
‘‘நம்ம பசங்களை இந்த லீவ்ல மதுரையில இருக்கிற என் அக்கா வீட்டுக்கு அனுப்பிட்டா ஒரு மாசம் ஃப்ரீயா இருக்கலாம். காலைல நாலு மணிக்கே எழுந்து டிபன், சாப்பாடு பண்ணணும்ங்கற அவசரம் இல்லை. பிள்ளைங்க தொந்தரவு இல்லாம தோழிகளோட ஷாப்பிங் போகலாம்’’ என்று கனவுகளை கணவன் ஜனாவிடம் பகிர்ந்துகொண்டாள் ஜனனி.
இரவே இரண்டு பையன்களையும் ரயில் ஏற்றிவிட்டு வீடு திரும்பினார்கள் இருவரும். போன் ஒலித்தது. கோயம்புத்தூரிலிருந்து ஜனாவின் தங்கை...
‘‘அண்ணா... நீ ரொம்ப நாளா ஆசைப்பட்டதை நிறைவேற்றப் போறேன்!’’
‘‘என்னம்மா..?’’ - ஆவலோடு கேட்டான் ஜனா.
‘‘நாளைக்குக் காலை ஸடேஷனுக்கு போய், சேரன் எக்ஸ்பிரஸில் பார்... உன் மூணு மருமகன்களும் வந்து இறங்குவாங்க. அவங்க ஒரு மாசம் தங்கியிருக்கணும்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டியே... சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னுதான் முன்கூட்டியே சொல்லலை. திருப்திதானே... அண்ணிக்கும் சந்தோஷமா இருக்கும்’’ - பதிலுக்குக் காத்திராமல் போனை வைத்தாள் அவள்.
‘‘உங்க தங்கை பசங்க சுத்த வாலுங்களாச்சே... என் கனவெல்லாம் வெறும் பகல் கனவாயிடுச்சே!’’ - சொல்லும்போதே ஜனனிக்கு தலை
சுற்றியது.
- எஸ்.ராமன்