கொரோனா காலத்தில் ரூ.17,47,02,25,00,00,000 அமெரிக்க மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது!



அமெரிக்காவிலிருந்து நூருத்தீன்

அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் எனக்கும் என் மனைவிக்கும் கடிதம் ஒன்று அனுப்பியிருந்தார். இரண்டு நாள்களுக்கு முன் வந்தது. ஒரு பக்க நீளமுள்ள அக்கடிதத்தின் சாராம்சம் இதுதான் ‘உலகளாவிய கொரோனா பரவலால் நமது நாடு பொது சுகாதாரத்திலும் பொருளாதாரத்திலும் முன்னெப்போதும் கண்டிராத சவாலைச் சந்தித்துள்ளது. உங்களது ஆரோக்கியமும் பாதுகாப்பும் எங்களிடம் முன்னுரிமை பெற்றவை.

கண்ணுக்குத் தெரியாத இந்த எதிரியை எதிர்த்து போர் நடத்திக்கொண்டுள்ள இந்நேரத்தில், பொருளாதாரச் சீரழிவினால் பாதிப்படைந்துள்ள குடிமக்களான உங்களைப் பாதுகாக்க இராப் பகல் பாராது பணியாற்றி வருகிறோம். இச்சோதனையான காலகட்டத்தில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தேவையான ஆதரவை அளிக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.

இரு கட்சி ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி அமெரிக்க மக்களுக்கு வழங்கப்பட இருக்கும் 2.2 டிரில்லியன் டாலர் நிவாரணத் தொகையிலிருந்து உங்களுக்கான பங்காக ஆயிரத்து சொச்சம் டாலர் அனுப்பியிருக்கிறோம். இந்நேரத்தில் இத்தொகை உங்களுக்கு தகுந்த முறையில் உதவும் என்று நம்புகிறோம்...’இக்கடிதம் வந்து சேர்வதற்குள், இரு வாரம் முன்னர் அந்தக் காசோலை எங்கள் கைக்கு கிடைத்து, பணமும் வங்கியில் வந்து விட்டது.

கொரோனா வைரஸ் அமெரிக்காவில் நுழைந்து சரசரவென பரவி, கிடுகிடுவென மரண எண்ணிக்கை உயர ஆரம்பித்ததும் நாட்டில் சோக மேகம்.
பலிகளில் மக்கள் கிலியுற்றது ஒருபுறம் என்றால் கொரோனா ஏற்படுத்தத் தொடங்கிய பொருளாதாரச் சீரழிவு அமெரிக்கர்களின் இராத் தூக்கத்தைக் கெடுத்தது. வேலையின்றிப் போனவர்கள் எண்ணிக்கை முதல் மூன்று வாரங்களிலேயே கோடியைத் தாண்டியது.

வேலையில்லாதவர்களுக்கு அளிக்கப்படும் நலத்திட்டத்திற்கு வந்து குவிய ஆரம்பித்த உதவிகோரல் விண்ணப்பங்களினால் மூச்சுத் திணறியது தொழிலாளர் துறை. அமெரிக்கப் பொருளாதாரம் ஆக மந்தகதியில் இருந்ததாகக் கருதப்பட்ட காலகட்டங்களின் எண்ணிக்கையை எல்லாம் அது அலேக்காகத் தூக்கியடித்தது.

‘சந்தேகமேயில்லை. இது மாபெரும் எண்ணிக்கை’ என்று மெய்க் கவலையுடன் தலையை ஆட்டினார்கள் பொருளாதார வல்லுநர்கள். ‘இது வெறுமே ஆரம்பம்தான். மேலும் அதிகரிக்கும்’ என்று கருத்து வேறுபாடின்றி ஒப்புக்கொண்டார்கள். ‘ஒட்டுமொத்த பொருளாதாரமும் திடீரென கருந்துளைக்குள் விழுந்துவிட்டதைப் போல் உள்ளது’ என்றார் கேத்தி போஸ்டான்சிக் (Kathy Bostjancic). ஆக்ஸ்போர்டு பொருளாதாரப் பிரிவில் அமெரிக்க நிதிப் பொருளாதார தலைமை நிபுணர் இவர்.

மாத வருமானத்தை நம்பி குடும்பத்தை ஓட்டும் மக்கள் வேலை இன்றி போனதும் உணவுக்கும் வாடகைக்கும் குடும்பத்தின் அவசியச் செலவுகளுக்கும் என்ன செய்வார்கள்? ஏதாவது செய்துதான் ஆகவேண்டும் என்று உணர்ந்தது அரசு. மார்ச் 27, 2020ம் நாள் இரு கட்சிகளின் ஏகோபித்த ஆதரவுடன் Coronavirus Aid, Relief and Economic Security Act (CARES Act) சட்டமானது. மத்திய இருப்பு நிதியிலிருந்து 2.3 டிரில்லியன் டாலர்கள் ஊக்க நிதியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது 2,300,000,000,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.17,47,02,25,00,00,000!).

அமெரிக்க அரசாங்கம் வழங்கும் நிதியுதவியிலிருந்து ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் சிறு தொகை ஒன்று வந்து சேரும். ‘அது அந்தக் குடும்பங்கள் நெருக்கடியிலிருந்து தப்பிக்க உதவும். மக்களைப் பொருளாதாரப் பேரழிவிலிருந்து காப்பாற்றி, குடும்பத்தைப் பராமரித்து மீள உறுதி செய்யும்’ என்று சான் பிரான்சிஸ்கோவின் மத்திய ரிசர்வ் வங்கியின் மூத்த துணைத் தலைவர் ராபர்ட் ஜி.வாலெட்டா (Robert G.Valletta) கூறினார்.

‘கடுமையான இந்நெருக்கடியின்போது இந்த உதவி நிதி மளிகை வாங்க, வாடகை செலுத்த, மக்களுக்கு உதவும்; நிறுவனங்கள் முற்றிலும் முடங்கிவிடாமல் தொடர்ந்து இயங்க வழி செய்யும்; நோயிலிருந்து நாடு மீளும்போது பெரும் சரிவிலிருந்து இது காப்பாற்றும்’ என்றார் பொருளாதார வல்லுநர் கேத்தி பரேரா (Cathy Barrera).

அந்த நிவாரணத் தொகையைத்தான் வெகு துரிதமாக நாட்டு மக்களுக்கு அனுப்பி வருகிறார்கள். கூடவே மேற்சொன்ன கடிதம்.
இவையன்றி கொரோனா வைரஸ் செலவுகளை ஈடுகட்ட மாநிலங்கள், பிரதேசங்கள், பழங்குடிப் பகுதிகளில் உள்ள அரசாங்கங்கள் ஆகியனவற்றுக்கு உதவவும் காங்கிரஸ் 150 பில்லியன்களில் டாலர்களை ஒதுக்கியுள்ளது.

இத்திட்டங்களும் உதவித் தொகையும் எந்த அளவு இந்நாட்டின் பொருளாதாரத்தைத் தூக்கிப் பிடிக்கும், சீர் செய்யும், அமெரிக்கா மீண்டு எழ உதவும் என்ற ஆராய்ச்சியும் விவாதமும் கருத்தும் எனது அறிவுக்கு அப்பாற்பட்டவை. இக்கட்டுரையின் நோக்கமும் அவையல்ல. கவலையானது வேறு சில.
டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளாய் அவரது அரசியல் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் தனி ரகம். அவரது கட்சிக்காரர்களும் அரசவை நிபுணர்களுமேகூட ரூம் போட்டு சுவரில் தலையை முட்டிக்கொள்ளும் சிறப்பு ரகம்.

கொரோனா பிரச்னையின் முழு வீரியத்தைத் தாமதமாக உணரத் தொடங்கியபின், அதிரடி செயல்பாடுகள் என்று அவர் எடுத்த முடிவுகள், அளித்த பேட்டிகள் எல்லாம் World Health Organization (WHO) உட்பட பலருக்கும் எக்கச்சக்க தலைவலியே.முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவது, சர்வ சாதாரணமாகப் பொய்த் தகவல்களைத் தெறிக்க விடுவது என்று வழக்கமாக அமையும் அவரது பேட்டிகள் அசாதாரணமான இக்காலகட்டத்திலும் தொடரத்தான் செய்தன.

இனியும் இவற்றையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாது என்று ஊடகத்தினர் கொதித்துப் போய்விட்டார்கள். ‘பொறுத்தது போதும், அவர் சொல்வதை அப்படியே நாம் மக்களுக்கு அளிக்காமல், அவர் தரும் தகவல்களின் நம்பகத்தன்மையை விசாரித்துதான் வெளியிட வேண்டும்’ என்று ட்வீட் செய்தார் மிகா (Mika Brzezinski) என்ற தொலைக்காட்சி தொகுப்பாளினி.

அதிபர்தான் அப்படியே தவிர, அமெரிக்கா உருவாக்கி வைத்துள்ள சிஸ்டம் மோசமடையவில்லை என்பதுதான் அமெரிக்க மக்களுக்கு ஓரளவாவது ஆறுதல் அளித்த விஷயம். அமெரிக்க மாநிலங்களின் ஆளுநர்கள் அதிபர் டிரம்பின் கோக்குமாக்கு அதிரடி அறிவிப்புகளை ஒதுக்கிவிட்டு, அவருடன் முட்டிக்கொண்டு, மக்கள் நலன் அடிப்படையில் முடிவெடுத்து அதன்படி செயல்பாடுகளை அமைத்துக்கொண்டதால் நிர்வாகம் கெட்டுப்போகாமல் தப்பித்தது.  

அதிபரை எதிர்த்து முகத்துக்கு எதிரே கேள்வி கேட்கும் சுதந்திரம் இன்னும் பறிக்கப்படவில்லை என்பதால் அரசின் செயல்முறைகளை ஊடகங்கள் விமர்சித்து, இந்த நேரத்தில் அடுத்து எதைப் பற்றிக் கவலைப்பட வேண்டுமோ, பேச வேண்டுமோ அதைச் செய்கிறார்கள். இவ்விதம் அந்த சிஸ்டம் சீரழியாமல் இயங்குவதால் காங்கிரஸ் திட்டம் என்று ஒன்றைச் சொல்லி சட்டம் என்று அதை நிறைவேற்றியதால் குடிமக்கள் கையில் மெய்யாகவே டாலர் வந்து சேர்ந்தது.

நிவாரண நிதி அரசாங்கத்தினுடையது. ஆனால், வந்து சேர்ந்த காசோலையில் இருந்த வாசகமும் மேற்சொன்ன கடிதத்தில் அமைந்துள்ள தொனியும் டொனால்ட் டிரம்புக்கு விளம்பரமாக, நெருங்கும் தேர்தலை மனத்தில் கொண்டதாக அமைந்திருப்பது தற்செயல் அல்ல என்றாலும் இந்திய அரசியல் தேர்தல்களைக் கண்டு வளர்ந்தவர்களுக்கு அவையெல்லாம் ஒரு பொருட்டா என்ன?

தேர்தல் நேரத்தில் தலைக்கு இத்தனை என்று நிர்ணயிக்கப்படும் பணம், ஆட்சிக்கு வந்தால் இன்னின்ன இலவசம் என்று மக்களின் புத்தியை அடிமைப்படுத்தும் யுக்தி, பேரிடர் நிவாரணங்களிலும் கூச்சமற்ற ஊழல்... என்ன கேவலம் இன்னும் இந்திய அரசியலில் பாக்கியிருக்கிறது?

பழகி விட்டோம்; புத்தி மரத்துப்போய் ஜடமாகி விட்டோம்; தொலையட்டும் என்று அந்த அரசியலுக்கு வாழப் பழகிவிட்ட இந்தியர்களுக்கு இந்தக் கொடுமையான கொரோனா காலத்தில் அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது?பூஜ்யங்கள் பூத்துக் குலுங்கும் வகையில் எண்களை அமைத்து நிவாரணத்தை மட்டும் அறிவித்தால் அது தலைப்புச் செய்திக்குத்தானே உதவும்? கையில் காசு கிடைத்தால்தான் வாயில் தோசை!