கைம்மண் அளவு



காஞ்சனை’ என்று புதுமைப்பித்தனின் சிறுகதை ஒன்று. 1943ல் ‘கலைமகள்’ இதழில் வெளியான பேய்க்கதை. மிகச் சிறந்த சிறுகதைகளில் அதுவும் ஒன்று. அந்தக் கதையை வாசித்துவிட்டு அவரிடம் கேட்டார்களாம், ‘‘பேய், பிசாசு, பூதங்களில் எல்லாம் நம்பிக்கை உண்டா?’’ என்று. அவர் சொன்னாராம், ‘‘நம்பிக்கை இல்லை... ஆனால் பயமாக இருக்கிறதே!’’

பேய் என்றால் எல்லோருக்குமே ஆர்வம், அச்சம், திகில், ஏளனம் கலந்ததோர் உணர்ச்சி. எனக்கும் சில பேய் அனுபவங்கள் உண்டு. முப்பத்தைந்து ஆண்டுகளாய் ராப் பகல் பாராமல் தேசம் முழுக்கச் சுற்றுகிறவனுக்கு பேய் எதிர்ப்படாது இருக்குமா பின்னே? ஆனால், எனது அனுபவங்களை இங்கே சொல்லப் போவதில்லை.

‘பேய் என்பதெல்லாம் மூடர்களின் நம்பிக்கை’ என்று திராவிட இயக்கம் நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது. அதுவே ‘கடவுளை நம்புகிறவன் முட்டாள்’ என்றும் சொல்கிறது. சாமிக்கே இப்பாடு என்றால் பேய்க்கு எப்பாடு? ஆனால், கொடுமையான பேயே பிச்சை வாங்கும் அளவுக்கு கொடுமைக்காரர்களாக, தன்மானமுள்ள மனிதர்கள் மாறிப் போனதுதான் வருத்தமளிக்கிறது.

பேய் பற்றி நீண்ட ஆய்வுகளை பல மேலை நாடுகள் நடத்தியுள்ளன. சிலப்பதிகாரம் சதுக்கப் பூதம் பற்றிப் பேசுகிறது. சந்திகளில் நின்று கொண்டிருக்கும் பூதம் அது. தீயவர்களைக் கண்டால் உடனே எடுத்து விழுங்கிப் பசியாறுமாம். எப்போதும் பசியுடனேயே இருந்திருக்கும் போல. அந்த அளவுக்கு அன்று சமூகத்தில் தீயவர் நடமாட்டம் மிகக் குறைவாகவே இருந்திருக்கும்.

இன்றானால் சதுக்கப் பூதத்துக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டிருக்கும். மேலும் நகருக்கு ஒரு சதுக்கத்துக்கு ஒரு பூதம் என்பதும் பத்தவே பத்தாது. டாஸ்மாக் கடைகளைப் போல சதுக்கப் பூதங்கள் நிறுத்தப்பட வேண்டியதிருக்கும். அன்றியும், ‘தீயவர் என்பவர் யார்’ என்றும் பூதத்திற்குப் புதிய விளக்கம் சொல்லித் தர வேண்டும். கொலைகாரன், பொய்யர், வஞ்சகர், கொள்ளைக்காரர், ஊழல் செய்பவர், கையூட்டு வாங்குபவர் எனப் பெரிய பட்டியலாக இருக்கும். அவ்விதம் செயல்படும் சதுக்கப் பூதங்கள் நிலையம் அமைத்துக்கொள்ளும் எனில், எல்லா நகரிலும் போக்குவரத்து நெரிசல் குறையும். ரயில்களில் கூட்டம் இருக்காது, மருத்துவமனைகள் காற்று வாங்கும்.

துவரம்பருப்பு விலை, கிலோ முப்பது ரூபாய்க்கு இறங்கி விடும்!என்ன ஆய்வு நடந்தாலும், பேய் பற்றிய அச்சம் மனத்தில் இருந்து இன்னும் மாயவில்லை. கண்ணுக்குக் கண்ணாய் வளர்த்த தாத்தா செத்தபிறகு அந்த அறையில் உறங்க இருபத்திரண்டு வயதான பேரன் அஞ்சு கிறான். மேலும் பேய்ப்படங்கள் இன்றெல்லாம் எத்தனை கோடிகள் கொய்துகொண்டு போகின்றன.

‘நோய்க்கும் பாடு, பேய்க்கும் பாடு’ என்பது கிராமங்களில் வாழும் சொல் வழக்கு. ‘பேய் மாதிரி இல்லா திரியான்’, ‘பேயாப் பறக்கான் பாரு’, ‘பேய்க்குப் பொறந்த பய’, ‘பேய்க்குப் பேன் பார்த்தவ’, ‘பேய்க்காத்து அடிக்கு’, ‘பேயிலயும் பேயி பெரிய பேய்’ எனக் கணிசமான பிரயோகங்களும் உண்டு. பெண்டிர் பலரும் இன்று பேய்களுடன்தான் குடித்தனம் நடத்துகின்றனர் என்பது வேறு கதை. அங்ஙனமே தேற்றத்தை மாற்றியும் சொல்லலாம்!

உண்ணத் தகுதி இல்லாத காய்களுக்கு, பேய் என்றொரு அடைமொழியும் சேர்த்துக் கொள்கிறோம். பேய்ச் சுரைக்காய், பேய்ப் புடல், பேய்ப் பீர்க்கன், பேய்க்குமட்டி, பேய்த்துமட்டி என்றார்கள். பேய்க்கரும்பும் பேய்த்துளசியும் கூட உண்டு. தமிழில் அபூர்வமாக எழுதும் அற்புதமான எழுத்தாளர் ‘பாதசாரி’யின் கட்டுரை நூலொன்றின் தலைப்பு ‘பேய்க்கரும்பு’. பட்டினத்தடிகளின் கையில் இருக்கும் கரும்பும் பேய்க் கரும்பே என்பார்கள்.

நாட்டில்தான் எத்தனை வகையான பேய்களின் நடமாட்டம்? பணப்பேய், பதவிப்பேய், வட்டிப் பேய், வசூல் பேய், சாதிப்பேய், மதப்பேய்... பேயை நம்பாதே என்றவர்களே பேய் போல் அலைகிறார்கள். பேய் ஓட்டுவதற்கென்றே விசேடமான ஏற்பாடுகள் கொண்ட ஊர்கள் உண்டு. ஏர்வாடி, அம்பராம்பாளையம், திருவனந்தபுரத்தை அடுத்து பீமாப்பள்ளி, வெட்டுக்காட்டுப்பள்ளி எனப் பற்பல.

அந்தத் தலங்களில் மேலே சொன்ன பேய்களைத் துரத்துவதில்லை.மலையாளத்தில் ‘மணிச் சித்ர தாழ்’ என்றொரு அற்புதமான பேய்ப்படம் வந்தது. மோகன்லால், திலகன், சுரேஷ்கோபி, ஷோபனா முதலானோர் நடித்தது. சித்திக்லால், சிபிமலயில், பிரியதர்ஷன் பங்கேற்புடன் பாசில் இயக்கிய படம் என்று நினைவு. நமது தீப்பேறு, நல்ல சரக்கு தமிழுக்கு வரும் போது கலப்படமாகி விடுகிறது... அது பேய்ச் சரக்காக இருந்தாலும்!

ஊர்ப்புறங்களில் பேய்கள் வாழும் வீடுகள், மடங்கள், பாலங்கள், தோப்புகள், மரங்கள் உண்டு. சுடலைமாடன், புலைமாடன், கழுமாடன் போன்ற நாட்டார் தெய்வங்களின் கோயில்களை பேய்க்கோயில் என்றே சொன்னார்கள்.தனிப்பாடல் ஒன்று ‘பெண்புத்தி கேட்பானைப் பேய்’ என்றது. திருத்தியும் சொல்லலாம் ‘பெண் புத்தி கேளானும் பேய்’ என்று. சங்க இலக்கியம் பேய் மகள், பேய் மகளிர், பேய் எனும் சொற்களை ஆள்கிறது. அகநானூற்றில் பரணர் பாடல் ஒன்று, ‘பேயும் அறியா மறை அமை புணர்ச்சி’ பற்றிப் பேசும். ேபயும் அறியாத வண்ணம் மறைவாக வந்து தலைவியைத் தலைவன் புணர்ந்து போனான் என்ற பொருளில். அதாவது பேயும் உறங்கும் நேரத்துக் களவொழுக்கம்.

காரைக்கால் அம்மை பேய் வடிவம் எடுத்த சைவ மூதாட்டி. பதினோராம் திருமுறையில் ‘அற்புதத் திருவந்தாதி’ நூறு வெண்பாக்கள். அம்மையைக் ‘காரைக்கால் பேய்’ என்றே பேசுகிறார்கள். ‘பேயாடும் கானத்துப் பிறங்க அனல் ஏந்தித் தீயாடும்’ சிவனைக் கேட்கிறாள் காரைக்கால் அம்மை, ‘எவர் காண உன் திருநடனம்?’ என்று. ‘செப்பேந்து இளமுலையாள் காணவோ? தீப்படு காட்டு அப் பேய்க்கணம் அவைதாம் காணவோ?’ என்று கேட்கிறாள். ‘செப்புப் போன்ற இளமுலையாள் பார்வதி காணவா, அல்லது தீப்படுகின்ற காட்டில் உறையும் அப்பேய்க் கணங்கள் காணவா? எதற்கு நீ அண்டம் குலுங்க ஆடுகிறாய்’ என்று.

‘கலிங்கத்துப் பரணி’ நூலில், பேய்கள் ஆடிய ஆட்டமெல்லாம் மிகச் சுவைபடப் பாடுகிறார் ஜெயங்கொண்டார். பாரதியோ, ‘பேயவள் காண் எங்கள் அன்னை, பெரும் பித்துடையாள் எங்கள் அன்னை’ என்கிறார். கரிசல் இலக்கிய மேதை கி.ராவைக் கேட்டால் நூறு பேய்க்கதைகள் சொல்வார்.

ஒளவையார் தமிழ் மூதாட்டி... சங்க காலத்தின் ஒளவை வேறு, பிற்கால ஒளவைகள் வேறு. பிற்காலத்து ஒளவை பற்றிய கதையொன்றுண்டு.
ஒளவையைப் போலக் காடுமேடாக அலைந்த புலவர் மற்றொருவர் இல்லை. இன்றைய பல புலவர்களும் கூகுள் முன் அமர்ந்தவாறே அலைகிறார்கள். ஒளவை உப்புக்குப் பாடியவர், கூழுக்குப் பாடியவர், ஆழாக்கு உழக்குத் தினைக்கும் பாடியவர்.

எவளோ ஒரு பெண்ணரசி மாலை மயங்கும் நேரத்தில் வயிறாரக் கூழ் ஊற்றி இருக்கிறாள் ஒளவைக்கு. கண் வெளிச்சம் இருக்கும் வரை நடப்போம் என்று நடந்து, ஊருக்கு ஒதுக்குப்புறமான பாழ்மண்டபத்துப் படிப்புரையில், மேல் முந்தியால் தூசி தட்டி, கொடுங்கை தலைக்கு வைத்துப் படுத்திருக்கிறாள். அந்த மண்டபத்தில் நீண்டகால நிரந்தர டெனன்டாகப் பேய்கள் குடியிருந்தன. தம் இடத்தை ஆக்கிரமிக்க வந்திருக்கிறாள் என்றெண்ணி, பேய்கள் சில, மூதாட்டியைக் காலால் எற்ற வந்தன.

ஒளவை சொன்னாள்... ‘என்னை என்னத்துக்காச் சுட்டி எத்த வந்தே சவமே? ரெண்டு முறை சொல்லக் கேட்டும் ஒரு ெவண்பாவை மனப்பாடம் செய்யாதவன் இருப்பான்... கண் பார்க்க வெள்ளைப் பனையோலையில் எழுத்தாணி வச்சு எழுதத் தெரியாதவன் இருப்பான்... அவனை எல்லாம் பெத்துப் போட்டா பாரு, பெண் பாவி... அடுத்தவங்க சிரிக்கும்படியா, அவளைப் போயி எத்து!’‘வெண்பா இருகாலிற் கல்லானை, வெள்ளோலைகண் பார்க்கக் கையால் எழுதானைப் - பெண்பாவிபெற்றாளே பெற்றாள், பிறர் நகைக்கப் பெற்றாளேஎற்றோ மற்றெற்றோ மற்றெற்று’அதாவது, பேய்களால் எற்றப்பட வேண்டியவர்கள் எழுத்தறிவில்லாத மக்களைப் பெற்றவர்கள் என்பது ஒளவையின் துணிபு. அதை அவர், தமிழ் எழுத வாசிக்கத் தெரியாதவர்களை எற்று என்றே பாடியிருக்கலாம்.

‘பேய் உண்டா’ என்று கேட்டால் ‘எனக்குத் தெரியாது’ என்பேன். ‘இல்லையா?’ என்று கேட்டாலும் ‘எனக்குத் தெரியாது’ என்பேன். பேயை ஆவி என்றும் சொல்கிறார்கள். ‘கெட்ட ஆவி’ என்கிறது கிறிஸ்துவம். பெரும்பாலும் யாம் வாசித்த, செவிப்பட்ட பேய்கள் யாவுமே அநியாயமாகத் தம்மைக் கொலை செய்தவரைப் பழிவாங்கும் பேய்கள். அகாலமாய் அசம்பாவித மரணமுற்ற மனிதர்களின் பேய்கள். காதலனால் கெடுக்கப்பட்டுத் தற்கொலை செய்துகொண்ட பேய்கள். தண்ணீரில் தள்ளப்பட்டோ, விழுந்தோ செத்தவரின் பேய்கள். பெரும்பாலும் பேய்களில் பெண் விகிதாச்சாரமே அதிகம் போலும்!

சொத்தை அபகரிக்கும் பொருட்டோ, வன்புணர்ச்சி செய்யப்பட்டோ, வேறு காரணங்களுக்காக நீதியற்றுக் கொலை செய்யப்பட்டோ பேயாக ஆனவர் தமக்கு எதிராகக் கொடுமை இழைத்தவரைப் பழி வாங்குவதிலோ, துன்புறுத்துவதிலோ நமக்கென்ன சங்கடம்? வழிப்போக்கரை, ஒரு பாவமும் செய்யாத வரை, அப்பாவிகளைத் தொந்தரவு செய்யாத வரை பேய்கள் இருந்துவிட்டுப் போகட்டுமே! தம் கணக்கைத் தாமே சரி செய்துகொள்ளட்டுமே!

தெய்வமும் ஏனென்று கேட்பதில்லை, ஆட்சியாளர்களும் கேட்பதில்லை, அதிகாரமும் கேட்பதில்லை, நீதியும் கேட்பதில்லை எனும்போது, பேய்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்வதில் சாமான்யனுக்கு என்ன வில்லங்கம்? அந்தப் பேய்கள் உமக்கும் எமக்கும் என்ன தீங்கு செய்துவிடும்? நாம் கொலையும் வன்கொடுமையும் செய்யாதவரை நமக்கென்ன அச்சம்? சக ஜீவிகளாக அவை இருந்துவிட்டுப் போகட்டுமே!

கொலையுண்ட கண்டர்கள் தத்தம் கணக்கு வழக்குகளைப் பேயாகத் திரும்ப வந்து தீர்த்துக்கொள்வது காவல் துறையின் பணச் சுமையைக் குறைக்கும் என்றாலும் நீதித்துறையின் பணிச்சுமையையும் குறைக்கும்தானே! அழித்தொழித்தல் செய்தவர் எவராக இருந்தாலும் அவர் அழித்தொழித்தல் செய்யப்படுவார் என்பது பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்ற நீதிதானே!

தற்போதைய ஜனநாயக, சோசலிச, சமத்துவக் குடியரசு ஆட்சியில் அரசாங்கம் சுதந்திரமாக இல்லை. அதிகாரிகள் சுதந்திரமாக இல்லை. நீதி பரிபாலனம் சுதந்திரமாக இல்லை. திருத்தலங்களும் சுதந்திரமாக இல்லை. வலுவுடையவர்கள் யாவரையும் வளைத்துப் போடும் தந்திரங்கள் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். காட்டிய இடத்திலும் நீட்டிய தாளிலும் கையெழுத்து வாங்கிவிடுகிறார்கள். ஏழை, எளிய, முதிய மக்கள் இம்மண்ணில் மட்கிப் போன மனுக்களைக் கையிலேந்தி கால் நூற்றாண்டாக நடந்துகொண்டிருக்கிறார்கள்.

‘பேய் அரசு செய்தால், பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்றான் பாரதி. பேயன்றி, மெத்தப் படித்த மேதாவித் தலைவர்கள்தானே ஆட்சி செய்கிறார்கள், பிறகேன் பிணம் தின்னும் சாத்திரங்கள்? அரசியல் சட்டத் திருத்தம் ஒன்று கொணர்ந்து பேய்களுக்கும் வாக்குரிமை எனலாம்.

உண்மையில், போபாலில் விஷ வாயுக் கசிவில் இறந்துபோன மனிதர்களின் பேய்கள் நடமாடி, பொறுப்பானவர்களைக் கணக்குத் தீர்க்கலாம்!
பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது பழி தீர்க்கப்பட்ட 3000 சீக்கிய ஆண், பெண், குழந்தைகளின் பேய்கள் தம் கணக்கை நேர் செய்துகொள்ளலாம்!
கோத்ரா ரயிலில் எரித்துக் கொல்லப்பட்டவர் பேய்களும் அதற்குப் பழியாகக் கொளுத்தப்பட்ட அப்பாவிகளின் பேய்களும் ஈவிரக்கம் இன்றி ஐந்தொகை போட்டு ஆவன செய்யலாம்!

ஈழ விடுதலைப் புலிகளாலோ, இலங்கை ராணுவத்தாலோ, இந்திய அரசாங்கத்தாலோ கொல்லப்பட்ட லட்சக்கணக்கானவரின் பேய்கள் சர்வதேச அல்லது ஐக்கிய நாடுகள் சபை விசாரணைக்கு எல்லாம் காத்திருக்காமல் இப்போதே எழுந்து ஆடலாம்!

தர்மபுரியில் மூன்று பேருந்துகளோடு சேர்த்து எரித்துக் கொல்லப்பட்ட கோவை விவசாயக் கல்லூரி மாணவியரின் பேய்கள் எவரையும் வெறிதே விட மாட்டார்கள்!
பேய்களுக்கு உருவம் இல்லை என்பார்கள். பிறகெப்படி பழி தீர்க்க நடக்கும் பேய்களுக்கு காவல் துறை F.I.R. போடும்? விசாரணைக் காவலில் வைக்கும்? நீதிமன்றம் தீர்ப்பெழுதித் தீர்ப்பெழுதி எந்தச் சிறையில் கொண்டு அடைக்கும்?

வஞ்சனைப் பால் சோறு பொங்கி, வாக்காளர்களை மடிமேல் இருத்தி, உச்சி மோந்து ஊட்ட நினைக்கும் அரசியல்காரர்களிடம் நேரடியாகவோ மறைமுகமாகவோ சில பேய்கள் நியாயம் கேட்கும்.ேபய் அரசாட்சி செய்தால் ஒருக்கால் லஞ்சம் ஒழியக் கூடும். வன்புணர்வு மறையக் கூடும். கொள்ளை லாபக் குபேரர்கள் மறையக் கூடும். வாங்கும் சம்பளத்துக்கு ஊழியர்கள் வேலை பார்க்கக் கூடும்.

பதுக்கல் இருக்காது. மருத்துவமனைகள், கல்விச் சாலைகள் அறம் தலைப்பட இயங்கலாம். ஆசிரியர்கள் கற்று பாடம் நடத்துவார்கள். காபி 29 ரூபாய்க்கும் இரண்டு இட்லி 45 ரூபாய்க்கும் விற்காது. சினிமா படம் எடுக்க ஐம்பது கோடி அவசியப்படாது. முகநூலில் அவதூறு எழுதும் முகம் திரிந்த மேதைகள், முகம் காட்டி எழுதுவார்கள். அரசாங்கக் கட்டிடங்களின் ஆயுள் முந்நூறு ஆண்டுகள் ஆகும். மேலும் வாசகர்கள் இட்டு நிரப்பிக் கொள்ளலாம், தங்கள் அனுபவத்துக்கும் அறிவுக்கும் தகுந்தபடி!

ஒருவேளை கம்பராமாயணம் பால காண்டத்தில் நாட்டுப் படலத்தில் கம்பன் பாடும் கோசல நாட்டின் ஒழுக்கமும் அறமும் நம் நாட்டிலும் நடந்து வரலாம்.
‘பொற்பின் நின்றன, பொலிவு; பொய் இலா நிற்பின் நின்றன, நீதி; மாதரார் அற்பின் நின்றன, அறங்கள்; அன்னவர் கற்பின் நின்றன, கால மாரியே’ என்கிறார் கம்பர். நாட்டு மக்களின் அகத்தழகால் நிலைத்திருந்தது புறத்தழகு. அவர்களது பொய் இல்லாத தன்மையால் நீதி நிலைத்து நின்றது. அந்த நாட்டுப் பெண்களின் அன்பினால் நிலைத்து நின்றன அறங்கள். அவர்களின் கற்பினால் பருவ மழை பொய்யாமல் பெய்தது.எனவே, பேய்களுக்கு ஒரு வாய்ப்பளித்துப் பார்த்தால் என்ன?

நகருக்கு ஒரு சதுக்கத்துக்கு ஒரு பூதம்  என்பதும் பத்தவே பத்தாது. டாஸ்மாக் கடைகளைப் போல சதுக்கப் பூதங்கள்  நிறுத்தப்பட வேண்டிய
திருக்கும்.நாட்டில்தான் எத்தனை வகையான பேய்களின்  நடமாட்டம்? பணப்பேய், பதவிப்பேய், வட்டிப் பேய், வசூல் பேய், சாதிப்பேய்,  மதப்பேய்... பேயை
நம்பாதே என்றவர்களே பேய் போல் அலைகிறார்கள்.

தெய்வமும் ஏனென்று கேட்பதில்லை,  அதிகாரமும் கேட்பதில்லை, நீதியும்  கேட்பதில்லை எனும்போது, பேய்கள் சட்டத்தைக் கையில்
எடுத்துக்கொள்வதில்  சாமான்யனுக்கு என்ன வில்லங்கம்?

- கற்போம்...

நாஞ்சில் நாடன்

ஓவியம்: மருது