சிலிர்க்கும் சோனாக்‌ஷி சின்ஹா



அமேஸிங் முருகதாஸ் !

‘லிங்கா’ கோடம்பாக்கத்துக்குக் கொடுத்த சோன்பப்டி, சோனாக்‌ஷி சின்ஹா. ‘தென்னாட்டுப் பூவே... தேனாழித்தீவே...’ என சூப்பர் ஸ்டாரே டூயட்டிய பொண்ணு. இப்போது இந்தியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘அகிரா’வில் சோனாக்‌ஷிக்குத்தான் டைட்டில் ரோல். ‘யாருடனோ, சோனாக்‌ஷி மாலத்தீவு சென்று வந்திருக்கிறார்’ என்பது பாலிவுட்டை வைரலாக்கிய லேட்டஸ்ட் கிசுகிசு.

‘‘இப்படி ஒரு படத்துல நடிக்க கொடுத்து வச்சிருக்கணும். ஏ.ஆர்.முருகதாஸ்ஜி இயக்கின ‘ஹாலிடே’யில் நான் நடிச்சிருந்தேன். அமேசிங்கான மனிதர். என்னோட வொர்க் எத்திக்ஸ் பத்தி அவர் பாராட்டிட்டே இருப்பார். ‘தமிழ்ல ரிலீஸான ‘மௌனகுரு’ படத்தை ‘அகிரா’வா ரீமேக் பண்ணப்போறேன்’னு அவர் சொன்னப்போ நான் கொஞ்சம் தயங்கினேன். ஹீரோயினை மையப்படுத்தும் கதை இது...

என்னால முடியுமான்னு யோசனை, அவ்வளவுதான். ஆனா, முருகதாஸ்ஜி எனக்கு நிறைய விஷயங்களைச் சொல்லிப் புரியவச்சார். ‘நாம ரெண்டு பேருமே இதுவரை மசாலா ஃபிலிம்ஸ்தான் பண்ணியிருக்கோம்.

முதல் தடவையா ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற கதையை கையில எடுத்திருக்கோம். இப்படி ஒரு சப்ஜெக்ட் ஜெயிக்கும்னு நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை நம்ம ரெண்டு பேருக்குமே இருக்கு’ன்னு அவர் சொன்னது நியாயமா பட்டது. சொன்னபடியே இந்தப் படத்தில என்னோட கேரக்டரை அவர் ரொம்பப் பிரமாதமா அமைச்சிருக்கார். சந்தோஷமான அனுபவமா இருக்கு!’’

‘‘‘மௌனகுரு’ தெரியும்... ‘அகிரா’வில் என்ன வித்தியாசம்?’’‘‘ராஜஸ்தான்ல வசிக்கற மிடில் கிளாஸ் பொண்ணா நான் நடிக்கறேன். அவதான் அகிரா. அவளை யாருமே சரியா புரிஞ்சுக்க மாட்டாங்க. ஆனாலும் அதைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாம தானே தனக்கு எஜமான்னு வாழுற பொண்ணு. திடீர்னு அவளுக்கு அசாதாரணமா ஒரு சிச்சுவேஷன் வருது. அவ அதை எப்படி எதிர்கொள்றாங்கறதுதான் கதை. சவாலான ரோல்.

நிஜ வாழ்க்கையில கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாத கஷ்டங்களை எல்லாம் சுலபமா சமாளிக்கிற ரோல். இந்தப் படத்துக்காக 2 மாசமா ரிஸ்க் எடுத்து மார்ஷல் ஆர்ட்ஸ் கத்துக்கிட்டேன். கிக் பண்றது, பன்ச் பண்றது, உடம்பை வில்லா வளைக்கறதுன்னு கடுமையான பயிற்சிகள். ப்ராக்டீஸ் நடுவுல எனக்கு கை மணிக்கட்டுல அடிபட்டுடுச்சு. இதுக்கு முன்னாடி நடிச்ச எந்தப் படத்துக்காகவும் நான் இவ்வளவு மெனக்கெட்டதில்லை.

முதல்முறையா டைட்டில் ரோல்... அதனால கொஞ்சம் பதற்றமும் இருந்தது. இது பெரிய பொறுப்பாச்சே! ஆனா, பெரிய பெரிய ஆட்கள் இந்தப் படத்துக்கு பக்க பலம். முருகதாஸ் அனுபவம் நிறைஞ்சவர். அனுராக் காஷ்யப் சார்தான் படத்தில் வில்லன். எல்லாருமே ஃபுல் சார்ஜ்ல இருக்கோம். பாஸிட்டிவ் எனர்ஜி நம்பிக்கை தருது!’’‘‘அப்போ மசாலா படங்கள் உங்களுக்கு போரடிக்குதா?’’

‘‘போரடிக்கிறது எனக்கில்லை. தயாரிப்பாளர்கள், ஆடியன்ஸ் இப்படி ஒரு மாறுதல் அவசியம்னு நினைக்கறாங்க. சின்ன தயாரிப்பில் அழகான கதைகள் வர ஆரம்பிச்சிடுச்சு. காலம் மாறுது!’’‘‘மசாலா படமே பண்றதா உங்களை நிறைய பேர் விமர்சனம் பண்றாங்களே!’’

‘‘உண்மையில நம்மளை விமர்சிக்கிறவர்களை விட பாராட்டுறவங்க அதிகம் பாஸ். ஆனா விமர்சனங்கள் சீக்கிரம் நம்மளை வந்து ரீச் பண்ணிடுது, அவ்வளவுதான். ஒரு சின்ன டவுன்ல போய்க் கேட்டாலும் என்னை அடையாளம் தெரியுது. பாராட்டுறாங்க. அதான் உண்மை. அதனால நான் விமர்சனங்களை ஒரு பொருட்டா நினைக்கறதே இல்லை!’’‘‘சமீபத்தில் யாரோடவோ நீங்க மாலத்தீவு போயிட்டு வந்தீங்களாமே..?’’

‘‘மர்ம மனிதர்னு பேசிக்கிறாங்க, அப்படித்தானே? என் வாழ்க்கையில் மர்மமும் இல்லை... மனிதரும் இல்லை. மாலத்தீவுக்கு நான் ஷூட்டிங்குக்காக போனேன். மொத்தமே நான் ரெண்டு நாட்கள்தான் தங்கியிருந்தேன். ‘அழகு... புகழ்..னு உங்ககிட்ட எல்லாம் இருக்கு. அப்புறம் ஏன் பாய்ஃபிரண்ட் இல்லே’ன்னு நிறைய பேர் கேக்கறாங்க. விரும்பறது எல்லாமே கிடைச்சுடணும்னு எதிர்பார்க்கக் கூடாது. வாழ்க்கையோட ரூல் இது!’’"விரும்பறது எல்லாமே கிடைச்சுடணும்னு எதிர்பார்க்கக் கூடாது. வாழ்க்கையோட ரூல் இது!’’

- மை.பாரதிராஜா