பழைய ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது!



தெரிஞ்ச விஷயம் தெரியாத விஷயம்

ரிசர்வ் பேங்க் அதிரடி

கலவரத்தையும் குண்டுவெடிப்பையும் மட்டுமல்ல... கள்ள நோட்டுப் புழக்கத்தையும் கூட பாகிஸ்தான் சதி என்கிறார்கள் அரசியல்வாதிகள். அதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ... லாஜிக் இருக்கிறது. ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே முடக்கிவிடும் தாக்குதலாக கள்ளநோட்டுப் புழக்கம் அமையும்.

இதைத் தடுத்தே தீருவது என்ற நோக்கத்தில்தான் 2005க்கு முன்னால் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் ஜூன் 30ம் தேதிக்குப் பிறகு செல்லாது என அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.

இதற்கும் கள்ள நோட்டு ஒழிப்புக்கும் என்ன சம்பந்தம்? 2005க்கு முன் - பின் ரூபாய் நோட்டுகளில் உள்ள வித்தியாசங்கள் என்ன? பழைய ரூபாய் நோட்டுகளை இனி என்ன செய்ய வேண்டும்? அத்தனைக்கும் பதில் சொல்கிறார் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, மயிலாப்பூர் கிளையின் உதவிப் பொது மேலாளர் மணிசேகரன்...எது பழசு? அதை என்ன செய்வது?

‘‘2005க்கு முன் வெளியிடப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளில் அச்சடித்த வருடம் இடம்பெற்றிருக்காது. ஆனால், புது நோட்டுகளைப் பின்புறம் திருப்பிப் பார்த்தால், கீழ்ப்பகுதியில் அச்சடித்த வருடம் இருக்கும். இதுதான் அடையாளம். வருடம் இல்லாத ரூபாய் நோட்டுகளை 2005க்கு முந்தையது என பாவித்து பொதுமக்கள் அவற்றைப் புதிய நோட்டுகளாக மாற்றிக்கொள்ள வேண்டும். எந்த வங்கியிலும் மாற்றலாம். அந்த வங்கியில் நமக்கு கணக்கு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஐம்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெருந்தொகையை அப்படி மாற்ற வேண்டுமானால் மட்டும் பான் கார்டு கேட்பார்கள்!’’

வெள்ளிப்பட்டை‘‘பழைய ரூபாய் நோட்டுக்கும் புதியவற்றுக்கும் இடையே உள்ள பாதுகாப்பு வித்தியாசங்கள் நிறைய. அதில் முக்கியமானது வெள்ளிப் பட்டை. பழைய நோட்டிலும் இது இருக்கும். ஆனால் இன்றைய நோட்டுகளில் உள்ள வெள்ளிப்பட்டை ஒரு பக்கத்தில் பார்க்கும்போது பச்சையாகவும் இன்னொரு பக்கத்தில் பார்க்கும்போது நீலமாகவும் தெரியும்.

இது பழைய நோட்டுகளில் இருக்காது!’’ரகசியக் குறியீடுகள்‘‘ஒரு 500 ரூபாய் புது நோட்டை வெளிச்சத்துக்கு முன்னால் வைத்துப் பார்த்தால் முன்புறத்திலுள்ள வெண்பகுதியில் காந்தியின் படத்துக்குப் பின்னால் 500 என்ற இலக்கம் பக்கத்தில் தெரியும். இது பழைய நோட்டுகளில் கிடையாது. அதே போல், இந்த வெண்பகுதிக்கு அருகிலுள்ள்நோட்டின் முன்புறத்திலுள்ள ஒரு பூ போன்ற வடிவத்தை வெளிச்சத்துக்கு முன் வைத்துப் பார்த்தால் அதற்கு உள்ளே பின்புறமுள்ள இம்ப்ரஷனும் சேர்ந்து 500 என்ற எண் வடிவம் தெரியும்.’’

பழசை ஒழித்தால் கள்ளநோட்டு ஒழியுமா?‘‘நிச்சயமாக. 2005க்கு முன் அச்சடித்த நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்கள் குறைவு என்பதால் அதில் கள்ளநோட்டு தயாரிப்பது எளிதாகிவிடுகிறது. பெருமளவு கள்ளநோட்டுகள் புழங்குவதும் பழைய நோட்டுகளாகத்தான். இப்போது ரிசர்வ் வங்கி பழைய நோட்டுகளுக்கு மரண அறிவிப்பு செய்துவிட்டதால் கள்ளநோட்டுக் கும்பல்கள் கலக்கத்தில்தான் இருப்பார்கள். காரணம், பழைய ரூபாய்களோடு கலந்து விடப்பட்ட கள்ள நோட்டுகள், இனி மாற்றப்படுவதற்காக வங்கிக்கு வரும்போது பிடிபட்டுவிடும்.

இதுநாள் வரை பெருமளவில் செலவு செய்து அச்சடித்து வைத்திருக்கும் பழைய வடிவிலான கள்ள நோட்டுகளை என்ன செய்வது என்ற இயலாமையிலும் அவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்தப் பெரிய நஷ்டம், வருங்காலத்தில் கள்ள நோட்டுக் கும்பலின் ஆதிக்கத்தை அடியோடு பிடுங்கிப்போடும். மேலும், கள்ளநோட்டில் கரைகண்ட கும்பல்களே திணறக்கூடிய வகையில் ரகசியக் குறியீடுகள், தொழில்நுட்ப சூட்சுமங்கள் என உயர்தரத்தில் புதிய இந்திய ரூபாய் நோட்டுகள் இருப்பதால், இனி கள்ளநோட்டு அச்சாபீஸ்களுக்கு மூடுவிழாதான்!’’

- டி.ரஞ்சித்
படம்: ஆர்.சி.எஸ்