ஆன்லைன் கல்வி... கட்டண வசூல்... மக்களின் கோவணத்தை உருவும் மத்திய, மாநில அரசுகள்!



தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், தனியார் பள்ளிகள் ஆன்லைனில் வகுப்புகளைத் தொடங்கி நடத்திவருகின்றன. அத்துடன் பல தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை உடனே கட்ட வேண்டுமென சொல்லிவிட்டன.

இந்தப் பேரிடர் காலத்தில் உடனே பள்ளிக் கல்விக் கட்டணத்தை பெற்றோர்களால் எப்படி செலுத்த முடியும்..? மக்களின் அன்றாட வாழ்வே கேள்விக்
குறியாக நிற்கும் நிலையில் ஆன்லைன் கல்வி அவசியம்தானா?ஏனெனில், கடந்த வாரம் கேரளாவில் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடியாத வருத்தத்தில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கல்வியாளர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதற்கிடையில் கர்நாடகா அரசு எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆன்லைன் கல்வியை தடை செய்து, 6ம் வகுப்பு முதல் 12 வரைக்கும் ஆன்லைன் கல்வியின் நன்மை தீமைகளை ஆராய ஒரு குழுவை அமைத்துள்ளது. இச்சூழலில் தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ‘‘எனக்கு ரெண்டு பசங்க.

பையன் அஞ்சாவதும், பொண்ணு மூணாவதும் படிக்கிறாங்க. கணவர் வெளிநாட்டுல இருக்கார். இப்ப, என்கிட்ட மட்டும்தான் ஸ்மார்ட் போன் இருக்கு. அதனால, ஒருத்தர் படிச்சபிறகே இன்னொருத்தரைப் படிக்க வைக்க முடியுது...’’ என்றபடி பேசத் தொடங்கினார் பெயர் குறிப்பிட விரும்பாத நெல்லையைச் சேர்ந்த குடும்பத் தலைவி.  

‘‘இதைவிட கஷ்டம் கல்விக் கட்டணம்தான். ஸ்கூல் எப்ப திறப்பாங்கனு தெரியல. ஆனா, ஃபீஸ் கட்ட சொன்னாங்க. சரினு கட்டினேன். பஸ் கட்டணத்தையும் சேர்த்து கட்டச் சொன்னாங்க. ‘ஸ்கூல் திறக்கலையே. செப்டம்பர் வரை இப்படியிருக்கும்னு வேற சொல்றாங்க. ஏன் கட்டணும்’னு கேட்டேன். அவங்க, பஸ்களுக்கு வரி, இன்சூரன்ஸ் எல்லாம் கட்டணும்னு சொல்லி வசூலிச்சு ஆன்லைன் கல்வியை ஆரம்பிச்சாங்க.
பள்ளியில ஏற்கனவே ஒரு ‘app’ உருவாக்கி, அதுல பெற்றோர்கிட்ட தொடர்புல இருக்காங்க.

இப்ப அந்த app வழியா ஆன்லைன் கல்வியைக் கொடுக்கறாங்க. முதல்வாரம் யூ டியூப்ல பாடத்தை நடத்தினாங்க. இப்ப பி.டி.எஃப் ஃபைலா போடறாங்க. வாரம் ஒருநாள் தேர்வும் நடத்துறாங்க. ஆனா, ஸ்கூல்ல படிச்ச மாதிரியே இல்லனு பசங்க சொல்றாங்க. ஸ்கூலைப் பொறுத்தவரை முதல்ல மிஸ் அந்தப் பாடத்தை படிச்சுப் புரிஞ்சுப்பாங்க. அப்புறம், பசங்களுக்கு தெளிவா புரிகிற மாதிரி சொல்லித் தருவாங்க.

ஆன்லைன் வகுப்புல டாக்குமெண்ட்டா பாடத்தைக் கொடுத்திடறாங்க. இதுல சில பாடங்கள் புரியறதில்ல. சமயங்கள்ல நெட்வொர்க்கும் கிடைக்க மாட்டேங்குது...’’ என சிரமங்களைப் பட்டியலிடுகிறார் இந்த நெல்லை குடும்பத் தலைவி.  ஆனால், சென்னையைச் சேர்ந்த குடும்பத் தலைவியோ ஆன்லைன் கல்வியை வரவேற்கிறார். ‘‘என் பொண்ணு ப்ளஸ் டூவும் பையன் நாலாவதும் படிக்கிறாங்க. பொண்ணுக்கு தினமும் நாலு மணி நேரமும் பையனுக்கு ரெண்டு மணி நேரமும் கிளாஸ்.

பள்ளியிலிருந்து ஒரு தனியார் app மூலம் கிளாஸ் மிஸ்ஸே நேரடியா வகுப்பெடுக்கறாங்க. பையன் கூடவே இருந்து நான் சொல்லிக் கொடுக்கறேன்.
இதுவரை வீட்டுல டிவி, திரைப்படம்னு பொழுதைக் கழிச்சாங்க. இப்ப ஆன்லைன் வகுப்பால கொஞ்சம் பள்ளிப் பாடத்தைப் படிக்க ஆரம்பிச்சிருக்காங்க. அதேமாதிரி பள்ளி யிலும் கல்விக் கட்டணத்துல ரூ.2 ஆயிரம் குறைச்சிருக்காங்க...’’ என்கிறார் இவர்.

இப்படி இரு வேறுபட்ட எண்ணங்களுடன் பெற்றோர்கள் இருக்கும் நிலையில் குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் தேவநேயன் முக்கியமான பல பிரச்னைகளைப் பட்டியலிடுகிறார்.  ‘‘இப்போதைய கல்விச் சூழல்ல தொழில்நுட்ப வளர்ச்சியா கம்ப்யூட்டரைப் பயன்படுத்துறதை ஏத்துக்கிறோம். ஆனா, அது குழந்தைகளைப் பாகுபடுத்தக்கூடாது. தனியார் பள்ளினு ஒரு கான்செப்ட் வந்தபிறகே பணம் இருக்குறவனுக்கு ஒருவித கல்வி யும் பணம் இல்லாதவனுக்கு வேறுவித கல்வியுமா மாறுச்சு. இப்ப இந்த ஆன்லைன் கல்வி அதே பாகுபாட்டை இன்னும் ஆழமாக்கியிருக்கு.

வசதியான குழந்தைகள் ஆன்லைன்ல மூணு மாசம் கத்துப்பாங்க. செப்டம்பர்ல பள்ளி திறக்கும்போது வசதியில்லாத பசங்க ஒண்ணும் தெரியாம இருப்பாங்க. ஆனா, தேர்வு ரெண்டு பேருக்கும் பொதுவானதா இருக்கு. அப்ப யார் நல்லா மதிப்பெண் எடுக்க முடியும்?

பள்ளிகள்ல 70% குழந்தைகள் ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவங்க. இந்த குழந்தைகள்ல பலர் சாப்பாட்டுக்கே வழியில்லாம கஷ்டப்படுறவங்க. அவங்க சாப்பாட்டுக்கு வழி தேடுவாங்களா இல்ல ஆண்ட்ராய்டு போனுக்கு வழி தேடுவாங்களா? லாக்டவுன் அறிவிச்சதும் லட்சக்கணக்கான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு சென்னையை விட்டு போயிட்டாங்க. அவங்கல்லாம் எப்படி ஆன்லைன்ல படிக்க முடியும்?
கடைக்கோடியிலிருக்கும் குழந்தைக்கும் கல்வி கிடைக்கணும் என்பதே கல்வியின் இலக்கு. ஆனா, இங்க சென்னைக்குள்ளயே கண்ணகி நகரை எடுத்துக்கோங்க... அந்தக் குழந்தைங்க ஆண்ட்ராய்டை விட கொரோனா பயத்துல இருக்காங்க.

இன்னைக்கு பல தனியார் பள்ளிகள் ஆன்லைன் கல்விக்காக ஆண்ட்ராய்டு போன், லேப்டாப், டிஜிட்டல் பேட்டை எல்லாம் விற்கவும் ஆரம்பிச்சுட்டாங்க. ஃபீஸ் கட்ட சிரமமா இருக்கா... ஃபைனான்ஸுக்கு ஏற்பாடு பண்றோம்னு சொல்றாங்க! அதாவது ஃபைனான்ஸ் கம்பெனிகிட்ட டீலிங் வைச்சுகிட்டு அதுலயும் கமிஷன் பார்க்கறாங்க!

இது 70% ஏழை, நடுத்தர மக்களோட பிரச்னைனா... மீதியிருக்கிற 30% உயர் நடுத்தர வர்க்க பிள்ளைகளோட சிக்கல் வேற மாதிரி இருக்கு.
கம்ப்யூட்டரை அந்தக் குழந்தைங்க உற்று கவனிக்கறதால கண் பார்வைல பிரச்னை ஏற்படுது. அடுத்து, உளவியல்ரீதியான பிரச்னைகள் வருது.
கல்வி என்பது வெறும் மூளை சார்ந்ததல்ல. உணர்வு சார்ந்தது. கரிசனம், அக்கறை எல்லாம் கலந்ததுதான் கல்வியே ஒழிய இயந்திரத்தனமானதல்ல.
பொதுவா, நிறைய குழந்தைகள் கணக்குல வீக்கா இருப்பாங்க. அதை ஆசிரியர் நேரடியா இருந்து சொல்லிக் கொடுக்குமபோதுதான் தெளிவா புரியும். ஆனா, ஆன்லைன்ல ஒரு ஸ்டெப் மிஸ்ஸானாலும் புரியாது. மறுபடியும் நீங்க கேட்கவும் முடியாது.  

அடுத்து, கம்ப்யூட்டர்ல திடீர்னு இன்டர்நெட் ஒரு பொம்மையைக் காட்டுது. அதில் தெரியாமல் கை வைச்சா கூட வக்கிரமான பாலியல் தளங்களுக்கு போயிடுது. இது உண்மையில் நடந்த சம்பவம். இதுக்காக தமிழ்நாட்டுல ஒரு கேஸ் போடப்பட்டிருக்கு. ஆக, இந்த ஆன்லைன் குழந்தைகளை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாலியல்ரீதியாகவும் பாதிக்குது. ஆண்ட்ராய்டு போன் இருக்கறவனுக்கு ஒரு மரியாதை, இல்லாதவனுக்கு ஒரு மரியாதைனு குழந்தைகளை பிரிக்குது.

இதையெல்லாம் எடுத்துச் சொன்னா தனியார் பள்ளிகள் செப்டம்பர் மாசம் வரை வகுப்புகள் நடத்தாம என்ன பண்றதுனு கேட்கறாங்க. 2011ல சமச்சீர் கல்வி புத்தகம் வந்தப்ப செப்டம்பர் கடைசி வரை பாடங்கள் எதுவும் நடத்தப்படல. அப்பவும் இதேமாதிரி புது புத்தகம் வர்ற வரை சும்மாதான் பள்ளிகள் நடந்துச்சு. அதனால பசங்க பாதிக்கப்பட்டாங்களா?

இப்படியொரு இக்கட்டான நேரத்துல கல்வியை எப்படி எடுத்திட்டு போலாம்னு அரசு இதுவரை விவாதிக்கல. இதைப் பற்றி மூத்த கல்வியாளர்கள், ஆசிரியர்கள்கிட்ட கருத்தும் கேட்கலை.ஆனா, அரசு ஒரு டீம் உருவாக்கி இருக்கு. இதுல பள்ளிகள் சார்பா தனியார் பள்ளி நபர்கள் தான் இருக்காங்க.
சுனாமி, தானே, ஒக்கி, கஜானு எல்லா பேரிடர்களுக்குப் பின்னாடியும் நான் பணிசெய்திருக்கேன். அந்தப் பேரிடர்கள் முடிஞ்சபிறகு நிறைய குழந்தைத் திருமணம் நடந்திருக்கு.

பள்ளிகளிலிருந்து நின்று பல குழந்தைகள் தொழிலாளர்களாக மாறியிருக்காங்க. அதனால, குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதிக்கும் விஷயத்தைப் பற்றி விவாதிக்காம ஆன்லைன் கல்வி பத்தி பேசக் கூடாது...’’ என்கிறார் தேவநேயன். இதையெல்லாம் மறுக்கிறார் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரான கே.ஆர்.நந்தகுமார்.  

‘‘மார்ச் 19ம் தேதியே பள்ளிகளை மூடியாச்சு. அதனால, கடந்த ஆண்டுக்கான மூன்றாவது கால கட்டணத்தையே இன்னும் மாணவர்கள் கட்டல. இதனால, ஆசிரியர்களுக்கு சம்பளம் போடுறதில் சிக்கல் ஏற்பட்டிருக்கு.இங்க 20 ஆயிரம் தனியார் பள்ளிகள் இருக்குது. மொத்தமா ஒன்றரை லட்சம் ஆசிரியர்கள் வேலை பார்க்கறாங்க. தவிர, அரசால் அங்கீகரிக்கப்பட்ட எஃப்சி செய்யப்படுகிற பஸ்கள் 50 ஆயிரம். இதுல ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட டிரைவர், கண்டக்டர்கள் வேலை செய்றாங்க. இவங்களுடன் பிற ஊழியர்கள் இருக்காங்க.

இவங்க எல்லாத்துக்கும் பி.எஃப், இஎஸ்ஐ கட்டணும். அப்புறம், பள்ளிக்கு சொத்து வரி, தொழில்வரி செலுத்தணும். தவிர, கட்டட வரி, நில வரி, நீர் வரினு நிறைய கட்றோம். இதுதவிர வருமான வரி, சேவை வரி, வணிக வரியும் இருக்கு. அப்புறம், மின் கட்டணம் டபுளா கட்ேறாம். இதெல்லாம் எங்களுக்கு பெரிய சுமையா மாறியிருக்கு.

தவிர, பஸ்களுக்கு டிங்கரிங் பார்க்கணும். இன்சூரன்ஸ் கட்டணும். ஒரு வேனுக்கு 40 ஆயிரம் வரை இன்சூரன்ஸ் கட்றோம். இப்ப நாலு மாசம் ஸ்கூல் எதுவும் நடக்கல. இன்னும் நாலு மாசம் வண்டி ஓடாது. ஆனாலும் இந்த எட்டு மாசத்துக்கும் சேர்த்துதான் வரியும், இன்சூரன்ஸும் கட்ட வேண்டியிருக்கு.

அடுத்து, ஆசிரியர்களுக்கு சம்பளம். எல்லோருக்குமே நாங்க இந்த நிமிஷம் வரை சம்பளம் கொடுத்திருக்கோம். ஒன்றிரண்டு பள்ளிகள் பாதி சம்பளம் கொடுத்திருக்கலாம். ஆனா, கொடுக்காம யாரும் இல்ல. அதேபோல ஒருசில ஸ்கூல்கள்லதான் பெற்றோர் கல்விக் கட்டணம் கட்டியிருக்காங்க. அதுவும் நகர்ப்புற பள்ளிகள்தான். மத்தபடி நிறைய பெற்றோர் இன்னும் கட்டல. மத்திய அரசு செப்டம்பர்லதான் பள்ளினு சொல்லிடுச்சு. இதனால, பெற்றோர் இப்ப ஏன் ஃபீஸ் கட்டணும்னு நினைக்கிறாங்க.

சில பெற்றோர் முதல்ல கொஞ்சமா கட்டுவோம்னு கட்டறாங்க. பள்ளிகளும் எந்த வற்புறுத்தலும் பண்ணாம அவங்க கட்டுற பணத்தை வாங்கிக்கலாம்ங்கிற முடிவுக்கு வந்திட்டாங்க. இப்ப எந்தப் பள்ளியிலும் கட்டணம் அதிகரிக்கக் கூடாதுனு சங்கத்துல இருந்து ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே சொல்லிட்டோம்.

அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்விச் சட்டப்படி 25% மாணவர்களை நாங்க சேர்த்திட்டு இருக்கோம். ஒவ்வொரு பள்ளியும் 150 மாணவர்களுக்கு இலவசக் கல்வி கொடுக்குது. அந்தக் கட்டணத்தை அரசு எங்களுக்குத் தரணும். ஆனா, கடந்த 2019  20க்கு மட்டும் ரூ.500 கோடி பாக்கி இருக்கு. இதை மத்திய, மாநில அரசுகள் கொடுத்திருந்தா இந்த சம்பளப் பிரச்னை வந்திருக்காது.

மாணவர்கள் கொரோனா காலத்துல வீட்டுல இருந்தே பழக்கப்பட்டுட்டாங்க. பிறகு பள்ளி திறந்ததும் பாடத்தைக் கவனிக்கிறது எளிதா இருக்காது. பாடச்சுமையும் அதிகமாகிடும். ஆசிரியர்களும் கற்பித்தலில் தொடர்ந்து இருக்கணும்னுதான் இந்த ஆன்லைன் முறையைக் கையிலெடுத்தோம். இது ஒரு தற்காலிக தீர்வுதான்...’’ என்கிறார் நந்தகுமார்.

பேராச்சி கண்ணன்