ஜெராக்ஸ்



ஜெயபாலனின் ஜெராக்ஸ் கடை ஆரம்பித்த புதிதில் நன்றாக ஓடியது. நாட்கள் செல்லச் செல்ல கடைக்கு வரும் கஸ்டமர்கள் குறைந்தனர்.

ஒருமுறை வரும் கஸ்டமர் மீண்டும் வருவதில்லை. ‘என்ன காரணம்’ என்று பலமுறை யோசித்தும் ஒன்றும் புலப்படவில்லை. இன்றும் கவலையோடு உட்கார்ந்திருந்தபோது, அவரது நண்பர் கடைக்குள் நுழைந்தார்.

‘‘என்ன ஜெயபாலன், சாவகாசமா ஓய்வெடுக்கிறீங்களா?’’‘‘வயித்தெரிச்சலைக் கிளப்பாதீங்க சார். யார் கண் பட்டுச்சோ தெரியலை! கொஞ்ச நாளாகவே கஸ்டமர்ஸ் அதிகம் வர்றதில்லை!’’‘‘உங்க கண்தான் பட்டிருக்கு!’’‘‘என்ன சொல்றீங்க?’’‘‘

ஆமா! நான் உள்ள வந்தப்போ இங்கிருந்து போன ரெண்டு பேர் என்ன பேசிக்கிட்டுப் போனாங்க தெரியுமா? ‘ஜெராக்ஸ் எடுக்குற பேப்பரை இந்த ஆள் படிச்சிப் பார்க்கிறார்டா. இவர் ஏன் அதைப் படிக்கணும்? இனிமே இந்தக் கடைக்கு வரக்கூடாதுடா’னு பேசிக்கிட்டாங்க!’’ என்றார்.

‘‘நான் சும்மா கேஷுவலா படிப்பேன். அதுல அவங்களுக்கு என்ன நஷ்டம்?’’‘‘நஷ்டம் இல்லைதான். ஆனா, இஷ்டமும் இல்லை. சாதாரணமோ ரகசியமோ... தன்னுடைய விஷயம் அடுத்தவங்களுக்குத் தெரியிறதை யாரும் விரும்புறதில்லை. இப்ப தெரியுதா கஸ்டமர்ஸ் குறைஞ்ச காரணம்? முதல்ல உங்க பழக்கத்தை மாத்துங்க!’’தெளிவு பெற்ற ஜெயபாலன், புது மனிதராக அடுத்த கஸ்டமரை எதிர்நோக்கி நின்றார்.            

சி.ஸ்ரீரங்கம்