கடமை



காலைப்பொழுது நன்றாகவே விடிகிறது. சேவல் முடிந்த மட்டும் ‘கொக்கரக்கோ’ என குட் மார்னிங் சொல்லிவிட்டு இரைதேடும் கடமைக்குப் புறப்படுகிறது.

ஐந்தரை மணிக்கெல்லாம் ‘அம்மா பால்’ சத்தம் ஒலிக்கிறது. செய்தித்தாள் தொப்பென வீட்டு வாசல் கதவில் முட்டி விழுகிறது.

மூன்றாவது வீட்டில் திறக்காத வாசல் கேட்டைத் தட்டிக் கொண்டு தவமிருக்கிறாள் அந்த வீட்டின் வேலைக்காரி.
தெருமுனை டீக்கடையில் பால் ஆவி பறக்கிறது.

பக்கத்துத் தெரு கோயிலில் பக்திப்பாடல் ஒலிக்கிறது. ஆனால், தெருதான் இன்னும் விழிக்கத் தயாராக இல்லை.

‘‘என்ன மனிதர்கள்? விடிகாலை அஞ்சரை மணிக்குக்கூட தூக்கம் கலைந்து எழாமல், இன்னும் என்ன தூக்கம் வேண்டிக் கிடக்கு? தேர்வுக்குப் படிக்கிற பிள்ளைகளுமா தூக்கத்தில் நெளிகிறார்கள்? விடியற்காலையில் எழ யாருமே இந்தத் தெருக்காரர்களுக்குச் சொல்லித் தரவில்லையா?

கொஞ்சம்கூட கடமை உணர்ச்சியே இல்லாமல் தூங்குகிறார்களே’’ என்று எரிச்சலுடன் கூறியபடியே, தலையை மட்டும் தூக்கி ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்துவிட்டு, மீண்டும் தலையணையோடு ஐக்கியமாகிறார் நைட் டூட்டி முடித்துவிட்டு வந்து படுத்த ரங்கண்ணா!

- பர்வதவர்த்தினி