கொஞ்சம் உணவு... கொஞ்சம் பாரதி..!



முகப்பில் பெரிய பாரதி படம். கீழே அகல்விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. அருகில் ஒரு பெட்டி நிறைய புத்தகங்கள். ‘இந்தப் பெட்டியில் இருக்கும் புத்தகங்களை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம். உங்களிடம் இருக்கும் பயன்படுத்திய புத்தகங்களை இங்கு கொண்டு வந்து வைக்கலாம்’ என்கிறது அப்பெட்டி.

காணக் கிடைக்காத பாரதியின் புகைப்படங்கள் சுவரெங்கும்! சௌம்யாவின் மயக்கும் ராகமாலிகாவில் ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா... செல்வக்களஞ்சியமே...’ மெலிதாக ஒலித்து இதயத்தைக் கிளறச் செய்கிறது.

திருவல்லிக்கேணி கோஷா மருத்துவமனைக்கு அருகே, பாரதி தெருவில் இருக்கும் பாரதி உணவகம், பாரதியாரைப் பற்றிய காட்சிக்கூடம் போலிருக்கிறது. மேன்ஷன் பேச்சிலர்கள் முதல், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் வரை ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள். பாரதி உணவகத்தின் நிறுவனர் கண்ணன்.

காரைக்குடி அருகிலுள்ள கோனாபட்டைச் சேர்ந்தவர். நெடுங்காலம் இதழியல் துறையில் பணியாற்றியவர். பாரதி உணவகத்துக்கு வருபவர்கள் பாரதியில் திளைக்கிறார்கள்.  செயற்கைச் சேர்மானங்கள் அற்ற உணவை வயிற்றுக்கு இதமாக சாப்பிட்டுச் செல்கிறார்கள்.

ஓரிரு பிரதிகள் மட்டுமே மிஞ்சி யிருக்கும் பாரதி பற்றிய அபூர்வ புத்தகங்களைக்கூட சேகரித்து பாதுகாக்கிற கண்ணன், உணவகத்துக்கு அருகிலேயே சகல வசதிகளோடு ஒரு ஆய்வு நூலகத்தையும் தொடங்கும் முயற்சியில் இருக்கிறார். கண்ணனுக்கு இன்னொரு அடையாளம், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி கிரண் பேடியின் வாழ்க்கையை ‘ராயல் சல்யூட்’ என்ற பெயரில் ஆவணப்படமாக்கி கவனம் பெற்றவர்.

“பள்ளிக் காலத்திலேயே பாரதியைப் பற்றிய பிரமிப்பு எனக்கு உண்டு. அவர் பற்றிய செய்திகளையும், அவர் எழுதிய படைப்புகளையும் தேடித் தேடிப் படிச்சிருக்கேன். என் பார்வையில பாரதி சராசரி மனிதனில்லை. அவர் வாழ்ந்த வாழ்க்கையை நம்மால நினைச்சுக்கூட பார்க்க முடியாது. ஆனா துரதிர்ஷ்டவசமா, பாரதியை நம் தேசம் முழுமையா உணரலை. ரவீந்திரநாத் தாகூருக்கு முன்பே காந்தியை ‘மகாத்மா’ன்னு அழைச்சவர் பாரதி.

1914-15கள்ல சத்தியாக்கிரக போராட்டத்துக்கு தெருத்தெருவா நிதி திரட்டிக் கொடுத்து, ‘காந்திதான் வருங்காலத்தில் இந்தியாவை வழிநடத்தப் போறார்’னு சொன்னவர். பாரதி இறந்து 7 வருஷத்துக்குப் பிறகு, அவரோட கவிதைகளை குஜராத்தியில் மொழிபெயர்த்து வெளியிட்டார் காந்தி.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பாரதியாரின் பங்களிப்பு முழுமையா தொகுக்கப்படலை. தாகூருக்குக் கிடைச்ச அங்கீகாரம் பாரதிக்குக் கிடைக்கலை. கல்லூரிக் காலத்திலேயே இந்த ஆதங்கங்கள் எனக்கு உண்டு. ஒரு கட்டத்துல பாரதி எனக்குள்ள ஒரு தெய்வீகத் திருமகனா மாறிட்டார். அன்றாடம் அவரை வணங்கிட்டே வேலைகளைத் தொடங்குற அளவுக்கு என்னை ஆக்கிரமிச்சுட்டார்.

எங்க பாரம்பரியம், உணவகத் தொழில்தான். ஆனா ஆர்வத்தால இதழியல் துறைக்கு வந்துட்டேன். அந்தத் தருணத்தில் பாரதி பற்றி நிறைய கள ஆய்வுகள், நூல் ஆய்வுகள் செஞ்சேன். பணிக்காலத்துல திருவல்லிக்கேணி மேன்ஷன்ல தங்கியிருந்தேன்.

திருவல்லிக்கேணியை ‘பேச்சிலர்ஸ் பேரடைஸ்’னு சொல்வாங்க. இங்கிருக்கிற இளைஞர்கள் சாப்பாட்டுக்கு நிறைய சிரமப்படுவாங்க. உணவகங்கள்ல சுவைக்காக நிறைய செயற்கை சேர்மானங்கள் சேர்க்கப்படுறதால ஆரோக்கியப் பிரச்னைகளும் வரும். இதையெல்லாம் பார்க்கிறப்போ, இந்த வேலையை விட்டுட்டு நாமளும் நம்ம அப்பா மாதிரி ஒரு உணவகம் திறக்கலாமேன்னு தோணும்.

இந்த எண்ணம் ஒரு கட்டத்துல பெரிய உந்துதலை உருவாக்குச்சு. வேலையை விட்டுட்டேன். உணவகம் திறக்குறதுக்கு முன்னாடியே சில உறுதிகளை எடுத்துக்கிட்டேன். ‘செயற்கைச் சேர்மானங்கள் எதையும் சேர்க்கிறதில்லை. உணவகத்தில எப்போதும் பாரதி பாடல்கள் ஒலிக்கணும். உணவகத்துக்கு வர்றவங்க குறைந்தது அஞ்சு நிமிடமாவது, பாரதியில கலக்கணும்.

அந்த உறுதியோட உணவகத்தைத் தொடங்கினேன். பாரதி பாடல்களை காலவாரியா தொகுத்த சீனி.விஸ்வநாதன், ரா.அ.பத்மநாபன், பாலம் கல்யாணசுந்தரம் ஐயான்னு நிறைய சமூக ஆர்வலர்களைப் பார்த்தேன்.

புத்தகங்கள் சேகரிக்கவும், பாரதி பத்தின புதுப்புது செய்திகளைத் தெரிஞ்சுக்கவும் இவங்கள்லாம் உதவினாங்க. மூணு வருஷத்தில அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்த உணவகமா இது மாறியிருக்கு. என் பாதிக் கனவுகள் நிறைவேறியிருக்கு...” என்று பெருமிதமாகச் சொல்கிறார் கண்ணன்.

பாரதியை வார்த்தையாக அன்றி வாழ்க்கையாகவும் கடைப்பிடிக்கிறார் கண்ணன். ‘அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தாலும், பதினாயிரம் ஆலயம் உருவாக்கினாலும் ஒரு குழந்தைக்கு கல்வி தருவதற்கு இணையாகாது’ என்ற பாரதியின் வழிகாட்டுதலுக்கு இணங்க வருடந்தோறும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதையும் தொடர்கிறார் கண்ணன். அலைபேசியில் கேட்கும் வகையில் ‘பாரதி வரலாறு’ என்ற பெயரில் ஒரு ஒலிச்சித்திரத்தை உருவாக்கி தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறார். பாரதியாரைப் பற்றி பதிவுசெய்யப்படாத பல்வேறு செய்திகளை தன்னுள் வைத்திருக்கிறார் கண்ணன்.

“பாரதியாரோட ஐந்து புகைப்படங்கள் மட்டும்தான் நமக்குக் கிடைச்சிருக்கு. பாரதியார் எப்படி இருப்பார்னு கேட்டா, உடனடியா முறுக்கு மீசையும், முண்டாசுத் தலையும்தான் நினைவுக்கு வரும். ஆனா அந்தப் படம் அவர் காலமாவதற்கு மூன்று மாதங்கள் முன்பு எடுத்தது. திருவல்லிக்கேணி கோயில் யானை தாக்கியதால் படுகாயம் அடைந்திருந்தார் பாரதி.

அதனால் அவருடைய தோழரான பாரதிதாசன் பெரும் மனவேதனையில் இருந்தார். ‘நான் நன்றாகத்தான் இருக்கிறேன்’ என்று அவரைத் தேற்றுவதற்காக பாரதி எடுத்து அனுப்பிய புகைப்படம்தான் அது. பாதியளவு எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படமே பாரதியாக நம் மனதில் தங்கி விட்டது. பாரதி பெரும் கலகக்காரர்.

அந்தக்காலத்தில் பிராமணர்கள் மீசை வைத்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால், குடுமி வைத்திருப்பார்கள். பாரதி குடுமியை எடுத்தார். முறுக்கு மீசை வைத்தார். சைவத்தின் அடையாளமான விபூதியையும் சாக்தத்தின் அடையாளமான குங்குமத்தையும், வைணவத்தின் அடையாளமான நாமத்தையும் சூடி, தாடி வளர்த்து வித்தியாசமாக வலம் வந்தார் பாரதி...” என்கிற கண்ணன் தன் உணவகத்தில் பாரதியின் ஐந்து முகங்களையும் அழகுற படங்களாக்கி மாட்டியிருக்கிறார்.

‘வையகம் காப்பவரேனும் சிறு வாழைப்பழக்கடை வைப்பவரேனும், பொய்யகலத் தொழில் செய்தே பிறர் போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்...’ என்றார் பாரதி. அதன்படி மேலோராகவே வாழ்கிறார் கண்ணன்.இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பாரதியாரின் பங்களிப்பு முழுமையா தொகுக்கப்படலை. தாகூருக்குக் கிடைச்ச  அங்கீகாரம் பாரதிக்குக் கிடைக்கலை.

- வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்