
‘‘நல்லாத்தானே இருக்கோம்... என்னையும் கூப்பிட்டுட்டுப் போனா என்ன? என்னைவிட அஞ்சு வயசு சின்னவன் என் பெரியப்பா மகன்... ஒரு மாசமா ஆஸ்பத்திரியில படுத்துக் கிடக்கான். அவனைப் போய் பார்க்கிறதுக்கு மகனும் மருமகளும் மட்டும் போயிருக்காங்க.
ஏன் என்னை வீட்ல விட்டுட்டுப் போனாங்களோ...’’ - 75 வயது சதாசிவம் புலம்பிக் கொண்டிருந்தார்.. அதையே ஆமோதித்தாள் மனைவி பார்வதி.
‘‘ஏம்மா... ஆஸ்பத்திரிக்கு மாமாவையும் என்னையும் கூப்பிட்டுட்டுப் போயிருக்கலாமே. அவனும் சந்தோஷப்பட்டிருப்பானே.
நீங்க மட்டும் போய்ட்டு வந்துட்டீங்க...’’ - மருத்துவமனைக்குப் போய் வந்த மருமகளிடம் கொஞ்சம் காட்டமாகவே கேட்டுவிட்டாள் பார்வதி.
யோசிக்காமலே பதில் சொன்னாள் மருமகள்... ‘‘உங்களையும் கூப்பிட்டுட்டுப் போயிருக்கலாம் அத்தை.
ஆனா, ஆஸ்பத்திரியில இருக¢கிறவர் நம்ம மாமாவை விட ரொம்ப சின்னவர். நம்ம மாமாவை அங்க பார்க்கிறவங்க யாரும், ‘அவரை விட வயசு கூடதான்... ஆனா, இவரு எப்படி திடகாத்திரமா இருக்கார் பாரு’ன்னு நினைச்சிடக் கூடாதில்லே அத்தை. அதான் நாங்க உங்களை கூப்பிட்டுட்டுப் போகலை...’’
மருமகளை மகளாகப் பார்த்துக் கொண்டிருந்தார் பார்வதி!
- கே.தியாகராஜன்