லவ் ஸ்டோரி-என்னுடையது த்ரில்லர் ஸ்டோரி! இயக்குநர் அறிவழகன்



இதுதான் காதல்னு என்னால சொல்ல முடியல… ஆனா, இவ என் லைஃப் ஃபுல்லா நம்ம கூட இருக்கணும்… நமக்குன்னு இவ இருக்கணும்… அவளுக்குன்னு நாம இருக்கணும்… எந்த பொண்ணுகிட்ட இது நமக்கு தோணுதோ, அந்த உரிமைதான் காதல்.
‘ஈரம்’ படம் பண்ணப்ப, அப்ப எங்களுக்குள்ள எந்தவித பிடிப்பும் இல்லாம நட்பு முறையிலதான் பேசுனோம். படம் முடிஞ்ச பிறகு எப்ப எனக்குள்ள தோணுச்சோ, அந்த நொடில அவகிட்ட நான்தான் முதல்ல சொன்னேன்.

ரெண்டு நாள் அவ பேசல. அதுக்கப்புறம் அவ போன் பண்ணா. அதுதான் அவ ஓகே சொன்னதுக்கான கால்னு எடுத்துகிட்டேன். அதுக்கப்புறம் உடனே அவங்க அம்மாகிட்ட நேரிடையாவே சொல்லிட்டேன். அவங்க வேணான்னு சொல்லிட்டாங்க. அப்பதான் அவ வேணும்னு தோணுச்சு.

பார்க், பீச், சினிமா, கோயில்னு எங்கயும் சுத்துனதில்ல. வெறும் போன்தான். எங்க லைப்ல செல்போன் பெரிய ரோலே பண்ணியிருக்கு. அதுக்கப்புறம் ஒரு ஸ்டேஜ்ல அவங்க பெத்தவங்க சைட்ல பெரிய பிரச்னை ஆச்சு. அவங்க வீட்டுல அவ எதுவுமே சாப்பிடாம, ரொம்ப வருத்திகிட்டு உடம்பு சரியில்லாம போச்சு.

என்னை விட அதிகம் கஷ்டப்படுறது அவதான்னு புரிய ஆரம்பிச்சது. ஒரு நாள் அவங்க அம்மா, அப்பா கட்டாயப்படுத்தி அவ போன்ல பேசுனப்ப, நாங்க பிரியறதுதான் எல்லாத்துக்கும் நல்லதுன்னு தோணுச்சு. நாங்களே எங்களுக்குள்ள ஒரு பிரிவை ஏற்படுத்திகிட்டோம்.

எங்க வீட்ல பொண்ணு பாக்க ஓகே சொல்லிட்டேன். அதுக்கப்புறம்தான் நாளாக நாளாக எதையோ மிஸ் பண்றோம்னு தோணுச்சு. அவ இடத்துல வேற யாரோ வரப் போறாங்கன்னு தோண ஆரம்பிச்சதும் என்னால முடியல.

நமக்குன்னு ஒரு கனவு, லட்சியம், சினிமான்னு இருக்கு. இந்த லவ் அவமானம் தேவையான்னு யோசிச்சேன்.சினிமா, எழுத்து எல்லாம் ஏன் எனக்குள்ள உருவாகிச்சு… வெறும் திறமை, உழைப்பு மட்டும் கிடையாது. இது எல்லாம் உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம். எனக்குள்ள இருக்கிற அந்த எமோஷன்தான் இதெல்லாத்துக்கும் காரணம்னா, அப்ப நான் லவ் பண்ண பொண்ணு வேணும்னு நினைக்கிறதும் அதே உணர்வுதான். அதனால தப்பில்லேன்னு தோணுச்சு.

திரும்பவும் செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பிச்சேன்.அப்ப அவ எங்க இருக்கான்னு கூட தெரியாது. போன் நம்பரும் இல்லை. எப்படியாவது அவளைக் கண்டு பிடிக்கணும் என்கிற அந்த எண்ணம்தான் என்னோட GPSசா இருந்துச்சு. அப்ப சினிமா ஸ்டிரைக் நடந்துட்டு இருந்ததுனால இன்னும் முழுமையா இறங்கினேன். எல்லா விதமான முயற்சியும் செஞ்சேன்.

அவ வீட்டு அட்ரஸ், அவங்க அம்மா போன் நம்பர், அவளுக்கு வேறொரு போனும், சிம் கார்டும் கொடுத்ததுன்னு வரிசையா பிளானிங்கா நடந்தது. இதை ஒரு லவ் ஸ்டோரின்னு கூட சொல்ல முடியாது. த்ரில்லர் ஸ்டோரின்னுதான் சொல்லணும். சினிமாவா ரெண்டு மணி நேரத்துல சொல்ற விஷயமும் அல்ல. வெப் சீரிஸ் மாதிரி பத்து எபிசோடுக்கு சமம்.

எல்லா விதத்திலும் நான் அவள தேடிட்டு இருக்கேன்னு அவ உள்ளுணர்வு சொல்லிச்சோ என்னவோ... அவங்க அம்மா போன்ல இருந்து ஒரு மெஸேஜ் வந்தப்ப, அவதான்னு தெரிஞ்சது. ஒண்ணே ஒண்ணுதான் கேட்டேன். என் ஹீரா கிடைச்சுட்டாளான்னு! அரை நிமிஷம் இருக்கும். கிடைச்சிட்டான்னு ஒரே பதில்தான் வந்தது. அந்த ஃபீலிங்… சொல்லத் தெரியல… சொல்ல முடியல.

திரும்பவும் போன் மூலம் நாங்க பேசிட்டு இருக்கிறது அவங்க வீட்டுல தெரிஞ்சதுக்கு அப்புறம் திரும்பவும் என்னை விட அவதான் கஷ்டப்பட்டாள். அதனால எந்த நேரமும் அவளைக் கூட்டிட்டு வர்றதுக்கு ரெடியா இருக்கணும்னு தோணுச்சு.

டக்குன்னு ஒரு நாள் அவளைக் கூட்டிட்டு வந்து ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிகிட்டேன். என்னோட உதவி இயக்குநர்கள் நண்பர்களா மாறி மேரேஜ் பண்ண வச்சாங்க. எங்க அப்பா அம்மா ஆசீர்வாதம் கிடைச்சுது. கொஞ்ச நாள்லயே அவங்க அம்மாவும் புரிஞ்சுகிட்டாங்க, அதுக்கப்புறம் திருப்பதில கல்யாணம்.

எங்க ஹனிமூன் கூட நாங்க பெருசா பிளான் பண்ணல. முதன் முதலா கோயிலுக்கு தான் போனோம். ஏன்னா… பெருசா தாண்டி வந்த மாதிரி இருந்தது. முதல் தேங்க்ஸ் கார்ட் கடவுளுக்குனா, ரெண்டாவது தேங்க்ஸ் கார்ட் கிரஹாம் பெல்லுக்கு.   

மனைவிங்கிறது நம்ம பெட்டர் ஹாஃப். ஊடல் இல்லாத காதல் உண்டா? கல்யாணத்துக்கு பின்னாடி நிறைய. சின்னதாக, பெரியதாக ஒவ்வொரு சண்டை வரும்போதும் அந்த செகண்ட்ல நான் நினைக்கிறது... எப்பவும் இவளைக் கை விட்றக் கூடாது… அவள் இல்லாத லைஃபை முன்னாடியே வாழ்ந்துட்டேன். திரும்பவும் அப்படி ஒரு நிலைமையை உருவாக்கக் கூடாதுன்னுதான்.

இன்னிக்கு அந்த ஊடல்தான் எல்லா சந்தோஷங்களுக்குமான பலம்.ஹீரா... வீட்டுல நான் தினமும் உச்சரிக்க நினைச்ச பேரு. அது கிடைச்சிருக்கு. அத என்னைக்கும் இழந்திடக் கூடாது என்பதில் தெளிவா இருந்தேன்… இருக்கேன்.நான் கொஞ்சம் துவண்டாலும் என் கண்ணு அவளுக்கு மட்டும் அதைக் காட்டிக் கொடுத்திடும். என்னாச்சுன்னு கேப்பா. அந்த ஒரு வார்த்தை போதும். சரியாகிடுவேன்.

நிமிஷத்துக்கு நிமிஷம் நாம வார்த்தையில ‘லவ் யூ’ சொல்றதை அவங்க எதிர்பார்க்கல. நம்ம தினசரி வேலைல நமக்கே தெரியாம அவளுக்குன்னு சில நேரத்தை ஒதுக்கி இருப்போம். கொஞ்சநேரம் கழிச்சு அதுக்கு நன்றி சொல்லும் விதமா அவங்க கிட்ட இருந்து வர்ற அந்த ‘ஐ லவ் யூ’வுக்கும், இதமான அணைப்புக்கும் இருக்கற சக்தி அதிகம்.  

ஓடி ஓடி லைஃப்ல ஜெயிக்கிறது எல்லோருக்கும் சந்தோஷம்தான். ஆனா, அவளுக்காக நம் கடைக் கண் பார்வையை அப்பப்ப வீசுவது தான் அவளுக்கான அதிக பட்ச சந்தோஷம். அம்பானியா இருந்தாலும், டோனியா இருந்தாலும் எல்லாருக்கும் ஒரே விதிதான். அந்த விதிதான் காதல்.

குடும்பம் என்பது முதல்ல மனைவிக்கான அன்பு, புரிதல். இதுக்கான இடத்தை கொடுத்துட்டு, அப்புறம்தான் குழந்தை என்பதில் தெளிவா இருந்தேன்.
இப்ப எங்க குடும்பத்துல ஆதித்யான்னு ஒரு பொக்கிஷம். காதல்ல ஜெயிச்சிட்டோம் என்பது கல்யாணத்துல முடியறதில்ல. கல்யாணத்துக்குப் பிறகு அதே காதலோட வாழ்ற வாழ்க்கையில இருக்கு. இதை உலகத்துக்கு காமிக்கணும்னு அவசியமில்ல. எங்க ஆதித்யாவுக்கு மட்டும் காண்பிச்சா போதும்!

நா.கதிர்வேலன்