸில் முந்துகிறவர்கள் இந்த ஐந்து பேர்...
அனுபமா பரமேஸ்வரன் மல்லுவுட்டின் புன்னகை அரசி. ‘பிரேமம்’ வெளியானதும் அவடே தேசம் முழுவதும் தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார். திருச்சூரில் பிறந்தவர். ‘‘நிவின் பாலியின் ‘வடக்கன் செல்பி’ வெளியானபோது தோழிகளுடன் சேர்ந்து தியேட்டரில் விசில் அடித்துப் பார்த்தேன். ஆனால், அவரது அடுத்த படத்தின் ஜோடி நான்தான் என்பதை இப்போதும் நம்பவே முடியவில்லை’’ என சிலிர்க்கிறது பொண்ணு.
சாய்பல்லவி
முதல்முறையாக தமிழகத்தைச் சேர்ந்தவர் கேரள மக்களின் மனதைக் கொள்ளையடித்திருக்கிறார். கோத்தகிரியில் பிறந்து கோவையில் வளர்ந்தவர் பல்லவி. ‘பிரேமம்’ படத்தில் கல்லூரி பேராசிரியை கேரக்டரில் நடித்த கட்டழகுப் பொண்ணு. டி.வி நிகழ்ச்சி ஒன்றில் சாய் பல்லவியைப் பார்த்த ‘நேரம்’ இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், ‘பிரேம’த்திற்காக இவரை அழைத்துச் சென்றிருக்கிறார். ஜார்ஜியாவில் மருத்துவம் படிக்கும் பல்லவிக்கு இதய நிபுணர் ஆகவே விருப்பமாம்.
ஜுவல் மேரி
டி.வி தொகுப்பாளினியாக இருந்து நடிகையானவர். மலையாள இயக்குநர் கமலின் கண்டுபிடிப்பு. மம்முட்டியின் அடுத்தடுத்த படங்களில் இடம்பிடித்து, மம்முட்டி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார் இந்த மேரி.
ரக்ஷனா நாராயண்குட்டி
ஜெயராம் நடித்த ‘தீர்த்த தண்டம்’ படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான ரக்ஷனாவின் பூர்வீகம், நமக்கு நயன்தாராவைத் தந்த திருச்சூர். திலீப்புடன் ‘லைஃப் ஆஃப் ஜொஸ்டி’ நடித்த பிறகு மலையாளத்தில் மளமளவென மேலே வந்திருக்கும் ரக்ஷனா, இப்போது ஹிட் ஹீரோயினாகிவிட்டார்.
சாந்தினி தரன்
சாந்தினிக்கு தமிழ்நாட்டில் இன்னொரு பெயர் இருக்கிறது, மிருதுளா. சசி இயக்கத்தில் ‘555’ படத்தில் நடித்தவர். ‘கே.எல்.10’ சாந்தினிக்கு மல்லுவுட்டில் அழகான பாதை அமைத்துக் கொடுத்த படம். அப்புறம் முக்கியமான விஷயம்... தெலுங்கில் மிருதுளாவை ரெஹேனா என அழைக்கிறார்கள்.
சாண்டல்வுட்
கன்னட தேசத்து சீனியர் ஹீரோயின்களில் அதிக சம்பளம் வாங்குவது நம்ம ‘குத்து’ ரம்யாதான். த்ரிஷா, பாவனா, ஹரிப்ரியா, ரம்யா நம்பீசன், பாமா, பிரியாமணி ஆகியோர் கன்னடம் தவிர பிற மொழிகளிலும் தலை காட்டுபவர்கள். இவர்கள் தவிரவும் சாண்டல்வுட்டில் ஏகப்பட்ட சந்தனங்கள் மணக்கின்றன...
பாருல் யாதவ்: மும்பையில் மாடலாக தன் கேரியரைத் தொடங்கிய பாருல், இந்தியில் அறிமுகமானார். தனுஷின் ஆரம்ப கால படமான ‘ட்ரீம்ஸி’ல் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்தவர் இவர். கன்னடத்தில் 2011ல் வெளியான ‘கோவிந்தாய நமஹ’ பாருல் புகழ் பரப்ப, இன்று வரை கன்னட ரசிகர்கள்தான் தன் டார்கெட் எனப் புரிந்து வைத்திருக்கிறார் பாருல்.
ரஸிதா ராம்: கன்னட டி.வி. சீரியல்கள், விளம்பரப் படங்களின் மூலம் பெரிய திரைக்கு வந்த பொண்ணு. முதல் கன்னடப் படமான ‘புல்புல்’ ஹீரோயின் ஆடிஷனுக்கு 200 பேர் வந்திருந்தார்களாம். அவ்வளவு டஃப் காம்பெடிஷனிலிருந்து செலக்ட் ஆனதை இன்னும் பெருமையாக நினைக்கிறார்.
ஊர்வசி ரௌடிலா: ‘மிஸ் டூரிஸம் குயின்’, ‘மிஸ் ஏஷியன் சூப்பர்மாடல்’ எனப் பல அழகிப் பட்டங்களை வென்று அப்ளாஸ் அள்ளியவர். இவருக்கு ‘மிஸ்டர் ஐராவதா’ அட்டகாசமாக க்ளிக் ஆனது. இடையில் இந்தி, பஞ்சாபி என ரவுண்ட் அப் ஆகிறது பொண்ணு!
அமுல்யா: பெயருக்கேத்த மாதிரி பளபள பப்பாளி. பூர்வீகமே பெங்களூருதான். குழந்தை நட்சத்திர மாக அறிமுகமான அமுல்யாவிற்கு ‘கஜகேசரி’ கொடுத்த டர்னிங் பாயின்ட்டால் தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்கிறது பொண்ணு.
க்ரிதி ஹர்பண்டா: 2009ல் தெலுங்கில் அறிமுகம், 2010ல் கன்னடத்தில் அறிமுகம் என தொடங்கிய க்ரிதி, இரண்டு மொழிகளிலும் பிஸி பொண்ணு. இப்போது தமிழில் ஜி.வி.பிரகாஷுடன் ‘புரூஸ் லீ’ படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். டெல்லியில் பிறந்த பஞ்சாபி பொண்ணு. ஆனால் பெங்களூருவில் குடும்பம் செட்டில் ஆகிவிட, கன்னடத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார் க்ரிதி.
டோலிவுட்
இன்று தெலுங்கில் டாப் மோஸ்ட்டில் இருக்கும் ஸ்ருதிஹாசன், அனுஷ்கா, தமன்னா, ரகுல்ப்ரீத் சிங், சமந்தா, காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா வரை எல்லோருமே தமிழில் இருந்து தப்பிப் போனவர்களே. தமிழில் கண்டுக்காமல் விட்டவர்களுக்கு தெலுங்கில் ரெட் கார்பெட் ஹிட்கள் குவிய, மறுபடியும் அவர்களை நாம் கெஞ்சி இங்கே அழைத்து வந்தது தனி டாபிக்! இப்போது டோலிவுட்டில் ஏறுமுகத்தில் இருக்கும் 5 முகங்கள்...
ராஷி கண்ணா: நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கவும், நன்றாகப் பேசவும் தெரிந்த நடிகை என்கிறார்கள் இவரை. மாடலிங் உலகிலிருந்து சினிமாவுக்குத் தாவிய டெல்லி பொண்ணு. ‘மனம்’ படத்தில் ஒரு சின்ன ரோலில் வந்து பெயர் வாங்கினார். அடுத்தடுத்து ‘ஜில்’, ‘டைகர்’ என சுமாராக ஓடிய படங்களில் நடித்தார் என்றாலும், இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் இளம் நடிகைகள் பட்டியலில் இருப்பதால், 50 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கும் ரேஞ்சுக்கு வந்திருக்கிறார்.
ரகுல் ப்ரீத் சிங்: மாடலிங்கிலிருந்து சினிமாவிற்கு வந்த பஞ்சாபி பொண்ணு. பூர்வீகம் டெல்லி. கன்னடத்தில் அறிமுகமான ரகுல், அதன் பிறகு தெலுங்கிலும் சரியான பிரேக் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருந்தார். ‘வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்’ சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து கைகொடுத்தது. ‘கிக் 2’, ராம்சரணுடன் நடித்த ‘புரூஸ்லீ 2’ படங்களுக்குப் பின், இளம் ஹீரோயின்களில் ரேஸில் முன்னிலை... இந்தக் கொழுந்து இலை!
தெலுங்கின் ராசியான பொண்ணு. உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் பிறந்த பொண்ணு. அப்பா வக்கீல், அம்மா டீச்சர் என படித்த ஃபேமிலி. இந்தி டி.வி சீரியல் மூலம் அறிமுகமான லாவண்யா, தெலுங்கில் அறிமுமான படம், ‘அந்தலா ரக்ஷாஷி’. ஒரே படத்தின் மூலம் இன்று வரை தெலுங்கு ரசிகர்களின் மனதில் பச்சக்கென ஒட்டிக்கொண்டது இந்தப் பச்சைக் கிளி.
நந்திதா ராஜ்: தெலுங்கின் அழகான கதாநாயகிகள் லிஸ்ட்டில் நந்திதாவுக்கு தனி இடம் உண்டு. நம்மூர் திவ்யா மாதிரி அங்கே நந்திதா. மும்பை மாடலிங் பொண்ணு. அப்பா ஆர்மி ஆபீஸர். ‘பிரேம கதா சித்திரம்’, ‘ராம்லீலா’, ‘கிருஷ்ணம்மா கலிபிண்டி இடரின்னி’ போன்றவை நந்திதாவிற்கு பெயர் வாங்கிக் கொடுத்த படங்கள். மலையாளத்தில் ‘லண்டன் பிரிட்ஜ்’ நடித்து, கடவுளின் சொந்த தேசத்திலும் இடம் பிடித்திருக்கிறார்.
சோனல் சௌகான்: 2005ம் ஆண்டில் ‘மிஸ் வேர்ல்டு டூரிஸம்’ பட்டம் வென்ற பொண்ணு. இவரும் டெல்லிவாலாதான். தெரிந்தோ தெரியாமலோ, சோனல் தேர்ந்தெடுப்பதெல்லாம் டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட்ஸ். ‘பன்டகா செஸ்கோ’வில் ரகுலுடன் நடித்திருந்தார். இப்போது ‘சைஸ் ஜீரோ’வில் அனுஷ்காவுடன். இது தமிழில் ‘இஞ்சி இடுப்பழகி’யாக வருவதால், தமிழுக்கும் ரூட் போட்டிருக்கிறது பொண்ணு!
|