சர்வதேச கிரிக்கெட்டில் அம்பயராக ஒரு தமிழர்!



இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு தமிழர் இடம்பிடிப்பதுகூட சாத்தியமாகி விடுகிறது; ஆனால் சர்வதேசப் போட்டிகளில் நம்பகமான அம்பயராக இருக்கும் தகுதியோடு ஐ.சி.சியின் எலைட் பேனலில் ஒரு இந்தியருக்கு இடம் கிடைப்பது அவ்வளவு அரிது. உலகம் முழுக்க இருந்து வெறும் 12 பேர் மட்டுமே இருக்கும் அந்தக் குழுவில் இணைந்து அதை சாதித்திருக்கிறார் தமிழகத்தின் ரவி.

ஒன்றல்ல... இரண்டல்ல... சுமார் 11 வருடங்களுக்குப் பிறகு ஐ.சி.சியின் எலைட் பேனல் அம்பயராகி இருக்கும் இந்தியர். நமது சென்னைக்காரர். உள்ளூர் ஐ.பி.எல் தொடங்கி உலகக் கோப்பை போட்டிகள் வரை இவரின் நடுவர் பணி கனகச்சிதமானது. அதனாலேயே, இவரின் பெயர் ஐ.சி.சி.யின் உயர்மட்ட நடுவர் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டது. தற்போது இலங்கை-பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்த அவரை பெசன்ட் நகர் வீட்டில் சந்தித்தோம்!

‘‘ரொம்ப நாளா இப்படியொரு வாய்ப்புக்காகக் காத்துக்கிட்டிருந்தேன். இப்போ சந்தோஷமா இருக்கு. இன்னும் கூடுதல் பொறுப்பு சேர்ந்திருக்கு. ஆனா, எப்போதும் போல என்னோட பணியை சரியா செய்வேன். சப்போர்ட் பண்ணின பி.சி.சி.ஐ.க்கும் தேர்ந்தெடுத்த ஐ.சி.சி.க்கும் நன்றி!’’ என உற்சாகமாக பேசும் ரவி, தமிழ்நாடு கிரிக்கெட்டில் முதல் டிவிஷன் லீக் ஆடிய வீரர். தமிழகத்தின் எஸ்.வெங்கட்ராகவனுக்குப் பிறகு அம்பயராக அந்த இடத்தை நிரப்பியிருக்கும் மனிதர்.

‘‘எனக்கு சொந்த ஊரே ெசன்னைதான். பள்ளிப் படிப்பு தி.நகர் ராமகிருஷ்ணா ஸ்கூல்ல. அப்புறம், ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் பி.காம். அடுத்து, பச்சையப்பாவில் எம்.காம் முடிச்சிட்டு உடனே ஐ.சி.எஃப்பில் வேலைக்குப் போயிட்ேடன். ஸ்கூல்ல படிக்கும்போதே கிரிக்கெட் மேல ரொம்ப ஆர்வம். என்னோட அப்பா சுந்தரம், பெங்களூரு டெலிபோன் டிபார்ட்மென்ட்ல வேலை பார்த்துக்கிட்டே கிரிக்கெட் ஆடிட்டு இருந்தார். என்னோட கிரிக்கெட் ஆர்வத்துக்கு அவர்தான் காரணம்.

விளையாட்டு வீரர்ங்கற தகுதியாலதான் எனக்கு ஈஸியா வேலை கிடைச்சது. ரெண்டு வருஷம் ஐ.சி.எஃப்.ல வேலை பார்த்தேன். பிறகு 1989ல் ரிசர்வ் பேங்க்ல வேலை கிடைச்சு அங்குள்ள அணிக்காக விளையாடினேன். ஓபனிங் பேட்ஸ்மேன் ப்ளஸ் லெஃப்ட் ஆர்ம் ஸ்பின் பவுலர்னு நான் ஆல் ரவுண்டர். ஒவ்வொரு சீசனிலும் ஐந்நூறு ரன்களுக்கு குறையாம அடிப்பேன். ஆனாலும், எனக்கு தமிழ்நாடு டீம்ல விளையாட வாய்ப்பு அமையலை.

அப்போ தமிழ்நாடு டீமே ரொம்ப ஸ்டிராங்கா இருக்கும். டபிள்யு.வி.ராமன், சிவராமகிருஷ்ணன்னு என் பேட்ச் வீரர்கள் செமயா ஆடுவாங்க. தொடர்ந்து ஆட முடியாததால என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். கிரிக்கெட் மேல தீராத காதல். அதான் அம்பயர் வேலை பார்க்கலாம்னு வந்துட்டேன். ஆரம்பத்துல, சென்னையில நடந்த லீக் மேட்ச்களுக்கு அம்பயரிங் பண்ணிட்டு இருந்தேன்.

1998ல இந்திய கிரிக்கெட் வாரியம், அம்பயர் பணிக்கான தேர்வு நடத்துச்சு. அதுல பாஸானாதான் ரஞ்சி போட்டிகளுக்கு நடுவர் பணி செய்ய முடியும். எழுத்துத் தேர்வு, பிராக்டிகல், வைவான்னு கஷ்டமான இந்த டெஸ்ட்ல பாஸானேன். 99ம் வருஷத்திலிருந்து ரஞ்சி போட்டி, நாக் அவுட் சுற்றுகளுக்கு அம்பயரிங் பண்ண ஆரம்பிச்சேன். ரிசர்வ் பேங்க் பணி, அம்பயர் வேலைன்னு என் வாழ்க்கை போயிட்டு இருந்துச்சு.

இந்த நேரத்துலதான் 2009ல் தென் ஆப்ரிக்காவுல நடந்த ஐ.பி.எல். போட்டிகளுக்கு அம்பயரிங் பண்ற சான்ஸ் கிடைச்சது. தொடர்ந்து, அடுத்த வருஷமும் அதுல சிறப்பா பணியாற்றினேன். என்னோட பணியைப் பார்த்து 2011ல் சர்வதேசப் போட்டிகளுக்கு நடுவராகப் பணியாற்றும் நிலைக்கு உயர்த்துனாங்க. முதல்ல டி.வி அம்பயரா இருந்தேன். அதை சிறப்பா செய்ததால ஃபீல்டு அம்பயரா தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போ தொடங்கி இந்த உலகக் கோப்பை போட்டி வரை அம்பயரா இருந்துட்டேன். எல்லாத்திலும் சிறப்பா செஞ்சேன். ரெண்டு வருஷம் ‘சிறந்த உள்ளூர் போட்டி அம்பயர்’ விருதை வாங்கியிருக்கேன்.

உலகம் முழுக்க மொத்தமே 12 அம்பயர்கள்தான். இந்தக் குழுவைத்தான், ‘ஐசிசி எலைட் பேனல் நடுவர் குழு’ன்னு சொல்வாங்க. இப்போ நானும் அதுல ஒருத்தன். இப்படி தேர்ந்தெடுக்கப்படும் நடுவர்களை உலகம் முழுவதும் நடக்கும் போட்டிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுப்பும். வருஷத்துல 65 நாட்கள் இப்படி வேலை பார்க்கணும்!’’ என்கிற ரவிக்கு முதுகெலும்பாக இருப்பவர் மனைவி ஜெய. மகன்கள் ஹரி மற்றும் கிருஷ்ணா.

‘‘மூத்தவன் ஹரி பத்தாம் வகுப்பு படிக்கிறான். இளையவன் ஏழாவது. இரண்டு பேருக்குமே கிரிக்கெட்னா உயிர்’’ என புன்னகைக்கும் ரவியைத் தொடர்கிறார் மனைவி ஜெய: ‘‘இதை கிரிக்கெட் ஹோம்னுதான் சொல்வேன்.

மூணு பேருமே சதா கிரிக்கெட் பத்தியே பேசுவாங்க; மேட்ச் பார்ப்பாங்க. ஆனா, அவரோட வேலைதான் ரொம்ப கஷ்டம். எட்டு மணி நேரம் கால்கடுக்க வெயில்ல நின்னுட்டு வருவார். வீட்டுக்கு வந்ததும் `அப்பாடா’ன்னு ெசால்வார்னு நினைப்பேன். ஆனா, அவர் ஒருநாள் கூட அப்படிச் சொன்னதில்ல. எனக்குதான் பார்க்க கஷ்டமா இருக்கும். அவருக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறதே கிரிக்கெட்தான்!’’

‘‘எனக்கு கிரிக்கெட் தவிர வேற எந்த கேமும் தெரியாது. இப்போ வெளிநாடுகள்ல அம்பயரிங் பண்றதால, அவங்களோட சேர்ந்து கோல்ஃப் கத்துட்டு இருக்கேன். அம்பயர்கள்ல டேவிட் ஷெப்பர்டு ரொம்ப பிடிக்கும். அவர் மாதிரி பேரெடுக்கணும். இப்போ 12வது இடத்துல இருக்கிற நான் முதல் இடத்துக்கு முன்னேற முயற்சிக்கணும்.

அப்புறம், ஒவ்வொரு வருஷமும் ஐ.சி.சி. தர்ற சிறந்த அம்பயருக்கான விருதையும் வாங்கணும். இப்போதைக்கு இதுதான் என்ேனாட கனவு, லட்சியம் எல்லாமே!’’ என்கிறார் ரவி. ‘‘நாங்களும் எதிர்காலத்துல சிறந்த கிரிக்கெட் வீரர்களாவோ, அப்பா மாதிரி சிறந்த அம்பயராவோ ஆவோம்!’’ என்கிறார்கள் பிள்ளைகள் அப்பாவின் தோள் சாய்ந்தபடி! ஒவ்வொரு வருஷமும் ஐ.சி.சி. தர்ற சிறந்த அம்பயருக்கான விருதை வாங்கணும்.
இப்போதைக்கு இதுதான் என்ேனாட கனவு!

- பேராச்சி கண்ணன்
படங்கள்: புதூர் சரவணன்