நியூஸ் வே



‘பாயும் புலி’ படம் விஷால்-காஜல் அகர்வால் ஜோடியோடு ரெடியாகிறது. ‘பாண்டிய நாடு’ படத்தில் ‘ஃபை... ஃபை... கலாச்சி ஃபை...’ பாடிய அதே இடத்தில் பாடல் ரெடியாகிறது. ராசி!

சந்தானம் பட ஹிட்டால், ஆஷ்னா ஜாவேரி செம குஷியில் இருக்கிறார். மும்பையில் தனது வீட்டில் சின்னதாக ஒரு சிவன் கோவில் கட்டியிருக்கிறார் ஆஷ்னா. வெளியே கிளம்புகையில் சிவனை வணங்கிச் செல்வதுதான் ராசியாம்!

மாநிலங்களுக்கு அதிகாரபூர்வ சின்னம், மரம், பூ எல்லாம் இருக்கும். முதல்முறையாக ‘அதிகாரபூர்வ வண்ணத்துப்பூச்சி’யை ஒரு மாநிலம் தேர்வு செய்துள்ளது. அது, மகாராஷ்டிரா. ‘ப்ளூ மார்மன்’ இன வண்ணத்துப்பூச்சிக்கு இந்த பெருமை கிடைத்திருக்கிறது. இந்தியாவில் இப்படிச் செய்யும் முதல் மாநிலம் மகாராஷ்டிராதான். தமிழ்நாட்டுக்கு என்ன பூச்சி?

எப்போதும் செல்ஃபி மோகத்தோடு திரியும் நரேந்திர மோடியே சர்வதேச யோகா தினத்தின்போது செல்ஃபி எடுக்க தன்னை அணுகியவர்களைத் தவிர்த்துவிட்டார். ஆனால் இதுபோன்ற விஷயங்களில் எப்போதும் ஆர்வம் காட்டாதவரான கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, அதே தினத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியோடு செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

நரேந்திர மோடியின் எல்லா வெளிநாட்டுப் பயணங்களிலும் அவரோடு தொழிலதிபர் அடானி போகிறார் என ஒரு தகவல் கிளம்பியது. ‘‘உண்மையில் பிரதமரின் 18 பயணங்களில் 4 முறை மட்டுமே அவரோடு போனேன்’’ என விளக்கம் தந்திருக்கிறார் அடானி.

தடையை அடுத்து இந்தியா முழுக்க திரும்பப் பெறப்பட்டு அழிக்கப்படும் மேகி நூடுல்ஸ் பாக்கெட்களின் எண்ணிக்கை,26 கோடியே 50 லட்சம்.

ஹர்பஜன் சிங்கின் கேர்ள் ஃபிரண்ட் கீதா பாஸ்ரா அரிதாகவே படங்களில் நடிக்கிறார். அவர் நடித்த ‘செகண்ட் ஹேண்ட் ஹஸ்பண்ட்’ படம், மிகச்சரியாக ஹர்பஜனின் பிறந்த நாளில் ரிலீஸாகிறது!

மும்பைக்கு அருகே போக்குவரத்து சத்தமில்லா கிராமத்தில், பண்ணை வீடு கட்ட நிலம் வாங்கியிருக்கிறார் ஹன்ஸிகா. அமைதி விரும்பி!

‘சீனி’ படத்திற்காக கொஞ்சம் ஸ்லிம் ஆகியிருக்கிறார் ஓவியா. ‘‘முன்பெல்லாம் வருடத்திற்கு 2 படங்கள் மட்டுமே நடித்தேன். இப்போ எண்ணிக்கையை டபுள் ஆக்கிட்டேன்!’’ என்கிறார்.

விக்ரமின் அடுத்த படத்தில் ப்ரியா ஆனந்த்தான் இருந்தார். இப்போது கால்ஷீட் பிரச்னையில் அந்த இடத்தை பிந்து மாதவி பிடித்திருக்கிறார். பிந்துவிற்கு தலைகால் புரியாத சந்தோஷம்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரியச் சின்னங்களைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக அங்கெல்லாம் வைஃபி வசதியை அறிமுகம் செய்திருக்கிறது மத்திய அரசு. இதை முதலில் பெற்றது தாஜ்மகால். முதல் அரை மணி நேரத்துக்குஇந்த சேவையை இலவசமாகப்பயன்படுத்தலாம். 

அட்லியின் புதுப்படத்தில் விஜய் முதல் தடவையாக இளவயது அப்பாவாக நடிக்கிறார். இது விஜயகாந்த் நடித்த ‘சத்ரியன்’ படத்தின் ரீமேக் என்ற தகவல் கோடம்பாக்கத்தில் கிடுகிடுக்கிறது. விஜய் குழந்தையாக நடிகை மீனாவின் குழந்தையை நடிக்க வைக்க அணுகியிருக்கிறார்கள்.

காலேஜ் கோயிங் பொண்ணான லட்சுமி மேனன், ஈரான், ஸ்பெயின் என மொழிகள் தாண்டி புகழ்பெற்ற படங்களை தனது கலெக்‌ஷனில் வைத்திருக்கிறார். படிப்பு, நடிப்பு போக கிடைத்த நேரங்களில் உலகப் படங்கள் பார்க்கிறது பொண்ணு!

சப்பாத்தி 1 ரூபாய், மசால் தோசை 6 ரூபாய், ஐதராபாத் பிரியாணி 50 ரூபாய். அம்மா மெஸ்ஸை விடக் குறைந்த விலையில் நாடாளுமன்ற கேன்டீனில் உணவுகள் விற்கப்படுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தக் கேன்டீனுக்கு 60 கோடி ரூபாய் மானியம் தந்திருக்கிறது அரசு. ‘‘எல்லா மானியங்களையும் சுருக்கும்போது, சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் சம்பளம் வாங்கும் எம்.பி.க்களுக்கு இப்படி மானிய விலையில் உணவு தரலாமா’’ என சர்ச்சை எழுப்புகிறார்கள் பலர்.

‘பாபநாசம்’ ஆடியோவை எளிமையாக பட டீமை வைத்து வெளியிட்டுவிட்டார் கமல்ஹாசன். படத்தில் அவர் ஹெல்மெட் போடாமல் மொபெட் ஓட்டுவது போல ஒரு ஸ்டில் வெளியாகி இருந்தது. கட்டாய ஹெல்மெட் அமல் நேரத்தில் இது பற்றி விமர்சனங்கள் எழவே, தயங்காமல் ‘ஸாரி’ கேட்டிருக்கிறார் உலகநாயகன்.