குட்டிச்சுவர் சிந்தனைகள்



மூணு நாளா கத்திரி வெயில் ஆரம்பிக்க போகுது, சுத்தியல் வெயில் ஆரம்பிக்க போகுதுன்னு மீடியாக்கள் முக்கு முக்குன்னு முக்குனாங்க. ஆனா, நாலு நாளா மழை பெய்ஞ்சு தமிழ்நாடே, குட்டை பாவாடை போட்ட நயன்தாரா மாதிரி குளுகுளுன்னும்,

லெக்கின்ஸ் போட்ட லட்சுமி ராய் மாதிரி வழவழன்னும் இருக்கு. மனைவியோட மனநிலையக் கூட புரிஞ்சுக்கலாம்; அட மச்சினிச்சி மனநிலைய கூட புரிஞ்சுக்கலாம்; ஆனா, மாமியாரோட மனநிலைய மட்டும் எந்த மாப்பிள்ளையாலும் புரிஞ்சுக்க முடியாது. வானிலை எல்லாம் மாமியாரோட மூடு மாதிரி!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு, விமான நிலையத்தை கார் குண்டு வைத்து தகர்க்க சதி, பாகிஸ்தான் இலங்கை உளவாளிகள் தமிழகத்தில் கைது, ராணிப்பேட்டையில் வெடிகுண்டு பறிமுதல்னு தினம் தினம் செய்தி வர்றதைப் பார்த்தா, தமிழகம் அமைதிப் பூங்காவா? இல்ல, அணுகுண்டு பூங்காவான்னு சந்தேகம் வருது. போன வாரம் வரை வளர்ச்சில, தமிழ்நாட்டை குஜராத்துடன் கம்பேர் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. இனிமே மாவோயிஸ்டுகள் புழங்கும் ஒடிசா, மேற்கு வங்காளம் மாதிரி மாநிலங்களுடன்தான் கம்பேர் பண்ணணும் போல.

நம்ம மாநிலத்தைப் பொறுத்தவரை பாதுகாப்பு கெடுபிடி என்பது ரொம்ப சிம்பிள். வருஷத்துல ஒரு தடவ வர்ற குடியரசு தினம், சுதந்திர தினம், டிசம்பர் 6க்கு... வேக வேகமா ஆபீசுக்குப் போற நம்மளை நிறுத்தி,  டிபன் பாக்ஸைத் திறந்து, என்ன டிபன் கொண்டு போறோம்னு பார்க்கிறதுதான் சோதனை. எல்லா நாட்டுலயும் குண்டு வெடிக்கக் கூடாதுன்னு சோதனை செய்வாங்க; நம்ம நாட்டுலதான் வெடிச்சதுக்கு பிறகு சோதனை செய்வாங்க.

மக்களுக்கு பாதுகாப்பும் நம்பிக்கையும் தருவதை விட்டுட்டு, மக்கள் மீது நம்பிக்கை இல்லாம அவங்க பாதுகாப்பை சோதனைக்கு உட்படுத்துவதுதான் ஒருவேளை பாதுகாப்பு சோதனையோ? ஓட்டு எவ்வளவு வரும், எத்தனை தொகுதி ஜெயிக்கும்னு உளவுத்துறைய பார்க்க சொல்லிக்கிட்டு இருந்தா, உளவுத்துறைல ஓட்டை விழாம என்ன செய்யும்?

பிச்சைக்காரர் மைண்ட் வாய்ஸும், வெளியே சொல்லும் சவுண்ட் வாய்ஸும்...

100 ரூபா தட்டுல விழும்போது:

(சவுண்ட் வாய்ஸ்) அய்யா, தர்மராசா... நீங்க நல்லா இருக்கணும்யா. உங்க குடும்பம் நல்லா வாழணும்யா, நீங்க நூறு வருஷம் சந்தோஷமா இருக்கணும்யா!
(மைண்ட் வாய்ஸ்) நூறு ரூபா போடுறானே, லூசா இருப்பானோ? சாவித்திரி வேற மொபைல ரீசார்ஜ் பண்ணிவிடச் சொன்னா, பண்ணி விட்டுருவோம்.

50 ரூபா தட்டுல விழும்போது:
(சவுண்ட் வாய்ஸ்) தர்ம பிரபு... குழந்த குட்டியோட நல்லா இருக்கணும் ஐயா!
(மைண்ட் வாய்ஸ்) நல்ல நோட்டா, செல்லாத நோட்டான்னு தெரியலையே!

10 ரூபா தட்டுல விழும்போது:

(சவுண்ட் வாய்ஸ்) எப்பவுமே நீங்க நல்லா இருக்கணும் ஐயா!
(மைண்ட் வாய்ஸ்) எவனாவது இன்னொரு பத்து ரூபா போட்டா ரெண்டு பரோட்டா வாங்கிட லாம். இந்தா இன்னொருத்தன் வர்றான்...

5 ரூபா தட்டுல விழும்போது:

(சவுண்ட் வாய்ஸ்) நல்லா இருக்கணும் ராசா!
(மைண்ட் வாய்ஸ்) வடை வாங்கலாமா? டீ வாங்கலாமா?

2 ரூபா தட்டுல விழும்போது:

(சவுண்ட் வாய்ஸ்) டீ குடிக்கணும்யா, 5 ரூபா இருந்தா தந்துட்டு போங்கய்யா?
(மைண்ட் வாய்ஸ்) பொண்டாட்டிக்கு முன்னால 2 ரூபா போடுறதுக்கு இம்புட்டு சீனா?

1 ரூபா தட்டுல விழும்போது:
(சவுண்ட் வாய்ஸ்) ம்க்கும்!
(மைண்ட் வாய்ஸ்) போட்டாச்சுன்னா நவுந்து போடா! ஏன்டா பீக் ஹவர்ல தர்மம் பண்றவனையும் மறைச்சிக்கிட்டு குறுக்க நிக்கிற?

இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர் பாய்ஸ்...

மிழ்நாடே பதறிப்போய் கிடக்கு... இதுல, ‘இங்க குண்டு வச்சிருக்கேன், அங்க குண்டு வச்சிருக்கேன்’னு போன் பண்ணி புரளி கிளப்பும் எல்லா படித்த முட்டாள்களுமே!
ஒரே காதல் தற்கொலைகள், கள்ளக்காதல் கொலைகளா போடுறாங்களேன்னு ‘லாரி டமாலு... டிரைவர் பணாலு’ ரக தினசரிகளை படிக்கிறதை நிப்பாட்டி இருந்தேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் போன வாரம்தான் பேப்பர் படிச்சேன்பா. சென்னை ரயில்ல மர்ம நபர் குண்டு வெடிக்க வச்சிருக்கான்னு போட்டிருந்துச்சு.

சரின்னு அடுத்த பக்கம் புரட்டுனா, அதே நாளுல விழுப்புரத்துல விடியக்காலைல வாக்கிங் போன ஒரு அம்மாவோட கழுத்துல இருந்து பத்து பவுன் செயின அத்துக்கிட்டு பைக்ல தப்பிச்சு போயிருக்கான் அதே மர்ம நபர். சரி, ‘ருசிக்கு தின்னா வாய் நிறைய தின்பான், பசிக்கு தின்னதால வயிறு நிறைய தின்னிருக்கான்’னு நினைச்சுக்கிட்டு அடுத்த பக்கம் திருப்புனா, பகல்ல பட்டுக்கோட்டைல தூங்கிக்கிட்டு இருந்த பாட்டிகிட்ட நெக்லஸ் செட்ல இருந்து பல் செட் வரை களவாடிக்கிட்டுப் போயிருக்கான் அதே மர்ம நபர்.

அன்னைக்கு சாயந்திரமே சங்கரன்கோவில் பஸ் ஸ்டாண்ட்ல நின்ன பைக்க அதே மர்ம நபர் திருடிட்டதா அதுக்கு அடுத்த பக்கத்துல போட்டிருக்காங்க. அன்னைக்கு நைட்டே குடியாத்தத்துல ஓட்டப் பிரிச்சி பீரோல இருந்த 30 பவுன் நகையைத் திருடி கை வரிசையை காமிச்சிருக்கான் அந்த மர்ம நபர். யாருய்யா அந்த மர்ம நபர்? எப்படிய்யா அவனால மட்டும் ஒரே நாளுல இத்தனை இடத்துல இவ்வளவு செய்ய முடியுது? வாழ்க்கைல ஒரு தடவையாவது அந்த மர்ம நபர பார்த்தே ஆகணும்யா.

ஆல்தோட்ட பூபதி