சென்றது



ஆரோவில் மாத்ரி மந்திர். பாண்டிச்சேரியின் வறட்சியிலிருந்து சட்டென வனப்பிரதேசத்தில் நுழைந்த உணர்வைத் தந்தது பாதை. அன்னை என்று அழைக்கப்படும் மிர்ரா அல்ஃபாஸாவின் கனவு மையம் அமைந்திருக்கும் வளாகம் முழுவதும் மலர்கள் பூத்துக்கிடந்தன. தியானம் நடைபெற்றுக்கொண்டிருந்ததால் பிரமாண்ட ஆலமர நிழலில் பாதி வழியில் நிறுத்தப்பட்டேன்.

ஆலமரத்தின் விழுதுகளைத் தழுவி முத்தமிட்டு சீனப்பெண்களின் கூட்டம் ஒன்று கடந்து சென்றது. அருகில் இருந்தவரிடம் ஏதோ ரகசியமாகக் கேட்டேன். கவனித்த பிரெஞ்சுப் பெண்மணி தொலைவில் இருந்து ‘உஷ்’ சைகை காட்டினார். பறவைகள் எங்கெங்கும் பாடிக்கொண்டிருந்தன.

தங்கக்கூரை ஆலயம் சூரிய ஒளியில் தகதகத்தது. சுழல்பாதையில் தியான மண்டபத்தை நோக்கிச் சென்றோம். சிறிய கதவின் வழியே நுழைந்தபோது சட்டென பேரமைதிக்குள் விழுந்ததுபோன்ற திகைப்பு. வெண்ணிற பளிங்கிலான தியானக்கூடத்தைச் சுற்றிலும் 8 தூண்கள். நடுவில், வட்ட வடிவில் ஒரு ஸ்படிகக் கல், ஸ்வஸ்திக் அமைப்பு போன்ற கம்பியின் நடுவில் மின்னுகிறது.

சூரியனின் ஒரே ஒரு ஒளிக்கீற்று அந்த கண்ணாடிப்பந்தில் பட்டு தியானக்கூடம் முழுவதற்கும் ஒளியூட்டுகிறது. தியானத்தில் அமர்ந்தபோது நமது இதயத்துடிப்பைத் தவிர இந்தப் பிரபஞ்சத்தில் எதுவுமே இல்லை என்று தோன்றியது. மனம் இனம் புரியாத சஞ்சலத்திலும் வேதனையிலும் விம்மியது. அழவேண்டும்போல தோன்றிய கணத்தில் வெளியேறினேன். 5 நிமிடங்களே ஆகியிருந்தது. கட்டிடக்கலையில் அற்புதமான அந்த இடத்திலிருந்து மீண்டபோது, அமைதியின் பாதை எவ்வளவு கடினமானது என்ற எண்ணம் மட்டுமே மிஞ்சியிருந்தது.

- கவிஞர் மனுஷ்யபுத்திரன்