குடும்பங்களை ஒன்று சேர்க்கும் ஷோ!



குடும்பத்தோடு சேர்ந்து பார்க்க படம் கூட அவ்வப்போது வருகிறது. கேம் ஷோக்களைத்தான் குழந்தைகளோடு உட்கார்ந்து பார்க்க முடிவதில்லை. டபுள் மீனிங் கமென்ட்ஸ், ஆபாச காஸ்ட்யூம்ஸ் இதெல்லாம்தான் கேம் ஷோ என்றாகிவிட்ட நிலையில், கேம் சேஞ்சராக ஒரு கேம் ஷோ... அதை சன் டி.வி கொடுத்து அசத்தியிருக்கிறது! ஞாயிறு மதியம் சாப்பிடும் நேரம் வந்தால் இன்றைய குடும்பங்களுக்கு சைடு டிஷ்ஷே ‘சூப்பர் சேலஞ்ச்’ நிகழ்ச்சிதான்!

டி.வியில் பார்ப்பதை விடவும் பத்து மடங்கு அதிக உற்சாகம் ததும்புகிறது அந்த ஸ்டுடியோ ஃப்ளோரில். தொகுப்பாளர்கள் ரிஷிக்கும் கவிதாவுக்கும் ஷோவுக்கு ஷோ ஒவ்வொரு கெட்டப். ‘தெய்வ மகள்’ தொடர் டீம் வந்த அன்று, மடிசார் - பஞ்சகச்சம்... பாரம்பரியத்தின் உச்சம்! பிரேக் விட்டால் அவர்களும் பங்கேற்பாளர்களோடு ஜாலியாய் கலந்துவிடுகிறார்கள் - செமயாய் லந்து விடுகிறார்கள்.

‘‘அந்தக் காலத்தில் அப்பா, அம்மா, பிள்ளைகள்னு எல்லாரும் ஒண்ணா கூடியிருக்குற தருணங்கள் அதிகம் இருந்துச்சு சார். இப்ப அது ரொம்பவும் குறைஞ்சு போச்சு. தட்டாங்கல் எங்கே, பாண்டியாட்டம் எங்கே, தாயக்கட்டை எங்கே... இப்ப எதுவும் இல்ல. ஆளாளுக்குத் தனித்தனியா அவங்கவங்க வேலையில மூழ்கிடறாங்க.

பிள்ளைகளுக்கு கம்ப்யூட்டர் கேம்ஸ், அம்மாவுக்கு சமையல், அப்பாவுக்கு பேப்பர்னு வீட்டுக்கு வீடு டிபார்ட்மென்ட் பிரிஞ்சி கிடக்கு. அதை மறுபடி சேர்க்கணும்... ஒவ்வொரு வீட்டு ஹால்லயும் குடும்பத்தையே கூட்டி வந்து உட்கார வைக்கணும். அதைத்தான் இந்த ‘சூப்பர் சேலஞ்ச்’ நிகழ்ச்சி செய்யுது!’’ என கோரஸ் ஆனந்தத்தைக் கொட்டுகிறது ‘தெய்வ மகள்’ சீரியல் டீம்.

‘‘இந்த நிகழ்ச்சியில எப்ப வருவோம்னு காத்திருக்கிற மாதிரி ஆகிப் போச்சு சார். எங்க வீட்ல மட்டுமில்லாம எங்க சொந்தக்காரங்க வீடுகள்லயும் இது ஃபேவரிட் ஆகிடுச்சு. பார்வையாளர்களே ஒவ்வொரு வீட்டுலயும் இந்த கேமை விளையாடிப் பார்க்குறாங்க. சாதாரணமா சீரியல் ஆர்ட்டிஸ்ட்டுகளை அவங்க சொந்த ஃபேமிலியோட கூப்பிடுற மாதிரி இல்லாம, இங்கே சீரியல் குடும்பங்களாவே நாங்க வர்றோம். அதான் செமயா ரீச் ஆகியிருக்கு!’’ என மகிழ்ந்துபோகிறார்கள் அவர்கள்.

ஸ்டார்ட் - கேமரா சொன்னதும், ‘ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’, ‘கண்டுபிடி கண்டுபிடி’, `வெயிட் பார்ட்டி வெய் தி ஸ்டார்’, `பீம் பாய், பீம் பாய்’, `நான் அடிச்சா தாங்கமாட்டே’, `ஸ்டாப் ஓ ஸ்டாப்’, `சாப்பாட்டு ராஜா, சாப்பாட்டு ராணி’, `வாயை மூடி பேசவும்’ என அடுத்தடுத்த ரவுண்ட்கள் களைகட்டுகின்றன.
குழந்தைகளுக்கான பீப்பியில் சினிமா பாட்டை இசைத்துக் காட்டி அதைக் கண்டுபிடிப்பது, படத்தின் பெயரை ஓவியமாக வரைந்து காட்டுவது...

இப்படி சூப்பர் சேலஞ்ச் சுற்றுகள் பத்துமே வித்தியாசம் + கிரியேட்டிவ். இதெல்லாம் உடலுக்கு மட்டுமல்ல... மூளைக்கும் கூட ஜாக்கிங் பண்ணியது போன்றதொரு பயிற்சியைக் கொடுக்கின்றன. வெறும் ஐந்து மாதம்தான்... இதுவரை 22 ஷோதான் போயிருக்கிறது. அதற்குள் இந்த நிகழ்ச்சி பெற்றிருக்கும் இத்தனை வரவேற்புக்குக் காரணம் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தக் குடும்பங்களுமே! சொல்லப் போனால், இப்படியொரு ஆல் ஆடியன்ஸ் கேம் ஷோவுக்கான இடம் இத்தனைக் காலமாய் காலியாகத்தான் இருந்திருக்கிறது!

- பேராச்சி கண்ணன்
படங்கள்: புதூர் சரவணன்