இது உக்கிர பாண்டியனின் கோட்டை!



தமிழ் வேந்தர்களான சேர, சோழ,  பாண்டியர்கள் கட்டி வைத்த கோயில்கள் இங்கு நூற்றுக்கணக்கில் உண்டு. ஆனால்  அவர்கள் நிர்மாணித்த கோட்டைகள், வாழ்ந்த அரண்மனைகள் எதுவும் இங்கு  மிச்சமில்லை.

போர்களாலும் காலவெள்ளத்தாலும் சிதைந்து போன அவை எங்கு  இருக்கின்றன என அகழ்வாராய்ச்சி தொடர்கிறது. ராஜேந்திர சோழனின் அரண்மனைச் சுவடுகள்  அண்மையில் கண்டறியப்பட்டன. இப்போது அவனுக்கு முந்தைய பாண்டியப் பேரரசன்  ஒருவனின் கோட்டைச்சுவடுகள், திருநெல்வேலி மாவட்ட கிராமம் ஒன்றில் கிடைத்திருக்கின்றன.

தமிழ் நிலத்தின் பெரு வரலாறு இன்னும் பூமிக்குக் கீழ்தான் புதைந்து கிடக்கிறது. ஏராளமான ரகசியங்களும், சுவாரசியங்களும், சோகங்களும், செல்வங்களும் அந்த வரலாற்றோடு புதைந்து கிடக்கின்றன. அவற்றைக் கண்டெடுக்கும் அகழ்வாராய்ச்சிகள் அவ்வப்போது நடப்பதுண்டு.

அப்படியான ஒரு அகழ்வு, 1250 ஆண்டுகளுக்கு முற்பட்ட பேரரசனின் சரித்திரத்தை மீட்டிருக்கிறது. தொல்கால வணிக வரலாற்றுக்கும், கலைப் பண்பாட்டுக்கும், யுத்தக் கலாச்சாரத்துக்கும் ஆதாரமான பல பொருட்களும் அங்கே கிடைத்துள்ளன. இதன்மூலம் பாண்டியர் வரலாற்றின் ஒரு பகுதி வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

திருநெல்வேலியிலிருந்து 26 கி.மீ. தொலைவில் இருக்கிறது உக்கிரன்கோட்டை. இந்த கிராமத்தில் விதவிதமான பானை ஓடுகளும், சுதைப் படிமங்களும், சிதைந்த கற்சிற்பங்களும் சிதறிக் கிடந்தன. இவை வரலாற்று ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்க, தொல்லியல் துறையின் கதவைத் தட்டினார்கள் அவர்கள். ஆனைமலைப் பகுதியில் கிடைத்த கல்வெட்டு ஒன்றில் ‘களக்குடி நாட்டு கரவந்தபுரம்’ என்ற வார்த்தை பொறிக்கப்பட்டிருந்தது.

இந்தக் களக்குடி, உக்கிரன்கோட்டையை ஒட்டிய பகுதி என்பதால், கரவந்தபுரம் என்பது உக்கிரன்கோட்டையைக் குறிப்பதை உணர்ந்த தொல்லியல் துறையினர் இங்கு களப்பணிக்குத் தயாரானார்கள். அதில் சுடுமண் பொம்மைகள், சங்குகள், கண்ணாடி மணிகள், தள ஓடுகள், சிலைகள், பானை ஓடுகள், சீன மண்பாண்டங்கள் என பல்வேறு பொருட்கள் கிடைத்தன. ஒரு கோட்டை இருந்ததற்கான சுவடுகளும் கிடைக்க, இங்கு அகழ்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது.

‘‘உக்கிரன்கோட்டையின் புராதனப் பெயர் கரவந்தபுரம். சங்கரன்கோவில் கல்வெட்டிலும் இப்படித்தான் குறிப்பிடப்படுகிறது. இங்கு அகழியும் மதிலும் உடைய ஒரு வலுவான கோட்டை இருந்துள்ளது. தவிர சிவன் கோயிலும் இருந்துள்ளது. கி.பி.768 முதல் 815 வரை மதுரையை ஆண்ட பராந்தக வீர நாராயணன் என்னும் உக்கிர பாண்டியனின் மாற்று அரண்மனையாக இது இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆய்வின் இறுதியில்தான் இதை உறுதி செய்யமுடியும்.

எங்கள் பொறியாளர்கள் குழு முதலில் இந்தப்பகுதியை ஆய்வு செய்தது. பொதுவாக ஜி.பி.எஸ் எனப்படும் அளவீட்டின் அடிப்படையில் மொத்த நிலப்பரப்பில் மேடான பரப்பைக் கண்டறிந்து, அங்குதான் அகழ்வைத் தொடங்குவோம். 4 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலம் என்பது முதற்கட்ட அகழ்வுக்கான அடிப்படை அளவு.

எல்லா இடங்களிலும் இந்த அளவீட்டின் படியே குழி அகழ்வு செய்யப்படும். இடத் தேர்வு முடிந்ததும் சிறிய கருவிகளால் அங்குலம் அங்குலமாக மண்ணைக் கொத்தி, கிடைக்கும் பொருட்களை சேகரிக்க வேண்டும். மண் கடினமாக இருந்தால் அந்தப் பகுதியில் ஒரு கட்டுமானம் இருந்ததென முடிவுக்கு வரலாம்.

உள்ளே செங்கற்கள் கிடைத்தால் அப்பகுதியில் ஒரு ‘செட்டில்மென்ட்’ இருந்திருக்க வாய்ப்புண்டு. ‘ஹ்யூமஸ்’ எனப்படும் வெள்ளை நிற மேல் மண் தொடங்கி கன்னி மண் எனப்படும் கடைசி மண் வரைக்கும் அகழ்வு செய்யப்படும். இடைப்படும் மண் அடுக்குகளில் என்னென்ன பொருட்கள் கிடைக்கின்றன என்பதை வைத்தும், மண்ணின் தன்மை, நிறத்தை வைத்தும் காலத்தைத் தீர்மானிக்கலாம். கிடைக்கும் பொருட்களை பிற பகுதிகளில் கிடைத்தவற்றோடு ஒப்பிட்டு காலம் பற்றி முடிவுக்கு வரலாம்.

உக்கிரன்கோட்டையில் மூன்று மண் அடுக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முதல் அடுக்கில் கிடைத்துள்ள பொருட்களின் அடிப்படையில் நிறைய மக்கள் இங்கே வசித்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மொத்தம் 5 குழிகள் அகழப்பட்டுள்ளன. பாண்டியர் காலக் கோயிலின் கருங்கல் அடித்தளம் தென்படுகிறது.

 இரும்பு உருக்குக் கழிவுகள் கிடைத்துள்ளன. மேலும் இரும்பை உருக்கப் பயன்படும் குருசிபிள் என்ற பானைகளின் மிச்சங்களும் கிடைத்திருப்பதால், இந்தக் கோட்டையில் இரும்புத்தாதுவை உருக்கி ஆயுதம் செய்யும் தொழிற்சாலை இருந்திருக்கலாம்.

 கண்ணாடி மணிகள், ரோமன் துணிகள், உடைந்த வளையல் துண்டுகள், விதவிதமான பானையோடுகள், சீன ஓடுகள் கிடைத்துள்ளன. அருகில் கொற்கை துறைமுகம் இருப்பதால், உக்கிரன்கோட்டை ஒரு வணிகத்தலமாகவும் இருந்திருக்கலாம். சீனர்கள் இங்கு வந்து வணிகம் செய்திருக்கலாம். கிடைத்த மண் மாதிரிகள், பொருட்கள் மேலதிக ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் வந்தபிறகே இதுபற்றி விரிவாக சொல்லமுடியும்...’’ என்கிறார் இப்பகுதியை ஆய்வுசெய்த கல்வெட்டு ஆய்வாளர் பாஸ்கர்.

இவ்வூரைப் பற்றி ஏராளமான கதைகள் உலவுகின்றன. எது புனைவு, எது உண்மை என்று இனம் பிரிக்க முடியாத அந்தக் கதைகளில் உக்கிரபாண்டியனே ஹீரோவாக இருக்கிறான். இவன் தென்காசியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்ததாகவும் சொல்கிறார்கள்.

அவ்வப்போது வலம் வந்து மக்களைச் சந்திப்பதற்காக அம்மன்னன் ஏராளமான கோட்டைகளைக் கட்டியதாகவும், உக்கிரன்கோட்டையில் பெரும் படைப்பிரிவு ஒன்று முகாமிட்டிருந்ததாகவும், வைத்தியன் குலசாத்தான் கணபதி, மாறன் காரி, மாறன் எயினன் உள்ளிட்ட தளபதிகள் இக்கோட்டையில் வசித்ததாகவும் சொல்கிறார்கள்.

வரலாற்றை ஆவணப்படுத்துவதில் தொல்லியல் துறையின் பங்களிப்பு ஆகப் பெரியதாகும். ஆனால் வரலாற்றை மாற்ற ஆர்வம் காட்டும் அளவுக்கு, வரலாற்றைத் தேட அரசுகள் ஆர்வம் காட்டுவதில்லை. நிதிக்காகவும், உத்தரவுக்காகவும் காத்திருந்து காத்திருந்தே சோர்ந்து போகிறார்கள் ஆய்வாளர்கள்.

இன்னும் ஏராளமான சரித்திரங்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டியுள்ள சூழலில் இத்துறை இன்னும் வேகம் எடுக்க வேண்டும் என்பதே சரித்திர ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.இவ்வூரைப் பற்றி ஏராளமான கதைகள்  உலவுகின்றன. அந்தக் கதைகளில் உக்கிரபாண்டியனே ஹீரோவாக இருக்கிறான்.

- வெ.நீலகண்டன்
படங்கள்: பரமகுமார்