
பலருக்கும் சினிமா என்பது பெரிய கனவுலகமாக இருக்கிறது. என்னைப் போன்ற சராசரி மனிதர்கள் சினிமாவில் நடிப்பது சாத்தியமா? என்ன செய்ய வேண்டும்?
பதில் சொல்கிறார் இயக்குனர் சமுத்திரக்கனி நிச்சயமாக சாத்தியம்தான் நண்பரே. சினிமாவில் இப்போது வெற்றியாளராக இருப்பவர்கள் எல்லோரும் பரம்பரையாக சினிமாவில் ஊறித்திளைத்தவர்கள் அல்ல... சாதாரண மனிதர்கள்தான். சினிமாவை நாடி வருபவர்கள், பிளாட்பாரத்தில் படுத்து, சாப்பாட்டுக்கு அல்லல்பட்ட பிறகே ஜெயிக்க முடியும் என்பதெல்லாம் கடந்த காலக் கதை. இப்போது, திறமை இருப்பவர்களைத் தேடி சினிமாவே வந்து கொண்டிருக்கிறது.
சினிமாவில் நடிக்க சில அடிப்படைத் தகுதிகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது உழைப்பு. அடுத்தது தேடல். எந்தத் தருணத்திலும் நிறைவடையக்கூடாது. புதிது புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும். உழைக்க அஞ்சக்கூடாது. அடித்தளம் பலமாக இருந்தால்தான் போட்டிகளைச் சமாளித்து தாக்குப்பிடித்து நிற்க முடியும்.

சினிமாதான் வாழ்க்கை என்று முடிவு செய்து விட்டால் அதற்கான களம் சென்னைதான். முதலில், உங்கள் தேவைகளை நிறைவு செய்வதற்கான வழியைத் தேடிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் விரக்தியும் பசியும் உங்களை உங்கள் ஊருக்கே துரத்தி விடும். தொடக்கத்தில் சில அவமானங்களைச் சந்திக்க நேரலாம். சிலர் புறக்கணிக்கவும் செய்யலாம்.
அதற்கெல்லாம் துவண்டு போகாமல் தேடலை தீவிரமாக்கினால் நிச்சயம் நீங்களும் ஒரு நடிகனாக ஜொலிக்க முடியும். சமீபத்தில் மிகப்பெரும் வெற்றிகளைப் பெற்ற ‘பருத்தி வீரன்’, ‘சுப்ரமணியபுரம்’, ‘நாடோடிகள்’, ‘பசங்க’, ‘வெண்ணிலா கபடிக்குழு’ போன்ற படங்களில் பெரும்பாலானவர்கள் சினிமாவுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாதவர்கள்தான்.
இது யதார்த்த சினிமாவின் காலம். அதற்கு யதார்த்த மனிதர்கள்தான் தேவை. உங்களுக்கும் இங்கே களம் இருக்கிறது. வாழ்த்துக்கள்!