ஐந்தும் மூன்றும் ஒன்பது...



கஞ்சமலையின் குகைப் பரப்பை ஒட்டி, ஒரு லிங்க வடிவ குடவரை சிற்பத்தின் அருகே, அனேக கல்வெட்டு எழுத்துகள் காணப்பட்டன. நான் அவற்றைப் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். கல்வெட்டு எழுத்துகளை தெளிவாகக் காண எங்கள் துறை நிறைய வழிமுறைகளைக் கொண்டுள்ளது.

முதலில் ஒரு பிரஷ்ஷால் சுத்தம் செய்வது, பின் ரசாயனத் தண்ணீர் கொண்டு ஸ்ப்ரே செய்வது, அதற்குப்பின் கற்பாறை மேல் சுண்ணாம்புப் பூச்சை பூசுவது, அதற்கும் மேலாக அதை அழிப்பது, பின் கறுப்புத்தாள் கொண்டு ஒத்தி எடுத்தால் கல்வெட்டு எழுத்துக்கள் தாளில் அச்சாக்கம் செய்த மாதிரி  ஒட்டிக்கொண்டு வெளிப்படும். கறுப்புத்தாளில் வெள்ளை எழுத்துகள் துல்லியமாக தெரியும்.

அந்த நாளில் கல்வெட்டுகளில் வட்டெழுத்துகள்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டன. அது போக, பிராமி, தேவநாகரி, பாலி என்று அந்நாளைய மொழி எழுத்துகள்தான் கல்ெவட்டு எழுத்துகளாக விளங்குகின்றன. எழுத்துகளை வைத்தே ஓரளவு அவை எழுதப்பட்ட காலத்தைச் சொல்லிவிட முடியும். ஒரு ஐந்நூறு ஆண்டுகளுக்கு உட்பட்ட கால அளவில்தான் தமிழ் எழுத்துகள் அதிகம் பயன்பட்டன. அதற்குமுன் தமிழ் எழுத்து என்பது ஏடுகளுக்கான எழுத்தாகவே இருந்து வந்தது. தமிழர்கள் அதிகம் கல்வெட்டு முறைக்கு வரவில்லை.

கல்வெட்டு என்றாலே பௌத்தர்களும் சமணர்களுமே முன் நின்றனர்.  இவர்கள் தமிழை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. அதுவும்கூட இவர்கள் தமிழ் மண்ணில் கால் ஊன்றாமல் போகக் காரணமாக இருக்கலாம். சிலரோ, ‘சைவம் இவர்களை வளர விடாமல் தடுத்துவிட்டது. ஞானசம்பந்தர், அப்பர் போன்றவர்கள்  அரண் போல் நின்று தடுத்து விட்டனர்’ என்கின்றனர்.

எல்லாவற்றிலும் கொஞ்சம் போல உண்மை இருக்கவே செய்கிறது. இங்கே நான் புகைப்படம் எடுத்த கல்வெட்டில் கொம்பெழுத்துகள் இருந்தன. ஒற்றைச்சுழி கொம்பு, இரட்டைச்சுழி கொம்பு, கால் வாங்குதல் எனும் துணை எழுத்து என்று எல்லாமே காணப்பட்டன. அதை வைத்துப் பார்த்தபோது ‘மிகச் சமீபமாகவே செதுக்கப்பட்டிருக்க வேண்டும்’ என்று நான் கருதினேன்.

குறிப்பாக பெஸ்கி எனப்படும் வீரமாமுனிவர் காலத்துக்குப் பிறகே என்கிற முடிவுக்கு நான் வந்தேன். இவரே முற்றுப்புள்ளி, அரைப்புள்ளி, காற்புள்ளி, முக்காற்புள்ளி, ஆச்சரியக்குறி, இணைப்புச் சிறுகோடு, பிறை அடைப்புக்குறி என்று பலவற்றை நம் மொழியோடு சேர்த்து அவற்றைப் பயன்படுத்தியும் காட்டியவர்.

இத்தாலி நாட்டுக்கார பெஸ்கியின் காலம் 1680ம் ஆண்டிலிருந்து 1746 வரை ஆகும். எனவே, இது அவருக்குப் பிந்தைய கால எழுத்து என்று முடிவு செய்து, அதை இன்றைய தமிழ் மொழிக்கு மொழி மாற்றம் செய்தபோது ஆச்சரியமான தகவல் ஒன்று அதில் இருந்தது!’’  - கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...

கணபதி சுப்ரமணியனைக் காணவில்லை! பத்மாசினியும், ப்ரியாவும் நாலாபுறமும் பார்த்தனர். திரைப்படத்து ரீ ரெக்கார்டிங் போல பின்புலத்தில்  அழுகை, புலம்பல், விரட்டல், பிச்சை, வியாபாரக்குரல் என்று கலவையான சத்தங்கள்!அனந்தகிருஷ்ணன் ஓடி வந்து அவர்களை அணைத்தபடி அழைத்துக்கொண்டு அந்த பிராந்தியத்தை விட்டே விலகிச் சென்றார்.

சென்னையில் நிறையவே குடிசைப்பகுதிகளைப் பார்த்திருக்கிறாள் ப்ரியா. மின்சார ரயிலில் பயணிக்கும்போது கூவத்தின் நாற்றத்தை சைதாப்பேட்டை பாலத்தில் உணர்ந்திருக்கிறாள். ஆனால் மனிதர்களும் பிணங்களும் கூடிக் கிடக்கும் ஒரு பகுதியை இப்போதுதான் அவள் பார்க்க நேர்கிறது.

அது ப்ரியாவுக்குள் ஏராளமான சலனத்தை ஏற்படுத்தி விட்டதோடு, தாத்தா கணபதி சுப்ரமணியனைக் காணாததும், அவர் வராததும் பெரிய உறுத்தலாக இருந்தது. நடந்தபடியே கேட்டாள்.‘‘அப்பா... தாத்தா எங்க?’’

‘‘யாருக்குத் தெரியும்... இங்கதான் எங்கேயாவது இருப்பார்!’’‘‘காணோம்பா... அவரும் முத்தழகுவைப் பாக்கத்தான்  எங்க கூட வந்தார்!’’‘‘ஒருவேளை கார்கிட்ட இருக்கலாம். அவருக்கு இந்த ஸ்மெல் பிடிக்காது!’’‘‘நோ... தாத்தாவுக்கு இதெல்லாம் மேட்டரே கிடையாது!’’ - பேசிக்கொண்டே காரை நெருங்கினர். டோக்கன் போடுபவன் ஓடி வந்து நின்றான்.

எரிச்சல் பீறிட்டது ப்ரியாவிடம்...‘‘போ மேன் அந்தப் பக்கம்! ஒரு காருக்கு எத்தனை பேர் டோக்கன் போடுவீங்க? இது அரசாங்க இடம். இதுல உங்களுக்கு ஒரு வாழ்வு. கேட்டா, ‘எத்தனை லட்சத்துக்கு குத்தகை எடுத்துருக்கேன் தெரியுமா’ன்னு ஆரம்பிச்சிடுவீங்க. உங்களுக்கு இடங்கொடுத்தா, இங்க மூச்சு விடறதுக்கும் டோக்கன் போடுவீங்க!’’ - வெடித்தாள்.

அவளது தீர்க்கமான எதிர்ப்பின்முன் அவன் சற்று மடங்கித்தான் போனான். காரில் கணபதி சுப்ரமணியன் இல்லை! ‘‘அப்பா... அவர் எங்க கூடவேதாம்ப்பா வந்தார்!’’ என்று சிணுங்கினாள் ப்ரியா.‘‘போனை எடு. எங்க ஒழிஞ்சார்னு கேள்...’’ - என்ற அனந்த கிருஷ்ணன் முன் ப்ரியா வேகமானாள்.

ஒரு கையாலேயே செல்போனை எடுத்து அந்த ஐந்து விரல்களை மட்டுமே பயன்படுத்தி மிக வேகமாய்  அவள் கணபதி சுப்ரமணியனை தொடர்புகொண்டாள். ஆண்ட்ராய்டு போனின் திரையில் அவரது அழகிய புன்னகை முகம்!எல்லோரும் கேட்கட்டும் என்று ஸ்பீக்கரை ஆன் செய்தாள். ‘ஸ்விட்ச் ஆஃப்’ என்கிற பதிவேற்றப்பட்ட குரல்  ஒலித்தது.
‘‘அப்பா...’’

‘‘எங்க போனார் இவர்?’’‘‘எங்கேயோ போகட்டும். எப்பவும் எல்லாருக்கும் ஒருவழின்னா அவருக்கு மட்டும் தனி வழி. முதல்ல காரை எடுங்க. எனக்கு இந்த இடத்தை விட்டுப் போனா போதும்னு இருக்கு!’’ - பத்மாசினி படபடத்தாள்.

 மணி இரவு ஒன்பதரை! அருகிலிருந்த விளக்குக்  கம்ப ஒளியில் அவர்கள் ஓரளவு தெரிந்திட, ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி பத்மாசினியை நெருங்கியவளாக ‘‘நீங்க சிங்கர் பத்மாசினிதானே’’ எனக் கேட்க, பத்மாசினியிடம் ஒரு சிறு மாற்றம். புன்னகைக்கு மாறி ஆமோதித்தாள். இருவரும் பேசத் தொடங்க, அனந்தகிருஷ்ணன் ப்ரியாவிடம், ‘‘உன்கிட்ட நான் முக்கியமா ஒரு விஷயம் சொல்லணும்மா’’ என்று ஆரம்பித்தார்.
‘‘என்னப்பா...?’’

‘‘முத்தழகு சாகும்போது என்கூட பேச ரொம்பவே ட்ரை பண்ணியிருக்கா. பக்கத்துல இருந்த நர்ஸ் சொன்னாங்க. வள்ளுவர் கொண்டு வந்த அந்தப் பெட்டியைப் பத்தித்தான் பேச விரும்பியிருக்கா. ‘பெட்டி... பெட்டி...’ன்னும் முனகியிருக்கா!’’‘‘அப்படியா?’’

‘‘ஆமா... சாகற நிலைல ஒருத்தி பெட்டி பத்தி பேச நினைச்சா அப்ப ஏதோ முக்கியமான ஒண்ணாதானே இருக்கணும்?’’‘‘அப்சல்யூட்லி...’’- இருவரின் இடையே பத்மாசினி அந்த ரசிகையை விட்டு விலகி வந்தவளாக, ‘‘புறப்படலாம்’’ என்றபடியே காரில் ஏறினாள்.‘‘அம்மா, தாத்தா இன்னும் வரலை...’’‘‘அவர் எங்க ஒழிஞ்சாரோ... சின்னப்புள்ளையா என்ன? ஆட்டோவோ, டாக்சியோ பிடிச்சி வரட்டும்...’’ - என்றாள். அனந்தகிருஷ்ணனும் ‘‘புறப்படுங்க... இங்கதான் யாராவது டாக்டர் கிட்ட பேசிக்கிட்டிருப்பார்.  நான் பார்த்து கூட்டிக்கிட்டு வர்றேன்!’’ என்றார்.

கார் புறப்படத் தயாரானது. புறப்பட்டபோது கார் கதவு கண்ணாடியை இறக்கி, ‘‘நீங்க எப்ப வருவீங்க?’’ என்று அனந்தகிருஷ்ணனைக் கேட்டாள் பத்மாசினி.
‘‘தெரியாது.  எல்லாத்தையும் பக்காவா செட்டில் பண்ணிட்டுத்தான் வருவேன். இந்த மாதிரி விஷயத்துல அலட்சியமா இருந்தா பின்னால பெரிய கேஸ் ஆயிடும்.  பத்திரிகையும் டி.வியும் கான்ட்ரவர்ஸிக்கு அலை அலைன்னு அலையுறாங்க...

அப்புறம்  ‘மர்மப் பெட்டி - விபரீத விபத்து’ன்னு எதையாவது ஹெட்லைனா போட்டு அதுதான்  இந்தத் தமிழ்நாட்டுக்கே முக்கியமான பிரச்னைங்குற மாதிரி சித்தரிச்சிடுவாங்க’’ என்ற  அனந்த கிருஷ்ணனை ஒருவித கோபத்தோடு பார்த்தாள் பத்மாசினி. ‘‘இங்கே வர்றதுக்காகக் கிளம்பும்போது திரும்ப வந்துட்டார் அந்த வள்ளுவர். எனக்கு பகீர்னு ஆயிடுச்சு...’’ என்றாள் அந்தக் கோபம் அடங்காமல்!

‘‘சரி... சரி... புறப்படு! எல்லாத்தையும் அப்புறமா பேசிக்கலாம்’’ என அவர் சொன்னதும், கார் சீறிக்கொண்டு டிராஃபிக்கில் கலந்தது.அபார்ட்மென்ட்டின் மொட்டை  மாடி. கையில் பீர் பாட்டிலுடன் பெர்முடாஸ், டி-ஷர்ட் என்று  வர்ஷன் நின்று கொண்டிருந்தான். எதிரில் இரவு பத்து மணியின் சென்னை நகரத்து  மின்னொளிப் புள்ளிகள்!  

வானிலும் நட்சத்திரப் புள்ளிகள். இரவு நேர வங்காள விரிகுடாவின் மெல்லிய குளிர்காற்று உடலுபுக்கு இதமாக இருந்தது. மனதுதான் மாலையும் கழுத்துமாக நிற்கும் பலியாடாகத் தன்னை உணர்ந்தபடி இருந்தது.பெர்முடாஸ் பாக்கெட்டில் செல்போன்! பீர் பாட்டிலை ஒரு முழுங்கு போட்டுவிட்டு போனில் பேங்க் அக்கவுன்ட் பக்கமாய் போய்ப் பார்த்தான்.

டோட்டல் பேலன்ஸ் ஐம்பது லட்ச ரூபாயைக் கடந்து மிரட்டியது. பேன் கார்டு நம்பர் தந்தது நினைவுக்கு வந்தது.  ஒரு பெரிய ட்ரான்சாக்‌ஷன்! ஐ.டி. காரர்கள் நிச்சயம் என்கொயரி செய்வார்கள். எதற்கு இந்தத் தொகை என்று கேட்பார்கள். கேட்டால், ‘அபார்ட்மென்ட் வாங்க’ என்று கூறிவிடலாமா?

அவனுக்குள் எண்ணங்கள் குமிழ் குமிழாக வெடிப்பது போல் ஒரு பிரமை.‘எப்படி சிலர் ஆயிரக்கணக்கான கோடிகளை வைத்திருக்கிறார்கள்?  இந்த நடிகர்கள் தங்கள் கோடி கோடி சம்பளப் பணத்தை எப்படி பாதுகாப்பார்கள்? எவ்வளவுதான் நிலம் வாங்கிப் போட முடியும்?’ - அவனுக்குள் ஒரே கொந்தளிப்பு.
இடையிட்டாள் ப்ரியா, ‘முன்பே வா என் அன்பே வா’ ரிங்டோனில்.

‘‘சொல் ப்ரியா...’’
‘‘மொட்டை மாடியிலயா இருக்கே?’’
‘‘ம்... எப்படித் தெரியும்?’’

‘‘காத்தோட சத்தம் உன் குரலைத் தடுக்குதே...’’‘‘உனக்கு பயங்கர ஐ.க்யூ...’’‘‘உன் பாராட்டை ரசிக்கற மனநிலையில நானில்லைடா...’’
‘‘நான் மட்டும் என்ன? பேங்க் அக்கவுன்ட்ல பேலன்ஸை பாத்துப் பாத்து பயந்துக்கிட்டிருக்கேன்!’’
‘‘அதவிடு... இங்க தாத்தா எஸ்ஸாயிட்டார்!’’

‘‘வாட்..?’’
‘‘எஸ்ஸாயிட்டார்னா தெரியாதா... எஸ்கேப் மேன்!’’
‘‘அவர் என்ன ஜெயில்லயா இருந்தார்... எஸ்கேப் ஆக?’’
‘‘மொக்க போடாத வர்ஷன். முத்தழகுவைப் பாக்க ஹாஸ்பிடல் போன இடத்துல அவரைக் காணலை!’’
‘‘புரியும்படி சொல்லு...’’

- அவளும் விலாவாரியாகச் சொல்லி முடித்தாள்.
‘‘போன் பண்ணிப் பார்த்தியா?’’
‘‘ஸ்விட்ச் ஆஃப்!’’

‘‘காலைல கொடைக்கானல் புறப்படப் போறேன்று உங்ககிட்ட சொன்னவர், ஹாஸ்பிடல்ல காணோம்னா இடிக்குதே...’’
‘‘என்ன இடிக்குது?’’‘‘உன் ஐ.க்யூவுக்கு இது கூடவா புரியல! அவர் காணாமப் போக குழந்ைதயில்லை. யாரோ கடத்தியிருக்காங்க...’’
‘‘பயமுறுத்தாதடா...’’

‘‘ஆமா... நான் பேய் பாரு, உன்ன பயமுறுத்த...’’
‘‘அப்ப யாரா இருக்கும்?’’‘‘யாரா இருக்குமாவா? எல்லாம் அந்த சதுர்வேதி ஆட்களாதான் இருக்கும்!’’
‘‘அவங்ககிட்டதான் பெட்டிய கொடுத்துட்டோமே...’’
‘‘ஆமாம்ல!’’

‘‘என்ன ஊமால்ல..?’’
‘‘ப்ரியா... ஆஸ்பத்திரியில யார் கூடவாவது பேசிக்கிட்டு இருக்கலாம் இல்லையா?’’
‘‘மண்ணாங்கட்டி... ஆஸ்பத்திரி பாதாள சாக்கடைல கூட எட்டிப் பாத்துட்டார் என் டாடி. அவர் இல்ல..!’’
‘‘ஐ.ஸீ...’’

‘‘எனக்கு பயமா இருக்குடா... முத்தழகுவும்  சாகும்போது பொட்டி பொட்டின்னு ஏதோ சொல்ல வந்துருக்கா. அவ செல்போன்லயும் அவளை டைரக்ட் பண்ணின மெஸேஜஸ் இருக்கு...’’‘‘அய்யோடா... இதுல அவளும் கூட்டா?’’
‘‘நீ முடியாதுன்னு ஸ்டன்ட் அடிக்கவும் அவங்க முத்தழகுவை மடக்கியிருக்காங்கடா...’’
‘‘மை காட்.... அப்ப அவ ஏதாவது பண்ணியிருப்பாளோ?’’
‘‘அந்தப் பெட்டியில எக்ஸ்ட்ராவா சில அயிட்டம்ஸ் இருக்கறதா நான் சொன்னேன் இல்லையா?’’
‘‘ஆமாம்...’’

‘‘அதை முத்தழகு வச்சிருக்கலாம்...’’‘‘ப்ரியா... அப்ப அவ பெட்டியைத் திறந்து எடுத்துட்டான்னா சொல்ல வர்றே..?’’
‘‘இதெல்லாமே யூகம்தான்... உண்மையில என்ன நடந்ததுன்னு தெரியாது!’’
‘‘ப்ரியா, விஷயம் எங்கெங்கோ போகுதே... முத்தழகு சாவை போலீஸ் சந்தேகப்படறாங்களா?’’
‘‘இந்த நிமிஷம் வரை இல்ல... அவ பாடியையும்  எடுத்துட்டுப் போயிட்டாங்க!’’

‘‘சரி... உன் தாத்தா காணாம போயிட்டார்னு உன் அப்பா என்ன பண்ணாரு?’’
‘‘பொழுது விடியட்டும்... அவர் எங்கயாவது போய்ட்டு வந்திடுவார்னு நம்பறார்...’’
‘‘அதுக்கும் வாய்ப்பு இருக்குல்ல?’’‘‘ம்...’’‘‘ஏன் டவுட்டா ‘ம்’முங்கறே?’’

‘‘தப்பா ஏதோ நடந்துருக்கு வர்ஷன். அதுல எனக்கு சந்தேகமேயில்ல. உன்னையும் என்னையும் கூட வாட்ச் பண்ணிகிட்டு இருக்கலாம்...’’ - ப்ரியாவின் பேச்சில் வர்ஷன் வியர்க்கத் தொடங்கினான். சற்றுத் தள்ளி வாட்டர் டேங்கை ஒட்டி
அடர்வாய் ஒரு உருவம்!
- தொடரும்...

‘‘புதுசா வந்தவங்களுக்குக் கட்சியில் என்ன கிளாஸ்
நடத்தறாங்க..?’’‘‘பழைய கட்சி நினைப்பை மறப்பது எப்படின்னு சொல்லித் தர்றாங்க...’’             
‘‘கட்சியின் முக்கிய பிரமுகரை மைக் டெஸ்ட் பண்ண அனுமதிச்சு இருக்கக்கூடாது...’’
‘‘ஏன்... என்னாச்சு?’’

‘‘யாரையும் பேச விடாமல் அரை மணி நேரமா மைக் டெஸ்ட் பண்ணிக்கிட்டிருக்காரு!’’

‘‘அதிகாலையில் அரண்மனைக்குள்ளே என்ன ஆராய்ச்சி மணி சத்தம்..?’’
‘‘மகாராணியை எழுப்பறதுக்கு மன்னர்
வச்ச அலாரம் அது..!’’
- என்.பர்வதவர்த்தினி, சென்னை-75.

இந்திரா சௌந்தர்ராஜன்

ஓவியம்: ஸ்யாம்