பார்த்தது



Hachiko  என்ற ஆங்கிலப்படம். ஒரு பேராசிரியர் வேலைக்குப் போய் திரும்பும்போது ரயில் நிலையத்தில் நாய்க்குட்டியைப் பார்க்கிறார். அனாதையாக நிற்கிற அதைப் பார்த்துப் பரிதாபப்பட்டு வீட்டுக்கு எடுத்து வருகிறார். உரியவர் யாரும் வராததால் ‘ஹச்சிகோ’ என்று பெயரிட்டு அவரே வளர்க்கிறார்.

நாய்க்குட்டி வளர்ந்து பெரிதாகிறது. தினமும் அவர் வேலை முடிந்து வரும் நேரத்துக்கு ரயில் நிலையத்துக்கு வந்து காத்திருக்கும். இருவரும் சேர்ந்து வீடு திரும்புவார்கள். ஒரு நாள் பேராசிரியர் கல்லூரியிலேயே இறந்துவிடுகிறார். இதை அறியாத நாய் இரவு வரை ரயில் நிலையத்திலேயே காத்திருக்கிறது. பேராசிரியரின் மனைவி வேறு ஊருக்குக் கிளம்புகிறாள். என்றாலும் ஹச்சிகோ அங்கேயே இருக்கிறது.

தினமும் ரயில் நிலையத்துக்கு வந்து பேராசிரியர் வருவாரெனக் காத்திருக்கிறது. நாள் தவறாமல் 9 வருடங்கள் தினமும் வந்து காத்திருந்து இறந்தும் போகிறது. ஜப்பானில் நடந்த, மனதை நெகிழ்த்தும் இந்த உண்மைக்கதையை நினைவுபடுத்தும் விதமாக, அந்த ரயில் நிலையத்தில் ஹச்சிகோவுக்கு வெண்கலச்சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

படம் பார்த்து வெகுநேரம் ஆகியும் ஹச்சிகோவின் நினைவிலிருந்து மீள முடியவில்லை. எங்கள் வீட்டில் வளர்ந்த டைகரின் நினைவில் என் கண்கள் வழிந்துகொண்டே இருந்தன.

- ஒளிப்பதிவாளர் செழியன்