குட்டிச்சுவர் சிந்தனைகள்



‘மான் கராத்தே’ படத்திலே சிவகார்த்திகேயனுக்கு ஹேர் ஸ்டைல் செலக்ட் செய்ததும் அண்ணன்தான். ‘மீகாமன்’ படத்திலே ஹன்சிகாவிற்கு காஸ்டியூம் செலக்ட் செஞ்சு கொடுத்ததும் அண்ணன்தான். வெளிநாடு டூர் போகும்போது பிரதமர் மோடிக்கு குர்தா செலக்ட் பண்ணித் தருவதும் அண்ணன்தான்.

ஜவுளிக்கடையில் குழம்பி இருக்கும் குமரிகளுக்கு எல்லாம் புடவையை தேர்ந்தெடுக்க சொல்லித் தருவதும் அண்ணன்தான். ‘சின்னக்கவுண்டர்’ விஜயகாந்துக்கு பம்பரம் எடுத்துக் கொடுத்ததும், ‘ஜெய்ஹிந்த்’ அர்ஜுனுக்கு ஏகே 47 தேர்ந்தெடுத்துக் கொடுத்ததும் அண்ணன்தான். ‘படையப்பா’ ரஜினிகாந்துக்கு பிரவுன் சால்வை தேர்ந்தெடுத்துக் கொடுத்ததும் அண்ணன்தான்.

‘அபூர்வ சகோதர்களில்’ குட்டை கமலுக்கு கெட்டப் தேர்ந்தெடுத்ததும் அண்ணன்தான். ‘ஆரம்பம்’ படத்தில் அஜித் ஓட்ட பைக் தேர்ந்தெடுத்ததும் அண்ணன்தான். ‘போக்கிரி’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக அசின்தான் இருக்க வேண்டுமென முடிவெடுத்ததும் அண்ணன்தான். ‘காக்கா முட்டை’ படத்தில் பீட்சாவுக்கு பதிலா ஆயா சுட்ட தோசையே பரவாயில்லை என முடிவு சொன்னதும் அண்ணன்தான்.

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் குமார் - குமுதா பஞ்சாயத்துக்கு அண்ணாச்சியைத் தேர்ந்தெடுத்து அனுப்பி விட்டதும் அண்ணன்தான். ஜூலை மாசம் ‘வாலு’ படம் ரிலீஸாகணும்னு தேதியைத் தேர்ந்தெடுத்ததும் அண்ணன்தான். குழந்தைகள் விளையாடும் ஆங்கிரி பேர்டில், அந்தப் பறவை சத்தத்தை முடிவு செய்ததும் அண்ணன்தான்.

‘எலி’ படத்துக்கு சதாவே சரி, ‘புலி’ படத்துக்கு தேவிதான் சரியென தேர்ந்தெடுத்ததும் அண்ணன்தான். நம்பினால் நம்புங்கள், அமெரிக்க அதிபராய் ஒபாமாவைத் தேர்ந்தெடுத்தது கூட நம்ம அண்ணன்தான்.செய்தி: எம்.ஜி.ஆருக்கு நான்தான் இரட்டை இல்லை சின்னத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தேன்!

கனவுகள் சூழ்ந்த இரவொன்றில், ஆழ்ந்த தூக்கத்தில் அவர்கள் அறியாமல் குழந்தை நம்மை கட்டிக்கொள்ளும் தருணம்... கோயிலில் சாமி தரிசனம் பார்க்கத் தடுமாறும் வேளையில், நம் முன்னால் நிற்பவர் நாம் காண நகர்ந்துகொள்ளும் நேரம்... செய்த சிறிய உதவிக்கு பெரிய வார்த்தைகளில் முதியவர்கள் பாராட்டிவிட்டுப் போகும் சமயம்... நாமிருப்பது தெரியாமல் நம்மை அப்பா புகழ்ந்து பேசுவதைக் கேட்க நேரும் தருணம்...

பிடித்த பெண்ணிடம் என்ன பேசலாம் எனத் தயங்கும்போது, அவளே வந்து பேச்சை ஆரம்பிக்கும் கணம்... திடீர் பயணத்தில் ஜன்னலோர இருக்கை கிடைக்கும் வாய்ப்பு... எதிர்பாராமல் கிடைக்கும் ஏதோ ஒரு குழந்தையின் முத்தம்... மழையில் நனைந்து பார்க்கும் வயதிலிருந்து மழையை நினைத்துப் பார்க்கும் வயதுக்கு வந்த பின்னாலான ஒரு நாளில் டூவீலர் பயணத்தில் நனைய நேரும் சந்தர்ப்பம்...

கோயிலில் கை நீட்டும்போது  கடைசி கரண்டி சுண்டல் கிடைக்கும் வாய்ப்பு... குடும்பத்துடன் நேரம் செலவிட நினைக்கையில் கிடைக்கும் எதிர்பாராத விடுமுறை... புராஜெக்ட் செய்து போகாதபோது பள்ளிக்கு டீச்சர் லீவு என கேள்விப்படுகையில்... வாழ்க்கையின் இன்பங்கள் எல்லாம் வாழும் நீளத்தில் இல்லை, அற்புதங்கள் நிகழும் அந்தந்த நிமிஷங்களில்தான் இருக்கின்றன.

முப்பது வருஷமா எங்க ஆயாவுக்கு மூட்டு வலி, மயில் எண்ணெயில ஆரம்பிச்சு, மண்ணெண்ணெய் வரை தேய்ச்சுப் பார்த்தாச்சு, ஒண்ணும் வேலைக்கு ஆகல. இந்தப் பிரச்னையையும் சேர்த்துக்குங்க... மூணு வருஷமாவே எங்க அக்காவுக்கு முடி கொட்டுது, அமேசான் காட்டு அரிய மூலிகைல இருந்து ஆசனூர் காட்டுல அறிந்த மூலிகை வரை எல்லாத்துலயும் எண்ணெய் எடுத்து தடவிப் பார்த்தாச்சு.

இந்த மேட்டரையும் மனசுல வச்சுக்கோங்க. அம்மா சொல்லியும் கேட்காம புதருக்குள்ள போயி விளையாடுற திவ்யாவுக்கு 15 வகையான தோல் வியாதிகள் வருதாம், அதைக் கொஞ்சம் கவனிங்க. நஞ்சை எடுத்து நாக்குல வச்சாச்சு, பஞ்சை எடுத்து மூக்குல வச்சாச்சு, ஆனாலும் தேங்கா சிரட்டைய தேய்ச்சு  விட்ட மாதிரி கொறட்டை விடுறாரு எங்க தாத்தா. இது கண்டிப்பா கவனிக்கப்பட வேண்டிய பிரச்னை.

 என்  மாமா பையனுக்கும் அவன் சம்சாரத்துக்கும் மண்டை உடைச்சுக்கிற அளவுக்கு சண்டை, இதுக்கும் ஒரு தீர்வ சொல்லிட்டீங்கன்னா சந்தோஷப்படுவோம். அப்புறம், நடந்து முடிந்த இடைத்தேர்தல்ல எங்களுக்கு வரவேண்டிய தொகை சரியா வந்து சேரல. ஏரியா கவுன்சிலர்கிட்ட பேசி இதையும் தீர்த்து வைங்க. முட்டை விலை எட்டணா ஏறுனதுக்கு, ஆம்லெட் விலையை எட்டு ரூபா ஏத்தி இருக்காங்க மிலிட்டரி ஹோட்டல்காரங்க.

அதுக்கும் ஒரு தீர்வ தூக்கிப் போடுங்க. போன வாரம் உலக யோகா தினம் அன்னிக்கு பிரதமர் சொன்னாருன்னு, யோகா பண்ணின நம்ம பட்டு மாமிக்கு முதுகு புடிச்சுக்குச்சு. அதையும் தீர்வு காணுற லிஸ்ட்ல சேர்த்துக்குங்க. இதுல எல்லாத்தையும் தீர்க்க முடியாட்டியும், ஒண்ணு ரெண்டு பிரச்னையையாவது தீர்த்து வைங்க. செய்தி: காங்கிரஸிடம் ரெண்டு நாள் ஆட்சி கொடுத்தால் ஐந்து பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம் - காங்கிரஸ் கொறடா விஜயதரணி

பால் குடிக்கிற பால்வாடி பசங்க பங்களாதேஷ் அடிச்ச ரன்னைக் கவ்வாம மண்ணைக் கவ்வி, ஒரு நாள் கிரிக்கெட் தொடரை தோத்திருக்கு நம்ம இந்திய அணி. அவங்களை பங்களாதேஷுக்கு அனுப்பாம ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்ல ஒரு வாரம் கம்யூனிஸ்டுக்கு ஆதரவா பிரசாரத்துக்கு அனுப்பியிருக்கலாம். எப்படியும் ரெண்டும் வேஸ்ட்தானே!

குளுகுளுன்னு இருந்த கூல் கேப்டன் தோனி இப்பவெல்லாம் சிடுசிடுக்குறாரு, சுறுசுறுப்பா இருந்த கோஹ்லி இப்பவெல்லாம் கடுகடுக்கிறாரு, விறுவிறுப்பா விளையாடிய ரஹானே, ரோஹித்தெல்லாம் இப்ப வளவளான்னு இழுக்குறாங்க. ‘மைனா’ படம் பார்த்து ஃபீல் பண்ணிய ரேஞ்சுல சோலிய உருட்டுறாப்ல ரெய்னா.

காலி ரோட்டுல கோலி விளையாடுற குழந்தை மாதிரி அடிக்கிற ராயுடுவெல்லாம் வீட்டுக்கே போயிடலாம். எல்லோரும் நல்லா விளையாடி கேப்டன்ஷிப் வாங்குவாங்க, கோஹ்லி நல்லா விளையாடாம, தோனிய சிக்க வச்சு கேப்டன்ஷிப் வாங்க நினைக்கிறாரா?

- தா.பாண்டியன்

ஆல்தோட்ட பூபதி