தேவைக்கு மேல் தொழில்நுட்பம் தேவையில்லை!



‘‘கோயம்புத்தூர் டவுன்ஹால் ரோட்டில் வந்தால் நீங்கள் ராதா ஸ்டூடியோவை பார்க்காமல் திரும்ப முடியாது. 50 வருஷ அனுபவத்தில் நிலைத்திருக்கிற அந்த ஸ்டூடியோ எங்களுடையது. என் பால்யம் அங்கேதான் கழிந்தது. வெளிச்சம், இருட்டு, ஃப்ளாஷ்னு… கத்துகிட்டது அங்கேதான். ஸ்கூல் விட்டா ஸ்டூடியோ. சோதனைகள் செய்து பார்த்து, கேமிரா கூச்சம் நீக்கி வந்தவன் நான்.

நான் எடுத்த படங்களைப் பார்த்த ஸ்டில்ஸ் ரவி ‘உனக்குள் திறமை இருக்கிறது. சென்னைக்கு வந்து விடலாம்’ என்று சொன்னார். அங்கேயிருந்துதான் எனக்கு ஒளிப்பதிவாளர் கனவுகள் பற்றிக் கொண்டதாக நினைவு. கேமிராவில் பார்க்கும் அத்தனை முகங்களையும் ஸ்டூடியோவில் எத்தனை முறை பார்த்திருக்கிறேன் என்பதற்கு கணக்கில்லை. நான் இப்படி ஆனதைத் தவிர வேறு எந்தவிதமாகக் கூட உருமாறியிருக்கலாம். ஆனால், இதற்கெல்லாம் இளமையில் வாய்ப்பு தந்த ராதா ஸ்டூடியோ அதிபர் திரு. ஏ.கே.நடராஜன் அவர்கள்… அதாவது என் அப்பாவை மறக்க முடியாது.

அவர்தான் இந்தக் கலையை கைவிளக்காகக் கொண்டு இங்கே இறங்கி நடக்க வழி கொடுத்தார்...” உணர்வுபூர்வமாகப் பேசுகிறார் ஓம்பிரகாஷ். ஒளிப் பதிவாளர் எம்.வி.பன்னீர் செல்வத்தின் சீடர். 2000 விளம்பரப் படங்கள், 30க்கும் மேற்பட்ட வல்லிய தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களின் அணிவகுப்பு இவர் கைகளில் இருக்கின்றன! ஒளிப்பதிவை எந்த விதத்தில் உணரலாம்..?

யாருமே கதை சொல்லலாம். சொல்லக் கூடிய அளவில் அதில் பெரிய விஷயம் இருக்கும்போது, அதன் எமோஷன் ஆடியன்ஸ்க்கு கண்டிப்பாகப் போகணும். நிறைய அதில் வேறு விஷயங்களும் இருக்கு. கம்போஸிஷன், மூவ்மெண்ட்ஸ், ஒளிச்சேர்க்கை, வண்ணங்கள், லொகேஷன்ஸ்… இவை எல்லாமே அடங்கியதுதான் நீங்க எமோஷனலா பார்க்கிற ஃபிரேம். தேசிய விருது பெற்ற ‘வாகை சூடவா’ பாருங்க… செங்கல் சூளை, கையில் ஒட்டிக்கிற மாதிரி செம்மண்... இதுல எங்கேயும் துளி பசுமையை காட்ட முடியாது. அதில் ஒரு வாழ்க்கையை காட்டணும்.

ஒவ்வொரு படத்திலும் சில பிரத்யேகத் தருணங்கள் இருக்கும். ஒளிப்பதிவுக்கு ஒரு காட்சி வடிவத்திற்கு ரெடியாகிறதுக்கு முன்னாடி பல விஷயங்களை அவன் புரிஞ்சு வைச்சுக்கணும். குறிப்பாக இயக்குநரின் மன அமைப்பை. எப்படி அவர் அதை மனசில் வைச்சிருந்தார்னு நாசுக்காகவும், கண்டிப்பாகவும் சொல்லிடணும். அது இயக்குநர் நம்பித் தருகிற பொறுப்பு.

படத்திற்கு எது தேவையோ அதற்கு மேல் தொழில் நுட்பம் தேவையே இல்லை. ஒரு படைப்பில் படைப்பாளி எங்கே இருக்கிறான்னு தெரியக் கூடாதுன்னு சொல்வாங்க. மிச்சல் கேமரா முதல் விர்ச்சுவல் ரியாலிட்டி கேமரா வரை வேலை செய்திருக்கிறேன். டெக்னாலஜியை விட aesthetic sense மிக முக்கியம் எனக் கருதுகிறேன்.

உங்க ‘ரவுடி பேபி...’ இன்னிக்கும் பார்க்கப்படுது...

யுவன் போட்டுக் கொடுத்த பாடலைக் கேட்டதுமே உற்சாகம் தட்டிவிட்டது. அதை ஒரு கொண்டாட்டம் மாதிரி, நிறைய ஸ்டெப்ஸ், கூடவே வேற லுக்கோட செய்தாகணும்னு முடிவு செய்திட்டாங்க. அதுக்குள்ளே பிரபுதேவா மாஸ்டர் வந்து உட்கார்ந்ததும் அதில் நளினமும், குறும்பும் கூடிப்போச்சு. டைரக்டர் பாலாஜி கொடுத்த சுதந்திரம் வேறு. தேசிய விருது வாங்கியவர், பெரும் நடிகர்னு எந்த அசால்ட்டும் காட்டாமல் தனுஷ் இறங்கிவந்து ஆடினார். கூடவே ‘மலர் டீச்சர்’ சாய் பல்லவி. ஜாலியான பாடல் என்றாலும் அதுக்கு எல்லோரும் உழைச்ச உழைப்பு பெரிது. அதில் தனுஷ், சாய்னு ஒரு வசீகரம் இருந்தது. அதுதான் இப்ப வரைக்கும் கொடி கட்டிப்பறக்குது.

தனுஷ்கிட்டே அஞ்சு படம் பண்ணி இருக்கீங்க...
எனக்கு அவரைப் பார்க்கவே ஆச்சர்யமா இருக்கு. செம டேலன்ட். ஒரு பக்கம் கதை எழுதுவார். மறுபக்கம் பாட்டு எழுதிட்டு இருப்பார். இன்னொரு பக்கம் படம் தயாரிப்பார். இதற்கிடையில் குழந்தைகளோடு சின்சியரா கிரிக்கெட் விளையாடுவார். ரொம்ப சுவாரசியமானவர். ஷாட்னு வந்திட்டால், சிங்கிள் டேக்கில் ஓகே பண்ணிட்டு போய்க்கிட்டே இருப்பார். அவரால் ஒரு டேக் கூட எக்ஸ்ட்ராவா போனதில்ல. பெரிய ஆர்ட்டிஸ்ட் என்பதைத் தாண்டி, அவரை உடன் பிறவா சகோதரர் மாதிரிதான் பார்க்கிறேன். அவர் முதல் படம் டைரக்ட் பண்ணும்போது அபூர்வமான ஒரு லாவகத்தைப் பார்த்தேன்.

அஜித்தும் உங்களை மிகவும் விரும்புகிறார்...

அஜித் சார் ஒரு குழந்தை மாதிரி. ஒரு கதைக்குள் இறங்கிட்டு, அதில் சந்தேகங்களை நிவர்த்தி செய்துட்டா அப்புறம் எந்தக் கேள்வியும் அவர்கிட்டே இருக்காது. டெக்னீஷியன்களுக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். பிரமாதமாக ஈடுபாடு காட்டுவார். குலுமணாலியாக இருந்தாலும் காலையில் ஆறு மணிக்கு ஸ்பாட்டில் நிற்கணும் என்றால் தயங்காமல் வந்து நிற்பார்.

ரோட்டில் விழுந்து கிடக்கிற சீன்னா, அந்த ஷாட் முடிந்த பின்னாடி கூட, மறு ஷாட்டுக்கு தயாராகிற வரை படுத்தே கிடப்பார். நாங்கதான் உதவியாளர்களைக் கூப்பிட்டு அவரை எழுந்திருக்கச் சொல்வோம்.

‘அறம்’ படமும் ஆர்வமா செய்றீங்க... ‘அனேகன்’லயும் பிரியம் காட்டுறீங்க…

அந்தந்த சினிமாவிற்கான உழைப்பு, கலர், மூட் செட் பண்ணிடுவேன். ‘அனேகன்’ படம் மூன்று ஒளிப்பதிவாளர்கள் செய்வதாக இருந்தது. கே.வி.ஆனந்த் சார் என்னை நம்பி முழுப் படத்தையும் கொடுத்தார். ஒரு தேர்ந்த ஓட்டுநரின் பக்கத்தில் உட்கார்ந்து கார் ஓட்டுவது மாதிரியான விஷயம் அது.

‘காஷ்மோரா’ பண்ணிட்டு ‘அறம்’ வந்தபோது எல்லோரும் ஆச்சரியப்பட்டாங்க. சின்ன பட்ஜெட், பெரிய பட்ஜெட் எல்லாம் விஷயமே இல்லை. படம்... அது கொடுக்கிற கன்டென்ட் மட்டுமே முக்கியமாகப் பார்ப்பேன். சேலஞ்ச் இருந்தால் செய்து பார்க்கலாம்னு இறங்கிடுவேன்.இவ்வளவு நாள் அனுபவத்தில் பெற்றதென்ன..?

நான் கிடைச்ச இடத்தில் உட்காருவேன். எளிமையானவன்… யாரையும் புண்படுத்தி விடக்கூடாதுன்னு கவனமா இருப்பேன். அதுதான் பெரிய விஷயம். மனிதனை அன்பால் தொட முடியுமான்னு முயற்சி செய்து கிட்டே இருக்கேன். என்னை அன்பாலும், மிகுந்த நேசத்தாலும்  அரவணைத்துக்கொண்டே இருக்கிறாள் என் மனைவி லதா. எங்களின் அன்புக்கு பாலமாக இருக்கிறான் மகன் ஆதேஷ் கிருஷ்ணா.

நா.கதிர்வேலன்