அதிரடி சந்தானம்சந்தானத்துக்கு இது கதாநாயகன் அவதாரம். ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் ஹீரோவாக அடுத்த கட்டத்தில் அடி எடுத்து வைத்திருக்கிறார் மனிதர். ‘செல்லக்குட்டி... பட்டுக்குட்டி...’ என பிரமாண்ட செட்டில் ஹீரோயினை இறுக்கி அணைக்க முயல்பவரை, அலக்காக தூக்கி இடைவெளி ஏற்படுத்து கிறார்கள் டா ன்ஸர்கள். டீ பிரேக்கில் வந்தவருடன் வறுக்கத் தொடங்கினோம்...
‘‘அப்புறம்...ஹீரோவாகிட்டீங்க. ..டூயட் அனுபவமெல்லாம் எப்படி?’’‘‘ஹீரோவாகிட்டேன்னுதான் பேரு. ஆனா, ஹீரோயினுக்கு கிஸ் கொடுக்க முடியல. நீங்களே பார்த்தீங்களே... ஹீரோயினை இறுக்க அணைச்சு உம்மா கொடுக்குற நேரம் பார்த்து இந்த டான்ஸர்கள் நெருங்க விடாம இழுத்துட்டுப் போனதை! பாட்டோட சிச்சுவேஷன் அப்படியாம். மாஸ்டருக்கு என் மேல என்ன கடுப்போ... மாஸ்டர் பிரெய்னோட இப்படி ஒரு ஸ்டெப்பை பிளான் பண்ணிருக்கார்!
ஆனா, ஹீரோவா நடிக்கறது அத்தனை சாதாரண விஷயமில்லைன்னு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கிட்டேன். காமெடியனா நடிக்கும்போது பன்ச் அடிக்கிறதுக்கும் பாடி லாங்வேஜுக்கும் மட்டும்தான் யோசிப்பேன். அது எனக்கு ஈஸி. ஆனா டான்ஸ், சண்டை, சென்டிமென்ட்னு ஒரு ஹீரோவா மக்கள்கிட்ட கை தட்டல் வாங்கறது எவ்வளவு கஷ்டம்னு இப்பதான் புரியுது. அந்த வகையில் ஹீரோவா எனக்கு இந்தப் படம் பெரிய சவால்தான்.’’
‘‘எப்படி உங்களை தயார் பண்ணிக்கிட்டீங்க?’’‘‘எந்த வேலையை செய்தாலும் அதில் நூறு சதவீதம் உழைப்பைக் கொடுக்கணும்னு நினைக்கிறவன் நான். சினிமான்னு இல்ல, ரோட்டை சுத்தம் செய்யுற வேலையா இருந்தாலும் அதில் நம்பர் ஒண்ணா இருக்கணும்னு நினைப்பேன். காமெடியனா என்னோட பங்களிப்பை சரியா செய்திருக்கேன்.
ஹீரோவா நடிக்கறதா முடிவானதுமே, டான்ஸ், சண்டைன்னு என்னென்ன தெரிஞ்சிக்கணுமோ அதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்டேன். ‘சந்தானம் ஹீரோவாமே... எப்படி பண்ணியிருப்பான்’ என்ற எதிர்பார்ப்போட தியேட்டருக்கு வர்றவங்க ஏமாந்துடாம, கொடுத்த காசுக்கு திருப்தியை திருப்பி எடுத்துட்டுப் போகணும். அதை மனசில் வைத்தே இந்தப் படம் பண்ணி
யிருக்கேன். எல்லோருடைய உழைப்பாலும் நல்லாவே வந்திருக்கு. படத்தில் ஆக்ஷன் கூட பண்ணியிருக்கேன். ஆனா, ஒரு குத்துல பெரிய கும்பலையே குப்புற போய் விழ வைக்கிறது மாதிரி யெல்லாம் இருக்காது. துரத்தலும் எஸ்கேப்பும் கலந்து, குழந்தைகளும் ரசிக்கும்படி இருக்கும்.’’‘‘ஹீரோயினை நீங்கதான் செலக்ட் பண்ணீங்களாமே?’’‘‘ம்... ஹீரோவாகிட்டதால இனி ஆரம்பிச்சுடுவீங்களே! நிறைய ஹீரோயின்களோட நடிச்சிருக்கேன்.
நான் கால்ஷீட் கேட்டா மாட்டேன்னும் சொல்ல மாட்டாங்க. ஆனா அண்ணன், தங்கை மாதிரி பழகியிருக்கறதால நடிக்கும்போது லவ் ஃபீல் வராது. ஜனங்களும் ஏற்கனவே பார்த்த முகமா ஃபீல் பண்ணுவங்க. அதனால புதுசா போயிடலாம்னு முடிவு பண்ணி புதுமுகத்தைப் பிடிச்சோம். பார்த்தா பிடிக்கிற மாதிரியான பொண்ணா இருக்கணும்னு சொன்னதைத் தவிர எந்தத் தலையீடும் பண்ணல. இயக்குனர் ஸ்ரீநாத்தான் தீபிகா படுகோனே மாதிரி கண் உள்ள பொண்ணு, த்ரிஷா மாதிரி மூக்கு உள்ள பொண்ணுன்னு சாம்பிள் காட்டினார்.
‘இப்படி தனித்தனியால்லாம் கொண்டு வந்து கோர்க்க முடியுமா? மொத்த முகமும் லட்சணமா முழுசா ஒரு பொண்ணக் காட்டுங்கப்பா’ன்னு தேடி வீசின வலையில் விழுந்தவர்தான் ஆஷ்னா சாவேரி. பிரமாதமா நடிக்கிறாங்க. ரிலீசுக்குப் பிறகு எங்க காம்பினேஷன் பேசப்பட்டா, அடுத்து ஹீரோவாக நடிக்கிற படத்திலும் அவங்களே ஹீரோயினா இருக்கலாம். அதுக்காக இப்பவே கிசுகிசுவை யோசிக்காதீங்க!’’‘‘டாப் 10 ஹீரோ லிஸ்ட்டில் வந்துடுவீங்களா?’’
‘‘ஏன் சார் நம்பக் கூடாது? பாலிடெக்னிக் படிக்கும்போது, மற்ற டிபார்ட்மென்ட்டுகளை விட என்னோட டிபார்ட்மென்ட் நம்பர் ஒண்ணா இருக்கணும்னு மெனக்கெட்டு அதுக்கான வேலையைச் செய்வேன். அதுக்கான பலன் கிடைக்கும். காமெடியனா களத்தில் இறங்கினப்போ அதில் நம்பிக்கையோட இறங்கினேன். என் நம்பிக்கைக்கு ரெண்டு மடங்கு வெற்றி கிடைத்தது. முடியாதுன்னா முயற்சி பண்ணக்கூடாது. முயற்சி பண்ணிட்டா முடியாதுன்னு ஒதுங்கிடக் கூடாது. இப்போ ஹீரோவாகியிருக்கேன். எனக்கு என்ன ரேங்க் கிடைக்கும்னு தெரியல. ஆனா, ஒரு நல்ல இடத்தில் இருப்பேன்னு நம்புறேன்!’’
‘‘எந்த ஹீரோவா இருந்தாலும் கலாய்க்கிறீங்களே... யாராவது வருத்தப்பட்டது உண்டா?’’ ‘‘காமெடிக்காக கலாய்ப்பேனே தவிர, மனசுக்குள்ள ஒண்ணும் வச்சுக்க மாட்டேன். ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் கூட ‘உங்கிட்ட போய் பர்ஃபாமென்ஸை எதிர்பார்த்தேனே?’ன்னு உதயநிதியை கலாய்ப்பேன். இது அவர்கிட்ட அனுமதி வாங்கிட்டு பேசினது தான். நடிக்கும்போதோ, டப்பிங் பேசும்போதோ எனக்கு பன்ச் தோணினா, சம்பந்தப்பட்ட ஹீரோகிட்ட ‘இப்படி சொல்லிக்கலாமா’ன்னு கேட்பேன்.
அவங்க ஓகே சொன்னா மட்டும்தான் பேசுவேன். எல்லாருமே எல்லார்கிட்டயும் நல்ல பேர் எடுத்துட முடியாது. குறை சொல்றவங்க சொல்லிக்கிட்டேதான் இருப்பாங்க. காந்தியை நல்லவன்னு சொல்லி நாமெல்லாம் கையெடுத்துக் கும்பிட்டாலும் ஒருத்தன் துப்பாக்கியால சுட்டான்ல. அது மாதிரிதான். என்னைப் பிடிச்சவங்களுக்காகத்தான் நான் எதுவா இருந்தாலும் செய்யுறேன். பிடிக்காதவங்களுக்கு நான் என்ன செஞ்சாலும் பிடிக்காது.’’
‘‘சோலார் ஸ்டார் ராஜகுமாரனை நடிக்க வச்சிருக்கீங்களே?’’ ‘‘ஆமா... ‘ஏன் சார் அப்படி பேரு வச்சீங்க’ன்னு அவர்கிட்ட கேட்டப்போ, ‘உங்க கண்ணுல படணும்தான் வச்சேன்’னு சொன்னார். ‘சரி, கண்ணுல பட்டுட்டீங்க... களத்தில் குதிங்க’ன்னு இறக்கி விட்டேன். ‘ஆர்யா, சூர்யாவையே கலாய்க்கிற ஆளு சந்தானம்’னு தேவயானி மேடம் எச்சரித்ததையும் தாண்டி, நம்பிக்கையோட வந்து நடிச்சிருக்கார். இந்தப் படத்துக்குப் பிறகு அவரும் காமெடியில் ஒரு ரவுண்ட் வருவார்!’’
‘‘நீங்க காமெடி சூப்பர் ஸ்டாரா?’’ ‘‘எல்லாம் இந்த ஆர்யா பண்ற வேலைங்க. ‘சேட்டை’ படத்தில் நடிச்சப்போ, ‘மச்சான்... இந்தப் படத்தில் ஒண்ணு பண்ணியிருக்கோம். பாரு’ன்னு சொல்லி படத்தோட டிசைனை அனுப்பினான். அதில், ‘காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம்’னு இருந்தது. நானே அடுத்தவங்களை கலாய்க்கிற ஆளு. இதைப் பார்த்து என்னை யாராவது கலாய்ச்சிடப் போறாங்கன்னு சொல்லி மறுத்தேன். ஆர்யாதான் பிடிவாதமாக போட வச்சிட்டான்.
படம் ரிலீசான இரண்டாவது நாள் தயாரிப்பாளர்கிட்ட சொல்லி பட்டத்தை எடுக்க வச்சிட்டேன். அதுக்குள்ள ஃபேஸ் புக், ட்விட்டர்னு பரவிடுச்சு. ஆனா, எனக்கு அதில் விருப்பம் இல்லை. ஹாலிவுட்டில் அர்னால்டு ‘பவர் ஸ்டார்’ன்னோ, டாம் க்ரூஸ் ‘சோலார் ஸ்டார்’னோ போட்டுக்கறதில்ல. நமக்கு மட்டும் ஏன் அந்த ஆசையோ தெரியல.
மக்கள்தான் நமக்கு பட்டம் தரணுமே தவிர, நாமே போட்டுக்கக் கூடாது. ஹீரோவாகி, சூப்பர் ஸ்டார் போட்டிக்கு வந்திடுவானோன்னு பயந்து, ‘நீ காமெடி சூப்பர் ஸ்டாராவே இரு’ன்னு ஆர்யா சதி பண்ணிட்டான்னு நினைக்கிறேன். இதுவும் காமெடிதாங்க. சீரியஸா தலைப்பு வச்சிடாதீங்க!’’
- அமலன்