நாடக மேடையில்
அது 1950ம் ஆண்டு. 'வாழ்க்கை’ என்றொரு படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஓடு ஓடென்று ஓடியதோடு, ஓர் அகில இந்திய திரை நட்சத்திரத்தையும் சிருஷ்டி செய்தது. அதற்கு முன்பு தெற்கில் தயாரிக்கப்பட்ட சில படங்கள் வடக்கிலும் நன்றாக ஓடியிருக்கின்றன. ஆனால் ஒரு நட்சத்திர நடிகையை அளித்ததில்லை. அந்த நட்சத்திரம், வைஜயந்திமாலா.
தமிழ் ‘வாழ்க்கை’ படத்தில் ஒரு காட்சி.
கெட்டவன் ஒருவன், ஒரு கிராமத்துப் பெண்ணை ஏமாற்றி விட்டுச் சென்னைக்குத் திரும்பி வந்து கதாநாயகியையும் மணக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறான். அந்தக் கிராமத்துப் பெண் இல்லாத கஷ்டம் அனுபவித்து, கடைசியில் கையில் குழந்தையுடன் கயவன் வீட்டைக் கண்டுபிடித்து வந்து அவன் முன் நிற்கிறாள்.
அவன் பதறிப் போய் விடுகிறான். அந்தப் பதற்றத்தில் சிகரெட் டப்பாவை எடுக்கிறான். அந்த நாளில் ஐம்பது சிகரெட்கள் கொண்ட தகர டப்பாக்கள் கிடைக்கும். அவன் பதற்றத்தில் ஒரு சிகரெட்டை எடுக்க, டப்பா கை தவறிக் கீழே விழுந்து அவ்வளவு சிகரெட்களும் தரையில் சிதறி விழும். அந்த ஒரு காட்சி பார்ப்போரின் மூச்சை ஒரு கணம் நிறுத்தி விடும். அந்தக் காட்சியில் கயமையின் மொத்த உருவமாகத் தோன்றியவர் நடிகர் எஸ்.வி.சஹஸ்ரநாமம்.
சென்னை வந்த 1952 இறுதி யில் ஒரு நாடக விமர்சனம் படித்தேன். புதுமையாக இருந்தது. ரவீந்திரநாத் தாகூரின் ஒரு சிறுகதையைத் தமிழ் நாடகமாக்கி இருந்தார்கள். அதில் சஹஸ்ரநாமம் நடித்து, டைரக்டும் செய்திருப்பார். அந்த நாட்களில் சென்னையில் நாடகம் என்றால் மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபாவில் போடுவார்கள்.
ஒன்று அல்லது இரண்டு முறைதான் நாடகம் நடத்தப்படும். என்னால் ‘கண்கள்’ நாடகத்தைப் பார்க்க முடியவில்லை. ஆனால் சில மாதங்களிலேயே இன்னொரு நாடகத்தை அதே குழு போட்டது. இதை நான் முதல் நாளிலேயே பார்த்தேன். ‘சேவா ஸ்டேஜ்’ என்ற அந்தக் குழுவின் இரண்டாவது நாடகத்தின் பெயர், ‘இருளும் ஒளியும்’.
எனக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது. எஸ்.வி.சஹஸ்ர நாமத்தின் சகோதரி மகன் நான் பணி புரிந்த திரைப்பட ஸ்டூடியோவில் பணி புரிந்து வந்தார்! எப்போதும் வெள்ளை வெளேரென்ற ஷர்ட்டும் பேன்ட்டும் போட்டுக்கொண்டு வருவார். அமைதியின் உருவமாக இருப்பார். எஸ்.வி.எஸ் பல சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் நண்பர். என்னுடன் பணி புரிந்து வந்த என்.வி.ராமநரசு என்கிற ராஜாமணி, வ.ரா.வின் சிஷ்யர். வ.ரா. போலவே தலையை வாரிக் கொள்வார். அலுவலகம் தவிர இதர நேரங்களில் வ.ரா. மாதிரியே உடை உடுத்துவார். ‘இருளும் ஒளியும்’ நாடகத்திற்குப் பிறகு நான் அவருடைய சீடனாக என்னை எண்ணிக் கொண்டேன்.
ராமநரசுதான் என்னை எழுத வைத்தவர். அந்த நேரத்தில்தான் புல்லாங்குழல் ஸ்ரீனிவாசன் நண்பனானான். அகில இந்திய வானொலி ஒரு முழு நீள நாடகப் போட்டி நடத்தியது. அதே நேரத்தில் மத்திய அரசின் குடும்ப நல அமைச்சரகம் ஆங்கிலத்தில் நாடகப் போட்டி நடத்தியது. இரண்டிற்கும் நான் நாடகங்கள் அனுப்பினேன். இதெல்லாம் ‘இருளும் ஒளியும்’ நாடகத்தைப் பார்த்து நான் பெற்ற உற்சாகம்.
என் எதிர்காலம் நாடகத்தில்தான் இருப்பதாக அப்போது எண்ணினேன். எனக்கு மொழி ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. அப்போது சென்னைக்கு எம்.ஆர்.ஏ. என்றொரு சர்வதேசக் குழு வந்தது. அக்குழு இரு நாடகங்களைச் சென்னை அண்ணாமலை மன்றத்தில் நடத்தியது. அவர்கள் ஒரு புது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அரங்கிலேயே சந்திர ஒளி, சூரியோதயம் இரண்டையும் வியக்கத்தக்க வகையில் பின்னணி இசையோடு நடத்திக் காட்டினார்கள். இதை ஓரளவு சேவா ஸ்டேஜ் ‘இருளும் ஒளியும்’ நாடகத்தில் பயன்படுத்தினார்கள். இரு நாடகங்களையும் ராமநரசுதான் எழுதியிருந்தார்.
‘கண்கள்’ நாடகத்தை பிறகு எஸ்விஎஸ் திரைப்படமாகவும் உருவாக்கினார். சிவாஜி கணேசன், சந்திரபாபு, பண்டரி பாய் போன்றோர் பங்கு பெற்றும் படம் பெரிய வெற்றி அடையவில்லை. ராமநரசின் அடுத்த நாடகம் ‘வானவில்’.
இதில் சஹஸ்ரநாமம், சிவாஜி கணேசனுடன், எம்.என்.ராஜமும் நடித்தார். நாடகம் வித்தியாசமாக இருந்தது. ஆனால் வெற்றி என்று கூற முடியாது. பிற்காலத்தில் இதே நாடகத்தை பி.எஸ்.ராமையா சரி செய்யப் பார்த்தார். பெரிய மாறுதல் இல்லை.
ஓரிரண்டு முறை ‘வானவில்’ நாடகத்தில் நடித்த எம்.என்.ராஜம் அவர்களுக்குத் திரைப்பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. அவர் மேற்கொண்டு பங்கு பெற முடியாமல் போகவே புதிய கதாநாயகியைத் தேட வேண்டியதாயிற்று. அப்போதுதான் பிரமிளா என்ற பெண் வந்தார். அவர் தெலுங்குப் பெண். ஆயினும் அவரை நம்பி அண்ணாமலை மன்றத்தில் ‘வானவில்’ நாடகம் போடப்பட்டது. பிரமிளா ‘தொழிலாளி’ என்ற படத்தில் தேவிகா என்ற பெயருடன் நடித்துப் புகழ்பெற்றார்.
இதன் பிறகு நாடகக்குழுவுடன் என் உறவு சிறிது சிறிதாகத் தேய்ந்து முடிந்தே போயிற்று. ராமநரசு சென்னையை விட்டு புனா சென்றுவிட்டார். நான் நாடகம் எழுதும் முயற்சியைக் கைவிட்டு விட்டேன்.ஆனால் நாடகம் என்னை விடவில்லை. சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாநி தன்னுடைய பரீக்ஷாவின் முதல் நாடகமாக ‘நாற்காலிக்காரன்’ என்ற ஓரங்க நாடகத்தை சென்னை மியூஸியம் தியேட்டரில் மேடையேற்றினார். அதில் நாற்காலிக்காரன் யார்? நான்தான்!
நான் மக்கள் முன் தோன்ற என்றுமே தயங்கியதில்லை. நாற்காலிக்காரனாக நடித்தபிறகு இந்திரா பார்த்தசாரதி எழுதிய ‘போர்வை போர்த்திய உடல்கள்’ நாடகத்தில் ஒரு வேஷம். இதில் ஒரு விசேஷம்...
எனக்கும் ‘குடிசை’ டைரக்டர் ஜெயபாரதிக்கும் ஒரு போட்டி. அவர் வெற்றி பெற்று விடுவார்; நான் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்து விடுவேன்.ஞாநி தன் குழுவில் பாலாசிங் போன்ற பல நல்ல நடிகர்களை மேடையேற்றினார். ஆனால் என்னைக் கைவிட மனதில்லை. அவருக்காக மேடையோடு மட்டுமின்றி, அவரது தொலைக்காட்சித் தொடர்களுக்காக வீடியோ கேமரா முன்பும் தோன்றியிருக்கிறேன். அவர் ஒரு முறை எனக்குப் பணம் கூடக் கொடுத்தார்!
அறுபது வருடங்கள் கடந்து விட்டன. இன்னும் ஒரு சின்ன குறை. ஒருமுறை இங்கிலாந்தி லிருந்து ஒரு நாடக டைரக்டர் சென்னையில் ஒரு மாதம் தங்கி சென்னை மியூசியம் தியேட்டரில் ஷேக்ஸ்பியரின் ‘ஒதெல்லோ’ நாடகத்தை சென்னை இளைஞர்களைக் கொண்டு நடத்தினார். நான் மிகவும் ஒல்லியாக இருந்தேன். கதாநாயகன் வேஷம் கிடையாது. ஆனால் இயாகோ வேஷத்திற்குப் பயன்படுத்துவதாக இருந்தார். அந்த நேரம் எனக்குக் கடும் ஜுரம் வந்துவிட்டது.
நானில்லாமலே ‘ஒத்தெல்லோ’ நடந்தது. ‘ஏழை படும் பாடு’ புகழ் வி.கோபாலகிருஷ்ணன் இயாகோ வேடம் தரித்தார். நன்றாகவே நடித்தார். ஆனால் அவர் நானில்லையே! ‘ஒத்தெல்லோ’ நாடகத்திலிருந்து மெட்ராஸ் பிளேயர்ஸ் பிறந்தது.அந்த நாளில் ஐம்பது சிகரெட்கள் கொண்ட தகர டப்பாக்கள் கிடைக்கும். அவன் பதற்றத்தில் ஒரு சிகரெட்டை எடுக்க, டப்பா கை தவறிக் கீழே விழுந்து அவ்வளவு சிகரெட்களும் தரையில் சிதறி விழும்.
மு.ஸ்ரீனிவாஸன் என்ற நண்பர் அபூர்வமான மனிதர். இருமுறை அங்கோர் வாட் சென்றிருக்கிறார். அலெக்ஸாண்டர் டூமாவின் புகழ்பெற்ற ‘கவுன்ட் ஆஃப் மாண்டி கிரிஸ்டோ’ நாவலில் வரும் ஷாடியு டி இஃப் தீவுச் சிறைச்சாலையைப் பார்த்திருக்கிறார். அவர் எழுதியிருக்கும் ‘கலை இலக்கிய வரலாற்று மஞ்சரி’ என்ற நூல், மஹாபாரதத்தில் ஆரம்பித்து பி.எஸ்.ராமையா வரை மிகத் துல்லியமாகவும் சுருக்கமாகவும் விவரிக்கிறது. இதில் உள்ள பல புகைப்படங்கள் அவர் எடுத்ததாக இருக்கக் கூடும்.
இந்த மகத்தான நூலை அவருடைய 84வது வயதில் திரட்டி உருவாக்கியிருக்கிறார்!(கலை இலக்கிய வரலாற்று மஞ்சரி - மு.ஸ்ரீனிவாஸன், பக்கங்கள்: 440, விலை: ரூ.350/-, வெளியீடு: சேகர் பதிப்பகம், 60, பெரியார் சாலை, கே.கே.நகர், சென்னை-600078. பேச: 044-65383000)
(பாதை நீளும்...)
அசோகமித்திரன்