பாதித்தது



சிறுவன் ஆதித்யா கொலைச்சம்பவம் என்னை கடுமையாகப் பாதித்தது. காதலன் மீதிருந்த ஆத்திரத்தில் ஒரு பாவமும் அறியாத அவரது மகனை கொலை செய்த பூவரசியை எந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பது?

பெண்களை தியாகிகள் என்று போற்றி, அடக்கியாளும் அடிமைத்தனத்துக்கு எதிராக பல வழிகளிலும் கிளர்ந்தெழுந்து உரிமைப் போராட்டம் நடத்திவரும் இக்காலகட்டத்தில், பூவரசி போன்ற பெண்களின் செயல்பாடுகள் மோசமான பார்வையையும் விளைவுகளையும்தான் ஏற்படுத்தும்.

அண்மைக்காலமாக வருகிற செய்திகளைப் பார்க்கிறபோது, ‘நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்’ என்ற பெரிய கேள்வி எனக்குள் ஊடுருவிக்கொண்டே இருக்கிறது. நாளிதழ்கள் தோறும் தவறான உறவுகள் பற்றிய செய்திகள் நிறைய வருகின்றன. கடந்த வாரம்கூட, ஒரு பெண் தவறான உறவில் பிறந்த குழந்தையைக் கொலை செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்ததாக செய்தி.

கனிவும் தாய்மையும் பெண்மையின் ஆக்கபூர்வமான அடையாளங்கள். பூவரசி போன்ற பெண்களால் எப்படி இந்த அளவுக்கு கொடூரமாக நடந்து கொள்ள முடிகிறது?  

- வழக்கறிஞர் சாந்தகுமாரி