பொய்



எளிமையான கல்யாண நிகழ்ச்சி. தீபக்கும் அவன் மனைவி தன்யாவும் மணமக்களை வாழ்த்திவிட்டு, மொய் எழுதும் இடத்திற்கு வந்தார்கள்.‘‘என்னங்க... வசதியில்லாத குடும்பம். கஷ்டப்பட்டு கல்யாணத்தை நடத்தறாங்க. ஒரு ரெண்டாயிரம் ரூபா மொய் எழுதிடுங்க, கவுரவமா இருக்கும்!’’‘‘இல்ல தன்யா! வெறும் இருநூறு ரூபாதான் என் பேருக்கு எழுதப் போறேன்.’’

‘‘என்னங்க நீங்க... ரெண்டு பேரும் ஐ.டி கம்பெனியில வேலை செய்யறோம். மாசம் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல சம்பளம். ரெண்டாயிரம் ரூபா மொய் எழுதினா குறைஞ்சா போயிடுவீங்க..?’’ - கடுப்பாய் கேட்டாள் தன்யா.‘‘தன்யா, இவங்க என் உறவுக்காரங்க. நீ சொல்ற மாதிரி ரெண்டாயிரம் ரூபாய் மொய் எழுதினா, மூணு மாசம் கழிச்சு நடக்கப் போற என் தங்கச்சி கல்யாணத்துக்கு அதை அவர் திருப்பி எழுதணும்.

அந்த சமயத்துல ரெண்டாயிரம் புரட்டுறது அவங்களுக்கு சிரமமாக்கூட இருக்கலாம். அதனால என் பேர்ல இருநூறு ரூபா எழுதிடுறேன். லண்டன்ல இருக்குற உன் அம்மா பேர்ல ரெண்டாயிரம் எழுதிடலாம். அவங்களை யாருன்னு பொண்ணோட அப்பாவுக்குத் தெரியாது!’’கணவனின் தாராள மனசு கண்டு வியந்து, ‘‘அப்படியே எழுதுங்க..!’’ என்று பெருமையாகச் சொன்னாள் தன்யா.

ஐரேனிபுரம் பால்ராசய்யா