நான் சங்கரா கண் மருத்துவ இயக்க டாக்டர் ஆர்.வி.ரமணி



‘நான்’ என்னும் தலைப்பு என்னை கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது. ‘நான்’ ‘I’ என்று சொல்லும் பொழுது ஒருவிதமான ‘தான்’ என்ற எண்ணத்தையும், சற்றே அகம்பாவத்தையும்; ஆங்கிலத்தில் EGO என்ற சொல்லின் மறுபதிவாகவும்
தோன்றுகிறது

எந்த ஒரு தனி மனிதனாலும் தானாக, தனித்து ஒரு சாதனையை, பெரிதாகவோ, சிறிதாகவோ சாதித்து விட முடியாது. ‘Man cannot be an Island’.  
மனித குலத்தின் நியதியே, அதனுடைய சிறப்புத் தன்மையே, ‘சமூகம் சார்ந்து இருப்பதுதான்’. ஒருவர் இருவராக, இருவர் பலராக சேர்ந்து செய்யும் ஒரு காரியம்தான், அந்த ஒருவரை மேம்படுத்துவது; சமூகத்திற்கும் தேவைப்படுபவனாக அவனை மாற்றுகிறது.

அந்த ஒருவனாக, என்னுடைய வாழ்வில் நான் கடந்து வந்த பாதையை, சந்தித்த மனிதர்களை, நடந்தேறிய நற்காரியங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.பிறந்து வளர்ந்தது கோவையில்.

அப்பா டாக்டர் ஏ.ராமநாதன். 1940களில் கோவையின் பிரபலமான மருத்துவர்களில் ஒருவர். கோவையும் சுற்றுப்புறமும் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டபொழுது சிறந்த மருத்துவ உதவி செய்து, மக்களிடையே பெரும் மதிப்பைப் பெற்றவர். மருத்துவத் துறை ஓர் உன்னதமான சேவை என்று என் ஆழ்மனதில் வித்திட்டவர் என் தந்தை.

அம்மா திருமதி லட்சுமி ராமநாதன், குடும்பத் தலைவி. எனக்கு இரண்டு தம்பிகள், ஒரு தங்கை. மனைவி ராதாவும் டாக்டர்தான். அவர் என் வாழ்வில் ஒரு வரம். திருமணமான நாள் முதல் இத்தனை ஆண்டுகளாக மருத்துவத் துறையிலும், மனித நேயமிக்க சேவைகளிலும், குடும்ப பராமரிப்பிலும் தோளோடு தோளாக இணைந்து நடத்தி வருகிறார்.அடுத்த தலைமுறை  குடும்பத்திலுள்ள இளையவர்களெல்லாம் அதே எண்ணங்களுடன் தொடர்ந்து வருகின்றார்கள்; Second Line ஆக நிற்கிறார்கள் என்பது மனத்திற்கு இனிய செய்தி.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வகையில் குருவின் பேரருள் கிடைத்தது; காஞ்சி சங்கராச்சார்யார்களின் வழிகாட்டுதலும் பூரண ஆசியும் கிடைத்தது எங்கள் பாக்கியம்.குருவின் சங்கல்பம்தான் இன்று மாபெரும் ‘சங்கரா கண் மருத்துவ இயக்கமாக’ ஆல் போல் தழைத்து, லட்சக்கணக்கான மக்களுக்கு சேவை செய்து வருகிறது.பள்ளிப் படிப்பு ஆர்.எஸ்.புரம் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில். பிஎஸ்ஜி கலைக் கல்லூரியில் பியூசியில் தேர்வு பெற்று, கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் மணிப்பால் மற்றும் மங்களூரில் 1965ம் ஆண்டு சேர்ந்தேன்.

கேஎம்சி போன்ற மருத்துவக் கல்லூரிகள், தலை சிறந்த மருத்துவர்களை வடிவமைத்துக் கொடுத்தன. அதற்கு என்னைப் போன்ற மருத்துவர்கள் கடமைப்பட்டவர்கள்.கே.எம்.சி.யில் சிறந்த மாணவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மருத்துவப் படிப்பை முடித்தவுடன் கோவைக்கு வந்தேன்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் படித்து முடித்த டாக்டர் ராதாவை 1971ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பின், இருவரும் என் தந்தை விட்டுச்சென்ற மருத்துவமனையை 1972 முதல் சிறப்பாக நடத்தத் தொடங்கினோம்.

தந்தையின் பேரும் புகழும் மற்றும் கணவன் மனைவி இருவரும் டாக்டராக அமைய ஒன்று கூடி, முதல் 5 வருடங்களிலேயே மருத்துவத் துறையில் கோவையில் எங்களால் ஒரு சிறந்த நிலைக்கு வர முடிந்தது.நாம் ஒவ்வொருவரும் படித்து ஒரு துறையை தேர்ந்தெடுத்து அதில் ஈடுபடுவது நம்மையும், நம் குடும்பத்தையும் ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு வருவதற்குத்தான். அந்த ஒரு நிலை வந்தடைந்தவுடன், சற்றே சுற்றும் முற்றும் பார்க்கிறோம்.

நம்மைவிட வாழ்க்கையில் பின்தங்கியவர்களுக்கு நம்மால் ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்த தருணம்தான் காஞ்சி சங்கராச்சார்யார்கள் சொன்னது நினைவுக்கு வந்தது,‘‘டாக்டர்கள் வாரம்தோறும் ஒருசில மணிநேரங்களாவது, ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை செய்ய வேண்டும்...”அதன்படி காஞ்சி பெரியவரின் ஆசியுடன் காமாட்சி அம்மன் கோயிலில் ஒரு சிறிய அறையில் ‘ஸ்ரீ காஞ்சி காமகோடி மெடிக்கல் சென்டர்’ என்ற ஒரு பொது மருத்துவமனையை 21 மே 1977 அன்று, 43 வருடங்களுக்கு முன்பாக துவங்கினோம்.

10 இளம் மருத்துவர்கள், 10 இளம் தன்னார்வலர்களுடன் இணைந்து அன்று விதைக்கப்பட்ட சிறிய விதை இன்று விருட்சமாக நாடெங்கும் பரந்து விரிந்து சேவை செய்து வருகிறது. சிறிது சிறிதாக, மருத்துவமனை, குழந்தைகளுக்கான தடுப்பூசி மையம், எக்ஸ்ரே கிளினிக் என்று விரிவுபடுத்தி என் தந்தையின் இனிய நண்பர் டாக்டர் மேஜர் ஆர்.எஸ்.ராவ் அவர்களின் ‘ராவ் மருத்துவமனை’யில் இலவச அறுவை சிகிச்சைப் பிரிவு வரை தொடங்கினோம் .

இவ்வளவு நன்றாக ஒரு சேவை நிறுவனம் வளர்ந்து வருவதைப் பார்த்து மகிழ்ந்த கோவையைச் சார்ந்த பிரபல தொழில் நிறுவனங்கள் எங்களைக் கேட்டுக் கொண்டதை அடுத்து அவர்கள் உதவியுடன் கோவையிலும் சுற்றுப்புற கிராமங்களிலும் 9 மருத்துவ மையங்கள் அமைத்து நாளொன்றுக்கு சுமார் 1000 நோயாளிகளுக்கு இலவச மருத்துவ சேவையை வழங்கினோம்.

இந்த முதல் 5 வருடங்களில், 1977லிருந்து 1982க்குள், 10 மருத்துவர்களாக இருந்த எங்கள் குழுமம் 75 மருத்துவர்கள் கொண்டதாக வளர்ந்தது. எல்லா மருத்துவத் துறையைச் சார்ந்த தலைசிறந்த மருத்துவர்களும் எங்கள் சேவையால் ஈர்க்கப்பட்டு தங்களையும் இணைத்துக் கொண்டார்கள்.

முன்னதாக 1981ல் காஞ்சி பெரியவர்கள், ஒரு மருத்துவ சேவை முழுமையாக இயங்குவதற்கு ஓர் அறக்கட்டளையைத் தொடங்கி அதில் மருத்துவ சேவையை முழுவதும் அமைத்துக் கொள்ளும்படி எனக்கு ஆசி வழங்கினார்கள்.

அவர்களுடைய அனுக்கிரகத்துடன் தொடங்கப்பட்டதுதான் ‘ஸ்ரீ காஞ்சி காமகோடி மெடிக்கல் டிரஸ்ட்’.எல்லா தரப்பு மக்களுக்கும், சாதி சமய பொருளாதார வேறுபாடின்றி நல்லதொரு கண் மருத்துவ உதவியை வழங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஸ்ரீ காஞ்சி காமகோடி என்ற பெயரிலேயே மருத்துவ அறக்கட்டளையை நிறுவி இத்தனை வருடங்களாக தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்.

1985ல் என் நண்பர் திரு. நடராஜ் மற்றும் அவருடைய குடும்பத்தினர், கோவை சரவணம்பட்டியில் 5.26 ஏக்கர் நிலத்தை மருத்துவமனை கட்டுவதற்கு நன்கொடையாக அளித்தார்கள். அந்த ஒரு பெருந்தகையின் தாராள மனத்துடன் அளிக்கப்பட்ட நிலத்தில்தான் 500 படுக்கை வசதிகளுடன் ‘சங்கரா கண் மருத்துவமனை’ அமைக்கப்பட்டு இன்று பலருக்கும் சேவை செய்து வருகிறது.

அந்த முக்கியமான தருணத்தில் எனது இனிய நண்பரும், மூத்த சகோதரர் போல் என்னிடம் அன்பு கொண்டவருமான திரு. எஸ்.வி.பாலசுப்ரமணியம் அவர்களை அறக்கட்டளையின் தலைவராக இருந்து வழிநடத்துமாறு கேட்டுக்கொண்டேன். சங்கரா கண் மருத்துவமனையின் நாடு தழுவிய மகத்தான வளர்ச்சிக்கு, தொடர்ந்து அவருடைய ஆதரவும், அறிவுரைகளும், வழிகாட்டுதலும்  மிகப்பெரும் தூண்களாக அமைந்திருக்கின்றன.

நான் பழகிய மற்றொரு மாமனிதர் திரு. ஜி.வி.ஈஸ்வர். எங்களுடைய தலைமைப் புரவலர். மனித நேயத்தின் மறுபதிப்பு. இந்த சேவைகளில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.இப்படி கோவையைச் சார்ந்த பல்வேறு குடும்பங்களும், பல தொழில் அதிபர்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், ‘சங்கரா கண் மருத்துவமனை’யின் சேவையைப் பாராட்டி, தங்களை இன்றளவும் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கண் மருத்துவர்கள் டாக்டர்கள் டி.சுந்தரேஸ்வரன், எஸ்.பாலசுப்ரமணியன், எஸ்.பி.டி.சம்பந்தம் ஆகியோரின் ஈடுபாட்டுடன் தொடங்கி இன்று டாக்டர்கள் ஜெ.கே.ரெட்டி, பிரபு ஷங்கர், மகேஷ் ஷண்முகம், பி.ஜானகிராமன் போன்ற உலகத்தரம் வாய்ந்த கண் மருத்துவர்களின் பூரண ஈடுபாட்டுடன் வளர்ந்து வருகிறது.

அடுத்ததாக கோவை மத்திய ரோட்டரி சங்க நண்பர்களின் ஈடுபாடு 1990ல் துவங்கியது. ‘கிஃப்ட் ஆஃப் விஷன்’ கிராமப்புற திட்டத்தில் ஆரம்பித்து இன்று வரை ‘சங்கரா கண் மருத்துவமனை’யின் எல்லா சேவைகளிலும் மத்திய ரோட்டரி தன்னை ஈடுபடுத்தி வருகிறது.அடுத்த கட்டமாக 1985லேயே ‘சங்கரா கண் வங்கி’யை நிறுவி, மக்களிடையே கண் தானத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினோம். மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்ச்சி காரணமாக இன்று ஒவ்வொரு நாளும் கண்கள் தானமாக வருகின்றன.

கிராமப்புற மக்களுக்கு தரமான மருத்துவ உதவியை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரோட்டரி சென்ட்ரலுடன் இணைந்து துவங்கிய இந்த திட்டம் இன்று நாடெங்கும் பரவி இருக்கிறது. 9 மாநிலங்கள், 80 மாவட்டங்கள், 50 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற மக்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்து, இதுவரை 20 லட்சம் எளிய மக்களுக்கு இலவசமாக கண் அறுவை சிகிச்சை அளித்து நாளொன்றுக்கு சுமார் 750 இலவச கண் அறுவை சிகிச்சைகளை நடத்தி வருகிறோம்.

‘ஒளிபடைத்த  கண்ணினாய்’ என்ற பெயரில் பள்ளிக் குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்து, வருமுன் காப்பது என்பது போல், தேவைப்படுபவர்களுக்கு கண் கண்ணாடி மற்றும் அறுவை சிகிச்சையை இலவசமாக வழங்கி வருகிறோம். இதன் வழியாக இதுவரை 60 லட்சம் குழந்தைகள் பயன் பெற்றிருக்கிறார்கள்.

இந்தியாவில் நாங்கள் செய்து வருகின்ற சேவையை பார்த்து மிகவும் பாராட்டிய அமெரிக்காவில் வாழும் எங்கள் நண்பர்கள், எனது இனிய நண்பர் பி.பாலசுப்ரமணியம் அவர்களின் உந்துதலின் பேரில் 1998ல் அமைத்த இயக்கம், ‘SEF USA’. இவர்களின் பேருதவியுடன் புதிய சங்கரா கண் மருத்துவமனைகளை இந்தியாவில் அமைத்து வருகிறோம்.

வெள்ளி விழா ஆண்டு கொண்டாடிய வருடத்தில், நாம் நாடெங்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் சங்கரா கண் மருத்துவமனை அமைத்து
அங்குள்ள மக்களுக்கும் தலைசிறந்த கண் மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இதுவரை 11 சங்கரா கண் மருத்துவமனைகளை நிறுவி இருக்கிறோம் .ஆண்டுகள் பல கடந்த நிலையில் பின்னோக்கிப் பார்க்கின்றேன். வாழ்க்கை தந்த பரிசுகள் அதிகம்; பாடங்கள் பல.

இளம் வயதில் என் ஆதர்சவழிகாட்டி, என் தந்தை. நான் டாக்டராக வேண்டும் என்பதை அவர் லட்சியமாக எண்ணினார். நான் மெடிக்கல் கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும்போது எதிர்பாராத விதமாக இறைவனடி சேர்ந்தார். மனம் துயர் கொண்டாலும் அவருக்கு நான் செய்யும் சமர்ப்பணம், நல்ல டாக்டராக படித்து வருவதுதான் என்று முடிவு செய்தேன்.

என் வாழ்க்கையிலும் மெடிக்கல் சென்டர் நடத்தும் வாய்ப்பு கிடைத்தபோது அதுதான் என் வாழ்வின் நோக்கம் என்றும் உணர்ந்தேன்.
நல்ல ஆசிரியர்கள் நல்ல மனிதனை உருவாக்குகின்றனர். நான் மாநகராட்சிப் பள்ளியில்தான் படித்தேன். இன்றும் என் கணக்கு ஆசிரியர் திரு. சுப்பிரமணியம் (வயது 100) அவர்களை அடிக்கடி சந்திக்கிறேன்; அவர்களை நன்றியோடு நினைக்கிறேன். இன்னும் பலர் என் வெற்றிக்கு வித்திட்டு ஏணிப் படிகளாக இருக்கிறார்கள்.

பிறப்பையும் இறப்பையும் நாம் தேர்வு செய்ய முடியாது. மனைவியையும் நல்ல நண்பர்களையும் தேர்ந்தெடுப்பது நம் கையில் உள்ளது. அதற்கும் கடவுள் அருள் வேண்டும். என் மனைவி டாக்டர் ராதா என்னுடன் தோளோடு தோளாக நிற்பவர். இவையனைத்தையும் பாராட்டி பல விருதுகள் வந்தன, குறிப்பாக 2019ம் ஆண்டுக்கான இந்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது பட்டியலிலும் என் பெயர். மகிழ்வான தருணம்.

சுகத்திலும் கஷ்டத்திலும் பங்கு எடுப்பவர்கள், வழிகாட்டுபவர்கள், என் நண்பர்கள். நம் உயர்வைக் கண்டு உண்மையாகவே மகிழ்பவர்கள். அப்படிப்பட்ட நண்பர்களைப் பெற்ற நான் மிகவும் அதிஷ்டசாலி.

எனக்கு பொதுவாக அரைகுறையாக எந்த காரியத்தையும் செய்யப் பிடிக்காது. Perfection, Quality, Integrity வேண்டும் என்று எப்பொழுதும் நினைப்பேன். புதிய முயற்சிகள், மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், இவற்றை கட்டாயமாக வளர்த்துக் கொண்டேன். எல்லாவற்றையும்விட ‘இது என்னால்’ என்ற எண்ணம் இல்லாதவர்கள் மற்றவர்களால் மதிக்கப்படுகிறார்கள்.மாதா, பிதா, குரு, தெய்வம் இவர்களின் ஆசி இருந்தால் அனைத்தும் சாத்தியம்தான்!   

 ஷாலினி நியூட்டன்