உதவி இயக்குனர்கள் C/O காவேரி டீ ஸ்டால்



சென்னை, சாலிகிராமத்தில் பிரசாத் ஸ்டூடியோவுக்கு எதிரில் இருக்கிறது காவேரி கார்னர் டீக்கடை. சினிமாவை தங்கள் ஜீவனில் சுமந்து திரியும் உதவி இயக்குனர்களின் வேடந்தாங்கல் இந்த டீக்கடைதான். சுருள் சுருளாக காற்றை நிரப்பும் சிகரெட் புகையினூடே, நாளைய சினிமாவுக்கான கதைகளும், விசாரணைகளும், விவரிப்புகளுமாக எப்போதும் பரபரப்பில் ஆழ்ந்திருக்கிறது இந்தக் கடை.

‘‘சினிமா கனவுல ஊர்ல இருந்து வந்து புதுசா வாய்ப்பு தேடுறவங்கள்ல இருந்து, பல காலம் உதவி இயக்குனரா வேலை செஞ்சு புரொடியூசர் தேடிக்கிட்டு இருக்கவங்க வரைக்கும் எல்லாருக்கும் அலுவலகம் இந்த டீக்கடைதான். காலை 7 மணியில இருந்து நைட்டு 8 மணி வரைக்கும் சினிமா, சினிமா, சினிமாதான்.

ஒருத்தருக்கொருத்தர் தகவல்களை பரிமாறிக்கிறது, உதவிகள் செஞ்சுக்கிறது, ஒன்லைன் சொல்லி கதையா விரிவுபடுத்துறது, ஷூட்டிங் இல்லாத நாட்கள்ல கேட்டரிங் மாதிரி வேலைகளுக்குப் போறதுன்னு எல்லாம் இந்த டீக்கடையிலதான்.

இன்னைக்கு இயக்குனர்களா முதல் வரிசையில இருக்கிற பலபேர் இந்த டீக்கடையில கதை பேசினவங்கதான்...’’ - ஸ்டிராங் டீயை உறிஞ்சியபடி சொல்கிறார் கார்த்திக். மயிலாடுதுறையைச் சேர்ந்த இவர் எம்.காம்., பி.எட் பட்டதாரி. கிடைத்த பணிகள் அனைத்தையும் உதறி விட்டு, சினிமா கனவில் சென்னைக்கு பஸ் ஏறியவர். இரண்டு இயக்குனர்களிடம் உதவியாளராகப் பணியாற்றிவிட்டு புரொடியூசர் தேடிக் கொண்டிருக்கிறார்.

காவேரி டீக்கடையின் உரிமையாளர் அலி கேரளாக்காரர். முதலில் ஏ.வி.எம். ஸ்டூடியோ எதிரில் கடை நடத்தியவர், 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கடையை ஆரம்பித்திருக்கிறார். வெங்கட்பிரபு, பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், மிஷ்கின் என பல இயக்குனர்கள் இந்தக் கடையின் வாடிக்கையாளர்கள். இன்றைக்கும் இந்தப் பக்கம் ஷூட்டிங் நடந்தால் தவறாமல் வருகிறார்கள்.

‘‘கடைக்கு வர்ற எல்லாருமே சினிமா தொடர்பான ஆட்கள்தான். பெரும்பாலும் உதவி இயக்குனர்கள், சைடு ஆக்டர்கள், ஃபைட் மாஸ்டர்களும் வருவாங்க. பிரசாத் ஸ்டூடியோவில ஷூட்டிங் நடந்தா இயக்குனர்களும் வந்திடுவாங்க. நாசர், கருணாஸ், சூரி, கஞ்சா கருப்பு சாரெல்லாம் கூட இந்தப் பக்கம் வந்தா டீ சாப்பிடுறதுண்டு. பத்து வருஷம் முன்னாடி எங்க கடைதான் பிக்கப் பாயின்ட். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போறதுக்கு உதவி இயக்குனர்களை வீடு வீடா போய் பிக்கப் பண்ண முடியாது. ‘காவேரி கார்னர் டீக்கடைக்கு வந்திடுங்க’ன்னு சொல்லி இங்கேயிருந்து பிக்கப் பண்ணிக்குவாங்க.

இன்னைக்கு பெரும்பாலான உதவி இயக்குனர்கள் பைக் வச்சிருக்காங்க. நேரா ஸ்பாட்டுக்குப் போயிடுறாங்க. பின்புலம் இல்லாம சினிமா ஆசையில சென்னைக்கு வர்றவங்க நேரா நம்ம கடைக்குத்தான் வருவாங்க. இங்கே வர்ற உதவி இயக்குனர்கள்கிட்ட நட்பை ஏற்படுத்திக்கிட்டு வாய்ப்பு தேடுவாங்க’’ என்கிறார் கடை கல்லாவில் இருக்கிற ஹனிபா.

‘‘ஒரு இஞ்சி, ஒரு பால், ஒரு ஸ்ட்ராங்’’ என்றபடி உற்சாகமாக உள்ளே நுழைகிற சின்னமருது, பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். திண்டுக்கல் சானார்பட்டியைச் சேர்ந்த இவரை குடும்பம் புறக்கணிக்க, சென்னை வாரியணைத்துக் கொண்டிருக்கிறது.

‘‘திண்டுக்கல்ல இருந்தவரைக்கும் ‘உயரம் கம்மியாப் பெறந்தது முன்ஜென்மத்துப் பாவம்’னு நினைச்சேன். சென்னை வந்தப்புறம்தான் ‘அது வரம்’னு புரிஞ்சுக்கிட்டேன். அதுதான் இன்னைக்கு எனக்கு சினிமாவுல வாய்ப்பை வாங்கிக் கொடுத்திருக்கு. அம்மா இருந்தவரை என்னை நல்லாப் பாத்துக்கிட்டாங்க. அவங்க இறந்தபிறகு நம்மளை கவனிக்க ஆளில்லை. நல்லா டான்ஸ் ஆடுவேன். காமெடி பண்ணுவேன். ஸ்டேஜ் புரோக்ராமுக்குப் போனேன். ‘நீயெல்லாம் சென்னைக்குப் போனா பெரிய ஸ்டாராயிடுவே’ன்னு கூட இருந்தவங்க கொளுத்திப் போட... கிளம்பி வந்துட்டேன்.

ஆனா இங்கே நினைச்சபடி எதுவும் நடக்கலே. சாப்பாட்டுக்கே சிரமமா போச்சு. காவேரி கடை டீயும் பன்னும்தான் மூணு வேளையும். பலூன் வியாபாரம் செஞ்சுக்கிட்டே சினிமாவில வாய்ப்பு தேடுனேன். பாரதிராஜா சாருக்கு டிரைவரா இருக்கிறவரோட நட்பு இந்தக் கடையிலதான் கிடைச்சுச்சு.

அவருதான் சார்கிட்டே என்னைக் கூட்டிக்கிட்டுப் போய் அறிமுகப்படுத்தினார். சீரியல், ‘அன்னக்கொடி’ படம்னு நிறைய வாய்ப்புகள் கொடுத்து புள்ளை மாதிரி பாத்துக்கிட்டார் சார். இப்போ நிறைய படங்கள் பண்றேன். தினமும் ஒரு வாட்டியாவது காவேரி டீக்கடைக்கு வந்து ஒரு டீ அடிச்சுட்டு, ஃப்ரண்ட்ஸை எல்லாம் பாத்து ஹாய் சொல்லிட்டுப் போயிருவேன். இந்தக் கடையோட நமக்கு அப்படியொரு பந்தம்’’ என்கிறார் ‘சின்ன’மருது.

சின்னமருதுவையும் (குப்பு)சாமியையும் இணைத்தது காவேரி டீக்கடைதான். சின்னமருதுவை மரியாதையாக ‘அண்ணா’ என்றுதான் அழைக்கிறார் சாமி. ‘‘நமக்கு கொருக்குப்பேட்டை... சினிமா ஆசையில இந்தப் பக்கம் வந்துட்டேன். அண்ணா மாதிரி நண்பர்கள் உதவியில நமக்கு சில படங்கள் கிடைச்சிருக்கு. சீக்கிரமே தனி ஃபைட்டரா ஆகணும். நிறைய இயக்குனர்கள் இங்கே வர்றதால நம்ம தலையைக் காமிச்சு வைக்கலாமேன்னு தினமும் இந்தப் பக்கம் வருவேன்...’’ என்கிறார் சாமி.
 
‘‘கடந்த பத்து வருடங்களோட ஒப்பிடும்போது சினிமாவோட நிலை ரொம்பவே மாறிடுச்சு. இன்னைக்கு விஷுவல் கம்யூனிகேஷன் முடிச்சுட்டு ரெண்டு குறும்படங்கள் தயார் பண்ணி எடுத்துக்குட்டு இயக்குனர்களைப் பாக்குறாங்க. உடனடியா வாய்ப்புக் கிடைக்குது. அடுத்த ஒரு வருஷத்தில ஒரு புரொடியூசர் கிடைச்சிடுறார்.

அடுத்த ரெண்டு வருஷத்தில படம் வந்திடுது. ஆனா, மணிரத்னம், பாலசந்தர், பாரதிராஜாகிட்ட உதவி இயக்குனர்களா இருந்தவங்க பல பேர் இன்னமும் வாய்ப்பு தேடிக்கிட்டு இருக்காங்க. பலருக்கு இன்னமும் கல்யாணம் கூட ஆகலே. ஜெயிச்சபிறகுதான் கல்யா ணம்னு சொல்லிச் சொல்லியே பருவத்தைத் தொலைச்சுட்டாங்க. எந்த உதவி இயக்குனரும் மூணு வேளை சாப்பிட முடியாது. ஒரு வேளை சாப்பாடு, ரெண்டு வேளை டீ...

மற்றபடி நம்பிக்கையைத் தின்னுதான் வாழ்க்கையை ஓட்டுறாங்க. தினமும் இந்த டீக்கடைக்கு வருவாங்க. கதைகளை விவாதிப்பாங்க. யாராவது இயக்குனர்கள், உதவியாளர்கள் தேவைன்னு சொன்னதைக் கேள்விப்பட்டா போய் பாப்பாங்க. எதுவுமே இல்லேன்னா கேட்டரிங், செட் வேலைன்னு கிடைக்கிறதைப் பாக்க கிளம்பிடுவாங்க. திரும்பவும் சாயங்காலம் இந்தக் கடையில மீட்டிங்... என்னைக்காவது ஒரு புரொடியூசர் கிடைச்சிடுவாருங்கிற நம்பிக்கையில வாழ்க்கை ஓடுது...’’ என்கிறார் சத்தியசீலன்.

சத்தியசீலன் உதவி இயக்குனரான சில மாதங்களிலேயே ஒரு புரொடியூசர் கிடைத்துவிட்டார். படம் முடிந்து சென்சார் ஆகிவிட்ட நிலையில் இருவருக்கும் மனஸ்தாபம். புரொடியூசர் படத்தை ரிலீஸ் செய்யவில்லை. கதையும், நம்பிக்கையுமாக தேடல் தொடர்கிறது.

‘‘பிரசாத் லேப் வாசல்ல இருக்கிற மணி டீக்கடைக்கு (மணி டீக்கடை இப்போது வேறிடத்துக்கு மாறிவிட்டது. இப்போது வேறு டீக்கடை வந்தாலும் சினிமாக்காரர்களைப் பொறுத்தவரை அது மணி டீக்கடைதான்) நிறைய ஆர்ட்டிஸ்ட்ஸ், புரொடியூசரெல்லாம் டீ குடிக்க வருவாங்க. நடிக்கிற ஆசையோட வர்றவங்களுக்கு அந்த டீக்கடைதான் அட்ரஸ்.

அதேமாதிரி ஏ-1 டீஸ்டால்... அங்கேயும் நிறைய இயக்குனர்கள் வர்றதுண்டு. பரணி ஸ்டூடியோ வாசல்ல ஒரு டீக்கடை இருக்கு. எல்லா டீக்கடைகளையும் நாங்க ஒரு ரவுண்ட் அடிச்சிருவோம். மணி டீக்கடைக்குப் பக்கத்துல ஒரு ஜெராக்ஸ் கடை இருக்கு. ஏதாவது ஒரு கம்பெனியில வாய்ப்பு இருக்குன்னு ஒருத்தருக்குத் தெரிஞ்சா, அந்த முழு விபரத்தையும் எழுதி ஜெராக்ஸ் கடையில கொடுத்திருவார். அந்த ஜெராக்ஸ் கடைக்காரங்க, வாய்ப்புத் தேடி வர்ற எல்லாருக்கும் அந்த பிரதியைக் கொடுத்திருவாங்க. மத்தவங்களும் அந்த கம்பெனிக்குப் போய் முயற்சி பண்ணுவாங்க. இந்த மாதிரி நட்பாலயும் அன்பாலயும்தான் எங்க நம்பிக்கை இன்னும் சாகாம இருக்கு...’’ என்கிறார் சத்தியசீலன்.

‘‘காலம் மாறிப்போச்சு. இன்னைக்கு சினிமாவுக்கு வர்ற புது உதவி இயக்குனர்கள் காவேரிக்கு வர்றதில்லை... காபி ஷாப்  போறாங்க. எல்லாரும் பைக், டேப்லெட்னு அப்டேட்டா இருக்காங்க. முன்னல்லாம் வாய்ப்புத் தேடி போறபோது இயக்குனர்கள் ‘தமிழ் நல்லா எழுதத் தெரியுமா’ன்னு கேப்பாங்க. இப்போ, இங்கிலீஷ் தெரியுமா, மராத்தி தெரியுமா, நல்லா டைப் பண்ணுவியான்னு கேக்குறாங்க.

அஞ்சாறு வருஷமா நானும் காவேரி டீக்கடைக்கு வந்து போறேன். இங்கே வேலை பாத்த நிறைய பேர் மாறிப் போயி புது ஆட்கள் வந்துட்டாங்க. ஆனா, நாங்களோ, எங்க வாழ்க்கையோ, நம்பிக்கையோ இன்னும் மாறலே... கண்டிப்பா இதே காவேரி டீக்கடைக்கு ஒரு இயக்குனரா வருவோம்...’’  என்கிற கார்த்திக், ‘‘மணி ரெண்டாயிருச்சு... பசியெடுக்குது! வாங்க சார், இன்னொரு டீ சாப்பிடுவோம்...’’ என்று உரிமையாக கைபிடித்து நம்மை அழைத்துச் செல்கிறார்.

முன்னல்லாம் வாய்ப்புத் தேடி போறபோது  இயக்குனர்கள் ‘தமிழ் நல்லா எழுதத் தெரியுமா’ன்னு கேப்பாங்க. இப்போ,  இங்கிலீஷ் தெரியுமா, மராத்தி தெரியுமா, நல்லா டைப்பண்ணுவியான்னு  கேக்குறாங்க.

- வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்