வானிலை அறிக்கை பஞ்சாயத்து!



மழை  வருமா, வராதா?

பலருக்கும் மழை வருவது ரமணன் சொன்னால்தான் தெரியும். பள்ளிக்குழந்தைகளுக்கு ‘மழை’ என்றால் ‘விடுமுறை’ என்பதைத் தாண்டிய அர்த்தங்கள் குறைவு. குழாயில் தண்ணீர் வராவிட்டால், பெரியவர்களுக்கு மழை பற்றிய நினைப்பு வரும்.

ஆனால் இந்தியாவில் தொழில் உற்பத்தி, தொழில்நுட்ப வளர்ச்சிகள் எல்லாவற்றையும் தாண்டி பருவமழைதான் தேசத்தின் வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. ரூபாயின் மதிப்பு முதல் ஷேர் மார்க்கெட்டின் உச்சம் வரை எல்லாமே பருவமழையை நம்பித்தான் இருக்கிறது.

‘இந்த ஆண்டு பருவமழை பொய்த்து இந்தியா வறட்சியில் தவிக்கும்’ என இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை அடித்துச் சொல்கிறது. ஆனால், ‘இயல்பைவிட அதிகமாகவே மழை பெய்யும்’ என்கிறது தனியார் வானிலை ஆய்வு மையம் ஒன்று. ‘யார் சொல்வது பலிக்கும்’ என ஒரு பொருளாதார சூதாட்டமே நடக்கிறது இங்கு!

தனியார் வானிலை ஆராய்ச்சி மையம் என்பது இந்தியாவுக்குப் புதிய விஷயம். இந்தியாவின் ஒரே தனியார் வானிலை ஆராய்ச்சி நிறுவனம், ஸ்கைமெட். இவர்களின் இணையதளத்துக்குப் போய், ‘எங்கள் ஊரில் எப்போது பருவமழை துவங்கும்?’ எனக் கேட்டாலும், பொறுப்பாக தேதியைச் சொல்கிறார்கள். இந்த நிறுவனத்துக்கும் இந்திய வானிலை ஆராய்ச்சித் துறைக்கும்தான் இப்போது மோதல்!

‘‘இந்த ஆண்டு பருவமழை 88 சதவீத அளவுக்கே பெய்யும். கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி இந்தியாவில் ஏற்படும்’’ என அரசின் வானிலை ஆராய்ச்சித் துறை அறிவித்தது. இதற்கு அவர்கள் காரணமாகச் சொன்னது, ‘எல் நினோ’ விளைவை! பசிபிக் பெருங்கடலில் இருக்கும் நீரோட்டங்களின் விளைவாக இயல்புக்கு மாறான வெப்பநிலை நிலவும்போது உலகின் பல பகுதிகளில் அதன் எதிரொலியாக பெரும் வெள்ளமும் வறட்சியும் ஏற்படும்.

இந்தியாவுக்கு எல் நினோ வறட்சியைத் துயரப் பரிசாகத் தருகிறது. 2000, 2002, 2004, 2009, 2014 என சமீபத்திய ஐந்து எல் நினோக்களின்போதும் இந்தியா வறட்சியைச் சந்தித்தது. ‘இம்முறையும் எல் நினோ ஏற்பட்டுள்ளதால், அதேபோல வறட்சி பாதிக்கும்; அது கடுமையாகவும் இருக்கும்’ என்பது அவர்களின் கணிப்பு.

ஆனால் ஸ்கைமெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜடின் சிங், ‘‘அதெல்லாம் கிடையாது. இந்த ஆண்டு பருவமழை 102 சதவீதம் பெய்யும்’’ என அடித்துச் சொல்கிறார். அதற்குக் காரணங்களும் சொல்கிறார். ‘‘எப்போதுமே முந்தைய ஆண்டின் எல் நினோ அடுத்த ஆண்டும் தொடரும்போது அதன் விளைவுகள் மோசமாக இருக்காது. கடந்த 140 ஆண்டுகளில் அடுத்தடுத்த ஆண்டுகளில் எல் நினோ ஏற்பட்டபோது நான்கே நான்கு முறை மட்டுமே வறட்சி பாதிப்பு வந்தது. அதுபோல இப்போது மோசமாக இருக்காது’’ என்கிறார் அவர்.

ஜடின் சிங் இப்படிச் சொல்ல இன்னொரு காரணமும் இருக்கிறது. அது, எல் நினோ போலவே ஒரு டெக்னிக்கல் விஷயம்! Indian Ocean Dipole என்பார்கள் இதை. அதாவது இந்தியப் பெருங்கடலில் நம் இந்தியாவை ஒட்டி இருக்கும் அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் இரண்டு புள்ளிகள் சொல்கிறார்கள்.

இந்த இரண்டு புள்ளிகளுக்கு இடையே கடல்மட்ட வெப்பநிலை சாதகமாக இருந்தால் போதும்... எல் நினோ நம்மை ஒன்றும் செய்யாது! ‘‘இப்போது இந்த சாதக சூழலால்தான் பருவமழை பெய்கிறது. சீஸன் முழுக்கவே இப்படிப் பெய்யும்’’ என்கிறார் ஜடின் சிங்.

அவர் சொல்வதற்கு ஏற்றதுபோல மழை பெய்கிறது. மும்பையில் கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. குஜராத் வரை தென்மேற்குப் பருவமழை எட்டிப் பார்த்துவிட்டது. ஆனாலும் அரசின் வானிலை ஆராய்ச்சித் துறை தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. ‘‘எல் நினோ இப்போதுதான் வலுவடைந்து வருகிறது. அதன் விளைவுகள் இனிமேல்தான் தெரியும்’’ என்கிற அவர்களின் கருத்தை ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க நிபுணர்கள் ஆமோதிக்கிறார்கள்.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஸ்கைமெட் கிட்டத்தட்ட துல்லியமாக பருவமழையைக் கணித்தது. 2012ம் ஆண்டில் 93 சதவீத மழை பெய்தது. ஸ்கைமெட்டின் கணிப்பு 94 சதவீதம். அரசின் கணிப்பு 99. அடுத்த 2013ம் ஆண்டில் ஸ்கைமெட் 103 சதவீதம் என்றது. 106 சதவீத மழை பெய்தது. அரசின் கணிப்பு 98. கடந்த ஆண்டில் 88 சதவீத மழையே பெய்தது. ஸ்கைமெட்டின் கணிப்பு 94 சதவீதம்; அரசின் கணிப்பு 95 சதவீதம்.யாருடைய கணிப்பு உண்மையாகிறது என்பதைத் தாண்டி, மழை பெய்து நாடு செழித்தால் சந்தோஷம்!

- அகஸ்டஸ்