அறிவுரை
ஆறாம் வகுப்பு சாந்தி டீச்சர் முதல் நாளன்று மாணவ, மாணவிகளிடம் நீண்ட நேரம் பேசினாள்.‘‘இன்னிக்கு உங்களுக்கு நான் பாடம் எடுக்கப் போறதில்ல... முதல்ல உங்களுக்கெல்லாம் ஒழுக்கம் முக்கியம்.
அதைத்தான் கத்துக்கப் போறோம். முதல்ல நீங்க எல்லாரும் இனிமே காலையில ஆறு மணிக்கு கரெக்டா எழுந்திருக்கணும். இது ரொம்ப முக்கியம். நான் உங்க பேரன்ட்ஸைக் கேப்பேன்..!’’ - சாந்தி சொல்லிக்கொண்டே வர, ‘களுக்’ என்று சிரித்தாள் ரியா. சாந்தி டீச்சர் அவளைக் கோபமாகப் பார்த்தாள்... ‘‘ரியா, ஸ்டாண்ட் அப்!’’ எனக் கத்தினாள்.
ரியா எழுந்து நின்றாள். ஏதோ கேட்க நினைத்தவள்... பிறகு, எதையோ யோசித்தவளாக, ‘‘சிட் டவுன்...’’ என்று சொல்லிவிட்டாள்.அன்று மாலையே பிரின்ஸிபாலை சந்தித்தாள் சாந்தி டீச்சர். ‘‘ப்ளீஸ் மேம்... ரியாவ வேற க்ளாஸுக்கு மாத்திடுங்க!’’ - கெஞ்சும் தொனியில் கேட்டாள். காரணத்தைக் கேட்டு சிரித்துவிட்டு தலையாட்டினார் பிரின்ஸிபால்.
மறுநாள் காலை ஏழு மணி... ரியா தன் அம்மாவை உலுக்கி படுக்கையிலிருந்து எழுப்பிக்கொண்டிருந்தாள்.‘‘மம்மி... எழுந்திரு! எனக்கு பூஸ்ட் கொடு... எழுந்திரு மம்மி...’’‘‘ம், இருடி! ஒரு பத்து நிமிஷம்... தூங்கிட்டு வர்றேன்...’’ - சாந்தி டீச்சர் அரைத் தூக்கத்தில் முனகினாள்.
கீதா சீனிவாசன்
|