காதல்



‘‘என்னங்க, எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை! நம்ம பொண்ணு ராணியும், பக்கத்து வீட்டு முரளியும் நம்ம வீட்டுத் தோட்டத்துப் பக்கமா அடிக்கடி பார்த்துக்கறாங்க, பேசிக்கறாங்க, சத்தம் இல்லாம சிரிச்சிக்கறாங்க.

ரெண்டு பேருக்கும் காதலாயிருக்குமோனு எனக்கு பயமா இருக்கு. ராணியைக் கொஞ்சம் கண்டிச்சு வையுங்க!’’ - கணவன் கதிரிடம் பதற்றமாகப் பேசினாள் துர்கா.

‘‘ரொம்ப சின்ன விஷயம் இது. இனி நீ எதையுமே கண்டுக்காதே! பிரச்னை கொஞ்ச நாள்ல சரியாயிடும்’’ என்றான் சாவகாசமாய் கதிர்.துர்கா கலக்கத்தோடு கமையலறைக்குள் நுழைந்தாள்.சில நாட்கள் செல்ல, துர்கா கதிரிடம் சந்தோஷமாக வந்தாள்.

 ‘‘என்னங்க, நம்ம பொண்ணு ராணியும், பக்கத்து வீட்டுப் பையன் முரளியும் இப்பவெல்லாம் பார்த்துக்கறதில்லே, பேசிக்கறதில்லே. ரெண்டு பேரும் கீரியும் பாம்பும் போல ஆகி பிரிஞ்சிட்டாங்க போலத் தெரியுது. நீங்க சொன்ன மாதிரி பிரச்னை சுலபமா தீர்ந்துடுச்சி. எப்படிங்க இது..?’’ என்றாள் ஆச்சரியத்துடன்.

‘‘இந்தக்கால காதலர்களைப் பெத்தவங்க பிரிக்க நினைச்சா அவங்க ஒண்ணு சேரத்தான் துடிப்பாங்க. பிரச்னை பெருசா வளர்ந்துடும். அதுவே பிரிக்காம விட்டுட்டா அவங்களே கொஞ்ச நாள்ல சண்டை போட்டுப் பிரிஞ்சிடுவாங்க. பிரச்னை எளிதில் தீர்ந்துடும்!’’ என்றான் கதிர். துர்கா அவனை வியப்புடன் பார்த்தாள்!         

ஜி.ராஜா