ரத்த மகுடம்-103
‘‘மன்னா....’’ கரிகாலன் குரல் கொடுத்தான். ‘‘சரியான நேரத்துக்கு வந்திருக்கிறீர்கள்...’’அரிகேசரி மாறவர்மர் நிதானமாக அந்த பாதாளச் சிறை அறைக்குள் நுழைந்தார். பின்னாலேயே சிறைக் காவலன். ‘‘காஞ்சி சிறையில் எந்தப் பொருளைக் கைப்பற்ற சிவகாமி முயன்றாளோ... எந்தப் பொருள் அங்கு கிடைக்காததால் மதுரை சிறைக்கு அவள் வந்திருக்கிறாளோ... அந்தப் பொருளை அவள் எடுத்துவிட்டாள்...’’ சொன்னபடியே, தான் அவிழ்த்திருந்த சிவகாமியின் கச்சை முடிச்சை கரிகாலன் பழையபடி இறுகக் கட்டினான்.
‘‘ம்... எழுந்திரு சிவகாமி... பாண்டிய மன்னர் முன் நாம் அமர்ந்திருப்பது தவறு...’’ கட்டளையிடும் தொனியில் வார்த்தைகளை உச்சரித்த கரிகாலன், அவளை முன்புறமாகத் தள்ளிவிட்டு எழுந்தான். குனிந்து, தரையில் உருண்ட பொருளை எடுத்து அரிகேசரி மாறவர்மரிடம் கொடுத்தான்.
அதைப் பெற்றுக் கொண்ட பாண்டிய மன்னர், அது என்ன என்று ஆராயவில்லை. மாறாக தன் இடுப்பில் அதை முடிந்து கொண்டார். ‘‘ஆராயவில்லையா மன்னா..?’’
கேட்ட கரிகாலனை ஏறிடாமல், அவனுக்கு அருகில் நின்றபடி தன் உடைகளைச் சரிசெய்து கொண்டிருந்த சிவகாமியை பார்வையால் சலித்தார். ‘‘அறைக்கு சென்று ஆராய்கிறேன்... அதுதான் பொருள் எங்கும் செல்லாதபடி கைப்பற்றி என்னிடமே கொடுத்துவிட்டாயே..!’’
‘‘இதற்காகத்தான் மன்னா இந்த நள்ளிரவில் இங்கு வந்தேன்... பாண்டிய இளவரசரிடம் நிலைமையை எடுத்துச் சொல்லியிருக்கலாம்... ஆனால், எங்கே அவர் கேட்க மாட்டாரோ என்று நினைத்து தான்...’’
‘‘... சாம்பிராணியில் மயக்கப் பொடியைத் தூவினாய்...’’ சிவ காமியின் வதனத்தை ஆராய்ந்தபடியே அரிகேசரி மாறவர்மர்பதிலளித்தார்.
‘‘உள்ளதை உள்ளபடி ஊகிக்கும் திறன் தங்களிடம் இருப்பதால்தான் பாண்டிய நாடு நிம்மதியாக இந்த அகால வேளையில் உறங்குகிறது...’’
‘‘அந்த உறக்கத்தைக் கெடுக்கத்தான் புலி வந்திருக்கிறதே..?’’‘‘இல்லை மன்னா... மீனின் வாழ்விடத்துக்குள் என்றும் புலி நுழைவதில்லை... சமுத்திரத்தை தொந்தரவு செய்த வனம் என்ற சொற்றொடர் அகராதியிலேயே இல்லை...’’‘‘ஒருவேளை அகராதியில் புதிய சொற்கள் சேரலாம்...’’‘‘இக்காலத்தில் வாய்ப்பில்லை மன்னா...’’‘‘எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்..?’’ கேட்டபடி முதல் முறையாக கரிகாலனை ஏறிட்டார் பாண்டிய மன்னர். ‘‘வனத்துக்கான போராட்டத்தில்தான் புலி தற்சமயம் கவனம் செலுத்துகிறது... ரிஷபத்தை தாக்க முற்படும் வராகத்தை வீழ்த்தவே தன் உடல் பொருள் ஆன்மா... என சகலத்தையும் அர்ப்பணித்திருக்கிறது...’’
கணத்துக்கும் குறைவான நேரத்தில் தன் இமைகளை மூடித் திறந்தார் பாண்டிய மன்னர். ‘‘அதன் பொருட்டுதான் இந்த பாதாளச் சிறைக்கும் வந்தாயா..?’’‘‘ஆம் மன்னா...’’‘‘வேட்டையாடவா..?’’ அரிகேசரி மாறவர்மரின் புருவங்கள் முடிச்சிட்டன.‘‘ஆம் மன்னா... வராகத்தை...’’ சிவகாமியைப் பார்த்தபடியே அழுத்திச் சொன்னான் கரிகாலன்.எரித்து விடுவதுபோல் அவனை ஓரக் கண்ணால் பார்த்தாள் சிவகாமி.பாண்டிய மன்னரின் உதடுகளில் புன்னகை பூத்தது. ‘‘வராக அவதாரத்தை என்று சொல்லலாமே கரிகாலா...’’ சிவகாமி சட்டென நிமிர்ந்தாள்.
கரிகாலனின் நயனங்களில் அதிர்ச்சி. ‘‘என்ன சொல்கிறீர்கள் மன்னா..?’’ ‘‘வராக போர் அமைச்சர் சந்தேகிப்பதை சொன்னேன்...’’
‘‘மன்னா...’’ ‘‘சாளுக்கிய போர் அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபர், இவளை பல்லவ இளவரசி என சந்தேகிக்கிறாரே..?’’ ‘‘அப்படி நினைப்பவர் எதற்காக சாளுக்கிய இளவரசருடன் தனித்து இங்கு வந்து இவளைச் சந்திக்க வேண்டும்..?’’ ‘‘சந்தேகத்தைத் தீர்க்க...’’‘‘அதற்காகத்தான் நீயும் இங்கு வந்தாயா..?’’
‘‘அப்படி வந்திருந்தால் தன் கச்சைக்குள் இவள் மறைத்து வைத்திருந்த பொருளை எடுத்து தங்களிடம் கொடுத்திருப்பேனா..?’’ ‘‘நான் வந்ததால் கொடுத்தாய்...’’‘‘வரவில்லை என்றால் தங்கள் அறைக்கு வந்து கொடுத்திருப்பேன்...’’‘‘சாம்பிராணியில் மயக்கப் பொடியைத் தூவியா..?’’ ‘‘மன்னா...’’
தன் கரங்களை உயர்த்தி கரிகாலன் பேசுவதைத் தடுத்தார். ‘‘நாளை விசாரணை மண்டபத்துக்கு நீங்கள் இருவரும் வரவேண்டும்... எது சொல்வதாக இருந்தாலும் அங்கு சொல்... அதுவரை நீங்கள் இருவரும்...’’ தனக்குப் பின்னால் கைகட்டி நின்றிருந்த காவலனைப் பார்த்தார்.புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக அவன் தலையசைத்தான்.
கரிகாலனையும் சிவகாமியையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு சிறையை விட்டு அரிகேசரி மாறவர்மர் வெளியில் வந்தார்.பின்னால் வந்த காவலன் கவனமாக சிறைக்கதவைப் பூட்டினான்.படிக்கெட்டில் ஏறி வெளியில் வந்ததும் காவலனையும் அவன் இடுப்பில் தொங்கிக் கொண்டிருந்த சாவியையும் பார்த்தார். பின்னர் விடுவிடுவென தன் மாளிகையை நோக்கி நடந்தார்.அவர் முகம் மலர்ந்திருந்தது!
மல்லைத் துறைமுகம் விழித்துக் கொண்டது. மலங்க மலங்க விழித்தது!இந்த நள்ளிரவில் சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர் அரவமின்றி வருகை தருவார் என ஒருவரும் எதிர்பார்க்காததால் எட்டு திசைகளிலும் குழப்பம் தாண்டவமாடியது.‘‘சுங்கத் தலைவர் எங்கே..?’’ விக்கிரமாதித்தர் புரவியில் இருந்து இறங்கியதுமே கேட்டார்.
‘‘மன்னா...’’ என்றபடி சுங்கத் தலைவர் முன்னால் வந்து வணங்கினார்.‘‘எந்தெந்த மரக்கலங்கள் எந்தெந்த தேசத்திலிருந்து கடந்த ஒரு வாரத்தில் இங்கு வந்திருக்கின்றன... என்னென்ன பொருட்கள் வந்து இறங்கியிருக்கின்றன... எந்தெந்த வணிகர்களுக்கு சொந்தமான மரக்கலங்கள் அவை... என்ற விவரங்கள் எல்லாம் எனக்கு வேண்டும்... அதுவும் உடனடியாக!’’ உத்தரவிட்ட மன்னர், கடற்கரையில் இருந்த பாறையின் மீது அமர்ந்தார். ‘‘எடுத்து வாருங்கள்...’’
‘‘உத்தரவு மன்னா...’’ என்றபடி தலைதெறிக்க சுங்கச் சாவடியை நோக்கி சுங்கத் தலைவர் விரைந்தார்.சாளுக்கிய வீரர்கள் மன்னருக்கு அருகில் கம்புகளை ஊன்றி அதில் பந்தங்களைக் கட்டினார்கள்.கைகொள்ளா சுவடிகளுடன் சுங்கத் தலைவர் திரும்பியபோது சாளுக்கிய மன்னர் ஜெகஜோதியாக ஜொலித்துக் கொண்டிருந்தார்.அவர் முன்பு, தான் கொண்டு வந்திருந்த சுவடிகளை சுங்கத் தலைவர் நீட்டினார்.
பெற்றுக் கொண்ட விக்கிரமாதித்தர், பந்த ஒளியில் நிதானமாக ஒவ்வொரு சுவடியாகப் புரட்டினார்... அதிலிருந்த விவரங்களைப் படிக்கத் தொடங்கினார். ‘‘மன்னா...’’குரல் கேட்டு திரும்பினார் அரிகேசரி மாறவர்மர்.கோச்சடையன் இரணதீரன் அவரை வணங்கியபடி அங்கு நின்றிருந்தான்.
‘‘சொல்லுங்கள் பாண்டிய இளவரசே... உறங்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்..?’’தன் தந்தையை ஆச்சர்யத்துடன் ஏறிட்டான் இரணதீரன். உற்சாகமாக இருக்கும் பொழுதுகளில் மட்டுமே அவர் தன்னை ‘இளவரசே...’ என்றழைப்பார் என்பது அவனுக்குத் தெரியும். எனில், இது குதூகலத்துக்கான காலமா..? ‘‘தங்களைக் காண காத்திருக்கிறேன் மன்னா...’’ ‘‘என்ன விஷயம்..?’’ ‘‘அதங்கோட்டாசானை கைது செய்திருக்கிறோம்... அவருடன் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் சிறைப்பட்டிருக்கிறார்கள்... நிலவறையில் இந்த அகாலவேளையில் அவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள்...’’அவன் அருகில் வந்து வாஞ்சையுடன் அணைத்தார். ‘‘வா... மாளிகையின் உச்சிக்கு செல்லலாம்...’’எதுவும் பேசாமல் தன் தந்தையுடன் படிக்கட்டு ஏறினான் பாண்டிய இளவரசன். புதர் மறைவிலிருந்து சீனன் வெளியே வந்தான். வைகையின் ஓட்டத்தை தன் கையில் இருந்த மூங்கிலால் அளந்தான்.திருப்தியுடன் தொலைவில் இருந்த சுங்கச் சாவடியைப் பார்த்தான். எந்த மாற்றமும் இல்லாமல் அங்கு வேலைகள் நடந்து கொண்டிருந்தன.
தன்னிரு கரங்களையும் உயர்த்தி சோம்பல் முறித்த சீனன், வானை ஏறிட்டு நட்சத்திரக் கூட்டங்களைக் கணக்கிட்டான்.
பின்னர் குனிந்து தன் கால்களுக்கு அடியில் இருந்த ஓர் ஆள்உயரமுள்ள மூங்கில் கூடையின் மூடியைத் திறந்தான்.அதனுள் இருந்த புறாக்களை ஒவ்வொன்றாக எடுத்து அவற்றை முத்தமிட்டு அதன் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தான். மதுரை திசையைக் காட்டினான். பின்னர் பறக்க விட்டான்!‘‘சொல்...’’ சாளுக்கிய இளவரசனான விநயாதித்தன் அதட்டினான். ‘‘யார் அந்த பதினைந்து பேர்..? எதற்காக ஒரே செய்தியை ஒரே மாதிரி எழுதியிருக்கிறாய்..?’’
‘‘இதற்கு மேலும் நீ மவுனமாக இருந்தால்..?’’ ராமபுண்ய வல்லபரின் நயனங்கள் நெருப்பைக் கக்கின. ‘‘வளைத்த மூங்கிலில் உன் கால்களைக் கட்டி உடலையே கிழித்து விடுவோம்...’’கடிகை பாலகன் அலட்சியமாகச் சிரித்தான்.‘‘செய்ய மாட்டோம் என நினைக்கிறாயா..?’’ கர்ஜித்த ராமபுண்ய வல்லபர் கோபத்துடன் அவனை நெருங்கினார்.கடிகை பாலகன் குருதி வடிய சிரிக்கத் தொடங்கினான். அவன் பார்வை சாளரத்தை நோக்கிக் கொண்டிருந்தது.
அப்படி எதைப் பார்த்து நகைக்கிறான் என்றறிய விநயாதித்தனும் ஸ்ரீராமபுண்ய வல்லபரும் சாளரத்தை நோக்கித் திரும்பினார்கள். திகைத்தார்கள்.
‘‘பார் இரணதீரா... அதங்கோட்டாசான் ஓடிக் கொண்டிருக்கிறான்..!’’அரிகேசரி மாறவர்மர் சுட்டிக் காட்டிய திசையை நோக்கிய இரணதீரன் அதிர்ந்தான்.
மதுரை வீதியில் கரிகாலன் ஓடிக்கொண்டிருக்க... பாண்டிய வீரர்கள் அவனைத் துரத்திக் கொண்டிருந்தார்கள்.‘‘மன்னா...’’‘‘கரிகாலனின் இன்னொரு பெயர் அதங்கோட்டாசான்!’’ இடி இடியென நகைத்த அரிகேசரி மாறவர்மர் குதிரையின் குளம்பொலியைக் கேட்டு சட்டென அமைதியானார். அவர்கள் இருவரும் நின்றிருந்த மாளிகைக்கு எதிர்த் திசையில் வரிசையாக இருந்த மாளிகையின் மேல் கைப்பிடிச் சுவரில் புரவி ஒன்று நிதானமாக நடந்துகொண்டிருந்தது!அதன் மேல் கம்பீரமாக அமர்ந்திருந்த சிவகாமி, குனிந்து கரிகாலன் ஓடும் திசையைப் பார்த்தாள்!
(தொடரும்)
செய்தி: கே.என்.சிவராமன்
ஓவியம்: ஸ்யாம்
|