அகந்தை



‘‘ஏங்க, இது மல்லிகா. பெங்களூர்ல காலேஜ் படிக்கிற பொண்ணு. பக்கத்து வீட்டு பெரியவரோட பேத்தி. லீவுக்கு வந்திருக்கா!’’ - மனைவி அறிமுகப்படுத்தினாள்.நான், ‘‘ம்ம்’’ என்றேன்.‘‘படிக்கிறதில் ரொம்ப ஆர்வமாம். உங்ககிட்ட நிறைய புத்தகங்கள் இருக்குன்னு சொன்னேன். உடனே பார்க்கணும்னு என்கூடவே கிளம்பி வந்தாச்சு!’’

அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் பார்த்து விழிகள் விரிய ‘‘ஃபென்டாஸ்டிக் கலெக்‌ஷன்!’’ என்றாள் மல்லிகா.‘‘நான் படிக்கறது எல்லாம் கொஞ்சம் ஹெவி சப்ஜக்ட்ஸ். உங்களுக்குப் பிடிக்குமான்னு தெரியல’’ என்றேன் நான். மனதிற்குள், ‘புரியுமான்னு தெரியல’ என ஓடியது.

நீட்ஷே, ஹெகல், சார்த்தர், ஃபோர்ஹே... வரிசையாகப் பார்த்தாள். ஒரு புத்தகத்தைத் தூக்கிக் காட்டினாள். அது பின் நவீனத்துவம் பற்றியது. ‘‘இது கூட வச்சிருக்கீங்களா!’’ - ஆச்சரியக் குரல்.இரண்டு முறை படித்தும் இன்னமும் எனக்கே புரியாத புத்தகம் அது. இன்னும் நான்கைந்து தடவையாவது படிக்கும் உத்தேசத்தில் இருந்தேன்.

அவள் புத்தகத்தைத் திருப்பினாள். பின் அட்டை பார்வையில் வந்தது. புகைப்படத்துடன் ஆசிரியர் பற்றிய குறிப்பு. புகைப்படத்தில் மல்லிகா சிரித்துக் கொண்டிருந்தாள்.‘‘ஐந்நூறு பிரின்ட் போட்டேன். ஐம்பது கூட விற்கலை!’’ - மல்லிகா சொன்னாள், புகைப்படத்தில் இருந்த அதே புன்னகையோடு!

வே.சுப்ரமணியன்