தல! sixers story



மோடி ஈஸ் வாட்ச்சிங் யூ!

கடைசிப் பந்து.
பாகிஸ்தான் ஒரே ஒரு ரன் அடித்தால் போதும்.இளம் வீரர்கள் அடங்கிய இந்தியாவின் தன்னம்பிக்கையை ஒட்டுமொத்தமாக அடக்கி விடலாம்.
ஸ்ரீசாந்த் பந்து வீச ஓடிவருகிறார்.மிஸ்பா  உல்  அக் சட்டென விக்கெட்டை விட்டு விலகி வியர்வையைத் துடைத்துக் கொள்கிறார்.

அம்பயர் மறித்து கை காட்ட, பாதி தூரம் ஓடிவந்த ஸ்ரீசாந்த், டென்ஷனோடு நடந்து மீண்டும் முதலிலிருந்து ஓடி வருகிறார்.

பந்து வீச்சாளரை ெவறுப் பேற்ற இதுபோல டெக்னிக்குகளை பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பயன்படுத்துவதுண்டு.இருப்பினும்  ஸ்ரீசாந்த், தன் பொறுப்புணர்ந்து அந்த கடைசிப் பந்தை வீசினார்.ஆஃப்சைடில் பவுன்ஸர்.

விக்கெட்டை விட்டு விலகாமல், ஏறி அடிக்கவும் வழியில்லாமல் அப்பந்தை கவர் திசையில் தட்டி விட்டு ஓடுகிறார் மிஸ்பா.நேரடியாக ஃபீல்டரின் கைக்குப் போன பந்து, மின்னல் வேகத்தில் எதிர்முனையில் எறியப்படுகிறது.தன் கைக்கு பந்து வந்தவுடனேயே பேல்ஸை தட்டி விடுகிறார் சாந்த்.ரன் அவுட்.

டி20 உலகக் கோப்பையில் இந்தியா  பாகிஸ்தான் விளையாடிய முதல் போட்டியே யாருக்கும் வெற்றியில்லாமல் ‘டை’ ஆனது.எனினும் வெற்றியை நிர்ணயிக்க அப்போது ‘பவுல் அவுட்’ முறை கடைப்பிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவர் முறையெல்லாம் பிற்பாடுதான் நடைமுறைக்கு வந்தது.பவுல் அவுட் என்பதில் பேட்ஸ்மேனுக்கே வேலை இல்லை.இரு அணியும் தலா ஐந்து பவுலர்களை பயன்படுத்த வேண்டும்.

ஒரு பந்து இந்திய பவுலர் வீசினால், அடுத்த பந்தை பாகிஸ்தான் பவுலர் வீச வேண்டும். எந்த அணி அதிக முறை ஸ்டம்புகளை வீழ்த்துகிறதோ, அந்த அணிக்கே வெற்றிப் புள்ளிகள் கிடைக்கும்.

கால்பந்துப் போட்டிகளில் டிரா ஆகிவிட்டால் பெனால்ட்டி ஷூட்அவுட் நடத்துவதைப் போல இந்த பவுல் அவுட்.தோல்வியிலிருந்து மீண்டு விட்ட இந்திய அணிக்கு அடுத்த சத்திய சோதனை.பாகிஸ்தானிடம் துல்லியமாக வீசக்கூடிய மிகச்சிறந்த பவுலர்கள் இருந்தார்கள்.அவர்களை ஒப்பிடுகையில் அப்போது நம்முடைய பவுலர்களில் ஹர்பஜன் சிங்கை தவிர்த்து மற்றவர்கள் கொஞ்சம் ஆவரேஜ்தான்.

எனவே, பவுல் அவுட் முறையில் பாகிஸ்தான் எளிதாக வெல்லப் போகிறது என்றே அனைவரும் நினைத்தார்கள்.இந்த இடத்தில்தான் தோனி, தான் ஒரு சிறந்த ‘தல’ என்பதை நிரூபித்தார்.கடைசி ஓவரில் அட்டகாசப்படுத்தி இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பாற்றிய ஸ்ரீசாந்திடம்தான் முதலில் பந்தை தருவார் என்று ஒட்டுமொத்த ஸ்டேடியமும் எதிர்பார்த்தது.ஆனால் அவரோ பந்துவீச பார்ட்டைம் பவுலரான வீரேந்திர சேவாக்கை அழைத்தார்.ம்ஹூம். தோனி தப்பான முடிவை எடுத்துவிட்டார் என்றுதான் அனைவரும் நினைத்தார்கள்.

இந்தியாவில் டிவியில் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்த அத்தனை பேரும் ‘முடிஞ்சது ஜோலி’ என்றே நினைத்தார்கள்.சேவாக் முகத்திலும் மரண பீதி.ஆனால் சேவாக் வீசிய பந்து துல்லியமாக ஸ்டம்பை தாக்கியது.தன்மீது தனக்கே இல்லாத நம்பிக்கை தோனிக்கு இருந்தது குறித்து நெகிழ்ந்துபோன சேவாக், ஓடிவந்து கட்டிக் கொண்டார்.அடுத்து பாகிஸ்தானின் முறை.

அராபத், அசால்ட்டாக ஃபுல்டாஸ் வீசி ஸ்டம்ப்பை எகிற வைக்கலாம் என்று நினைத்தார்.அந்தோ பரிதாபம்.மிஸ்ஸிங்.முதல் ரவுண்டில் இந்தியாவுக்கு வெற்றி.அடுத்து இந்தியாவின் சார்பாக ஹர்பஜன் சிங் அழைக்கப்பட்டார். ‘ரிஸ்க்கெல்லாம் எனக்கு ரஸ்க்கு சாப்புடற மாதிரி’ என்று அலட்சியமாக ஸ்டம்புகளை வீழ்த்தி, வெற்றிச் சின்னத்தைக் காட்டினார்.இந்த ரவுண்டில் பாகிஸ்தான் சார்பாக களமிறங்கிய உமர்குல், ரொம்ப தூரம் ஓடாமல் மெதுவாக ஓடிவந்து ஸ்டம்புகளை நோக்கி வீசினார்.ம்ஹூம்.

இம்முறையும் மிஸ்ஸிங்.பவுல்  அவுட்டில் 2  0 என்கிற அடிப்படையில் இந்தியா முன்னணி.மூன்றாவது ரவுண்டிலும் இந்தியா வென்றுவிட்டால், நான்கு மற்றும் ஐந்து ரவுண்டுகளுக்கு தேவையே இருக்காது.மூன்றாவது ரவுண்டுக்கும் தன்னுடைய ராஜதந்திரத்தை வெளிப்படுத்தினார் தோனி.இம்முறை பந்து வீச அழைக்கப்பட்டவர் இன்னொரு பார்ட் டைம் பவுலரான ராபின் உத்தப்பா.இந்த தோனிக்கு என்னதான் ஆச்சு? ஸ்ரீசாந்த், ஆர்.பி.சிங், அகர்கர், இர்பான் பதானெல்லாம் இருக்க உத்தப்பாவை அழைக்கிறாரே? அமாவாசை சோறு எல்லா பாலுக்கும் கிடைக்குமா என்றுதான் ரசிகர்கள் நினைத்தார்கள்.

இந்த முறையும் அதிர்ஷ்டம் தோனியின் பக்கமே இருந்தது.உத்தப்பா வீசிய பந்து ஸ்டம்புகளை மாங்காய் குறி கணக்காகத் தாக்கியது.
ஒட்டுமொத்த ஸ்டேடியமும் ஆர்ப்பரிக்க, உத்தப்பா ஸ்டைலாக தன் தொப்பியைக் கழற்றி முதுகு வளைத்து கூட்டத்துக்கு மரியாதை செய்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அடுத்து பாகிஸ்தானுக்கு பந்துவீச வந்த அப்ரிடியும் கோட்டைவிட…இந்தியா பவுல் அவுட் முறையில் 3  0 என்கிற கணக்கில் வென்றது.உலகக்கோப்பைப் போட்டிகளில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதில்லை என்கிற சாதனையையும் தக்க வைத்துக் கொண்டது.

ஒட்டுமொத்த உலகக் கிரிக்கெட் ரசிகர்களையும் த்ரில்லிங்கில் நகம் கடிக்க வைத்த மகத்தான போட்டி அது.இந்திய வீரர்கள் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துக் கொண்டும், முக்கியப் பங்களிப்பு செய்த வீரர்களை தலைக்கு மேல் தூக்கி வலம் வந்தும் தங்கள் கொண்டாட்டத்தைத் தொடங்கினார்கள்.இந்த பிரமாதமான வெற்றிக்கு மூளையாக விளங்கிய தோனியோ, ‘கரகாட்டக்காரன்’ செந்தில் கணக்காக எதுவுமே நடக்காதது மாதிரி வெகு கூலாக பெவிலியனை நோக்கி நடை போட்டார்.

‘மிஸ்டர் கூல் கேப்டன்’ என்கிற பட்டம் பிற்பாடு ரசிகர்களால் தோனிக்கு வழங்கப்பட, இந்த ‘அடக்கம் அமரருள் உய்க்கம்’ பண்புதான் காரணம்.
ஸ்டேடியத்தில் பிரமுகர்கள் அமரும் இருக்கையில் இரு கண்கள் மட்டும் தோனியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன.அது மோடியின் கண்கள்.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அல்ல. அவர் அப்போது குஜராத்தின் முதல்வராகத்தான் இருந்தார்.இது லலித் மோடி.அப்போதைய இந்திய கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டின் துணைத் தலைவர்.பின்னாளில் ஐபிஎல் போட்டிகளின் தலைவராக உயர்ந்தவர்.

(தூக்கி அடிப்போம்)

செய்தி: யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்