அம்மா



ஊரிலிருந்து வந்திருந்த அம்மாவை கவனிக்காதது போல, கையிலிருந்த தீபாவளி போனஸை மனைவி முகிலாவிடம் கொடுத்தான் அகில். அவள் அதை மறைத்துக்கொண்டாள். அவன் முகிலாவை காதல் திருமணம் செய்யும்போது, அதைக் கடுமையாக எதிர்த்தவள் அம்மாதான்.

 ஆகவே, வெறுப்பு.‘‘அகில்! நல்லா இருக்கியாப்பா?’’ என்றாள் அம்மா.‘‘ம்... ம்... இருக்கேன். இந்த மாசம் அனுப்ப வேண்டியதைத்தான் அனுப்பியாச்சே! இன்னும் என்ன?’’ என்றான். குரலில் இறுக்கம்.

கழுத்து நிறைய நகை... விலையுயர்ந்த புடவை... மனைவியை எவ்வளவு செழுமையாக வைத்திருக்கிறான் என்பது புரிந்தது.‘‘தீபாவளி வருதேனு...’’ என்ற தாயை இடைமறித்து, ‘‘தீபாவளி வருதேனு புடவை வாங்கணும், வேட்டி வாங்கணும், இனிப்பு வாங்கணும்... கடைசியா என் உசிரை வாங்கணும்... அதானே?’’

‘‘நல்ல நாளும் அதுவுமா ஏன் அபசகுனமா பேசுறே அகில்? நான் எதையும் கேட்க வரல, கொடுக்க வந்தேன்!’’ என்றவள், படிக்கட்டில் வைத்திருந்த பையை எடுத்து முகிலாவிடம் கொடுத்தாள்.

‘‘பிறந்த வீட்டை விட்டு என் மகனை நம்பி வந்துட்டே. தலை தீபாவளிக்கு உன் அம்மா வீட்டுல அழைக்காட்டி என்ன? நானும் உனக்கு அம்மாதான்! பட்டுப்புடவையைக் கட்டிக்கம்மா!’’- அம்மா சொல்ல, அகிலும் முகிலாவும் அதிர்ந்தனர். நெஞ்சில் சுட்ட மத்தாப்பு, சுடர் விட்டு தெறித்தது.              

வெ.தமிழழகன்