பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் வைட்டமின், இரும்புச்சத்து மாத்திரைகள் கிடைக்காமல் மாணவர்கள் தவிக்கின்றனர்!
கொரோனா காலத்தில் பலரது கனவு கனவாகவே கரைகிறது. குறிப்பாக பல பெண் குழந்தைகளின் கனவுகள் சிதைக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.தமிழ்நாடு, உத்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம்… போன்ற மாநிலங்களைச் சேர்ந்த 290 பதின்பருவ பெண்களை நேர்காணல் செய்து இந்த ஆய்வினை வெளியிட்டிருக்கிறது தில்லியைச் சேர்ந்த பிராக்சிஸ் (Praxis) இந்தியா என்ற அமைப்பு.
இந்த ஆய்வில், ஊரடங்குக்கு முன்பை விட இப்போது 36% குறைவான உணவை வளரிளம் பெண்கள் பெறுவதை கண்டறிந்துள்ளது. இதில் 7% பேருக்கு, சில நாட்கள் உணவே கிடைப்பதில்லை. 70% பேருக்கு சானிட்டரி நாப்கின் கிடைப்பதில்லை. 40% பேரால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை.
முகத்தில் அறையும் இந்த நிஜங்களுக்கெல்லாம் சிகரமாக அமைந்திருக்கிறது அதிகரித்து வரும் குழந்தைத் திருமணம் என்ற பெரும் துயரம். கொரோனா காலத்தில் திருமணச் செலவு குறைவு என்பதால் பல பெற்றோர்கள் அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்து தங்கள் மகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் அல்லது குழந்தைத் தொழிலாளர்களாக சிறுமிகளை வேலைக்கு அனுப்புகிறார்கள்!
இந்தியாவில் 10 முதல் 19 வயதுடைய 12 கோடிப் பேரில், கிட்டத்தட்ட பாதிப் பேர் பெண்கள். இவர்களில் பலர் மேல்நிலைப் பள்ளியை முடிப்பதில்லை. கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் குடும்பத்தின் வருமானம் பாதிக்கப்படும்போது சிறுவர்களை விட சிறுமிகளே சுமைகளைத் தாங்கிக் கொள்ளும் முதல் நபர்களாக உள்ளனர்.
கொரோனா குறித்து யுனிசெஃப் வெளியிட்டுள்ள ஆய்வில், “வளரிளம் பெண்கள் பாலியல் சுரண்டல், துன்புறுத்தல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இது அவர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சியைத் தடுக்கும். அத்துடன் பாலியல் இனப்பெருக்க ஆரோக்கியத்தையும் சிதைக்கும்...’’ என முகத்தில் அறைந்துள்ளது. இந்த ஆய்வில் பதில் அளித்தவர்களில் 36% பேர், பள்ளிகள் மூடப்பட்டதால் குறைந்த மற்றும் தரமில்லாத உணவைச் சாப்பிட வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (ஐ.சி.டி.எஸ்) அல்லது கிராம சுகாதார மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் இதுவரை வளரிளம் பெண்கள் சில சலுகைகளைப் பெற்று வந்தார்கள்.
அதாவது பொதுவான வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து மாத்திரைகள், வீட்டு உணவுப்பொருட்கள் (THR) போன்றவை அவர்களுக்கு கிடைத்தன. இந்த ஊரடங்கால் அவை அனைத்தும் கிடைக்காமல் தடைப்பட்டுள்ளன. ஏற்கனவே இந்திய வளரிளம் சிறுமிகளில் 51.8% பேர் இரத்த சோகைக்கு ஆளாகியுள்ளனர் என்கிறது புள்ளிவிபரம். இந்த எண்ணிக்கை கொரோனா காலத்தில் அதிகரிக்கும் என்கிறார்கள்.
அனைத்துக்கும் மேலாக ஊரடங்கின் போது கல்வி பெரும் சவாலாக மாறியுள்ளது. ஏனென்றால், ஆன்லைன் வகுப்புகள் பரவலாக எல்லோருக்கும் கிடைக்க, உள்கட்டமைப்பு தேவைப்படுகிறது. 75வது தேசிய மாதிரி ஆய்வு (என்எஸ்எஸ்) 2017 18 கணக்கெடுப்பின்படி இந்திய குடும்பங்களில் 89.3% பேரிடம் கம்ப்யூட்டரும், 76.2% பேரிடம் இணையதள வசதியும் இல்லை!
“தரமான கல்வி, உடல் ஆரோக்கியம் கிடைக்காததால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். ஊட்டச்சத்து பெரிய சவாலாகவே இருக்கிறது. எப்போதுமே குழந்தை திருமணம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது இந்த நேரத்தில் சாதகமாக மாறியிருக்கிறது...’’ என்றபடி பிராக்சிஸ் இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வுகளின் அடிப்படையில் தமிழக நிலை குறித்து விளக்க ஆரம்பித்தார் ஆக்ஷன் எய்ட் இந்தியா அமைப்பின் இணை இயக்குனரான எஸ்தர் மரியசெல்வம்.
‘‘கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கு பல்வேறு கனவுகளோடு வந்தவர்கள் இன்று மீண்டும் தங்கள் சொந்த இடத்திற்கு நகர்ந்துள்ளனர். இவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காய்கறிகள், பழங்களை எல்லாம் எப்படி வாங்கி தங்கள் குழந்தைகளுக்குத் தர முடியும்? இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அந்தக் குழந்தைகளுக்கு குறைகிறது.
இப்போது பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் சிறுமிகளுக்கு வழங்கப்பட்டு வந்த வைட்டமின், இரும்புச்சத்து மாத்திரைகள் கிடைக்காமல் உள்ளது. இந்த மாத்திரைகளோடு, சுகாதார நாப்கின்களையும் வீடு வீடாக அரசு வழங்க முன்வரவேண்டும்...’’ என்கிறார் எஸ்தர் மரியசெல்வம்.
அன்னம் அரசு
|