
குட்டையின் ஓரமாகப் போடப்பட்டிருந்த அந்த துணி துவைக்கிற கல்லுக்குத் திடீரென யாரோ மஞ்சள் பூசிக் குங்குமம் தடவியிருந்தார்கள். ஒரு பெண்மணி கையிலிருந்த மலரை அதன் மீது வைத்து, கண்கள் மூடி நீண்டநேரம் மனமுருக வணங்கி எழுந்தாள்.
அவளருகே சென்று கேட்டேன்... ''எனக்குத் தெரிஞ்சு ரொம்ப காலமா இது துணி துவைக்கிற கல். நிறைய சலவைத் தொழிலாளிகள் துணி துவைச்சு நானே பார்த்திருக்கிறேன். இதைப் போய் சாமியாக்கிச் சுத்தி வணங்கறியே? நாளைக்கு ஊரும் இதையே செய்யத் தொடங்கிடாதா?’’
இதைக் கேட்டதும் அவள் கோபப்படவில்லை. சிரிக்கவுமில்லை. வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பேசினாள்:
‘‘தெரியுங்க பெரியவரே... எங்க குடும்பத்தில எல்லோருமே இதில்தான் துவைச்சுத் தொழில் செய்தோம். என் வீட்டுக்காரர் இப்ப தொழிலுக்கு வர முடியாம நோய்ல படுத்திட்டாரு. எந்த தெய்வமும் கை கொடுக்கல. இத்தனை நாள் சோறு போட்ட இதையே சாமியாக்கிக் கும்பிடறேன்...
இந்தச் சாமி எங்களைக் கைவிடாதுன்னு நம்பறேன்...’’
அங்கிருந்து அகன்றபோது என் மனசு கல்லாகக் கனத்தது.
- பம்மல் நாகராஜன்