‘தி அமேசிங் ஸ்பைடர்மேன் 2’.



நகரத்தை நோக்கி நகர்ந்து வரும் ஆபத்துகளை ஸ்பைடர்மேன் எதிர்கொண்டு, தன் வலையால் மக்களின் கவலை போக்குவதே ‘தி அமேசிங் ஸ்பைடர்மேன் 2’. சிட்டி பவர் சப்ளைகளை முழுக்க தானே உறிஞ்சி, வாஷிங்டனை தமிழ்நாடு ஆக்கப் பார்க்கும் மின்சார மனிதன் ஒரு பக்கம், தன் ரத்தத்தையே சாம்பிள் எடுக்கத் துடிக்கும் உயிர்த்தோழன் ஒரு பக்கம்... இதற்கிடையே போராடி ஸ்பைடர் மேன் ஜெயித்தானா? காதலியோடு க்ளைமேக்ஸ் கிஸ் அடித்தானா என்பதே மீதிக் கதை.

வெளி உலகுக்கு பீட்டராகவும், வேளை வரும்போது ஸ்பைடர் மேனாகவும் ஆன்ட்ரூ கார்ஃபீல்டு தந்திருப்பது அட்டகாச நடிப்பு. ஆக்ஷன் காட்சிகளில் மனிதர் அந்தர்பல்டி அடிக்கிறார். ஆனால், காதல் காட்சிகளில் அவர் காட்டும் கெமிஸ்ட்ரிக்கு நம் ஊர் பப்ளிக் எக்ஸாமில் பத்து மார்க் தேறாது. அரை டிரவுசர் பையன் போல் இருந்தாலும் ஹாலிவுட் ஹீரோவல்லவா? நல்லா ஒட்டி உரசி எங்க ஆவல் தீருங்க பாஸ்.

ஹீரோயினாக கும்மென்று வந்து போகும் எம்மா ஸ்டோன், ஜிலீர் ஜிகிடி! காதல் காட்சிகளில் அவரின் சிணுங்கலும் ‘ஓகே பாய்’ சொல்லிப் பிரியும் ஊடலும் பரவசம். ஆனால், இப்படி ஒரு கவர்ச்சிக் கிளி கிடைத்தும் சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறியிருக்கிறார் இயக்குனர் மார்க் வெப்.

எம்மா என்ற பெயருக்கு ஏற்ப ‘எம்மா எம்மம்மா’ என ஒரு குத்துப் பாட்டாவது இருந்திருந்தால் தேவலை. அப்புறம் ஹேரிக்கு செகரட்டரியாக வரும் ஃபெலிசிட்டி ஜோன்ஸ்... ரெண்டே சீனில் வந்தாலும் கண்களால் கவ்விப் போகிறது பொண்ணு. அப்படி ஒரு ஃபிகருக்கு, கூட ரெண்டு காட்சி வைத்தால் குறைந்தா போவீர்கள்?

மின்சார மனிதனாக ஜிம்மி ஃபாக்ஸ் கலக்கல் தேர்வு. அவரை ஸ்பைடர் மேன் தண்ணீர் பாய்ச்சி வீழ்த்திய பின், அவர் போலீஸ் கஸ்டடியில்தானே இருக்க வேண்டும்? ஆஸ்கார்ப் நிறுவனத்துக்கு எப்படிப் போகிறார்?

இது மாதிரி லாஜிக் ஓட்டைகளை கவனிப்பதில்லையா மிஸ்டர் மார்க்? க்ளைமேக்ஸில் எம்மாவின் மரணம் தேவைதானா? ஆனால், இதன் மூலம் அடுத்த பார்ட்டில் புது காதலியைப் பார்க்கலாம் என்பது ஆறுதல்... நமக்கும் ஸ்பைடர் மேனுக்கும்! அலெக்ஸ் கர்ட்ஸ்மேன் குழுவின் திரைக்கதை படபட பட்டாசாய் படத்தை நகர்த்துகிறது. டேனியல் மிண்டலின் கேமரா, படத்துக்கு பெரிய பலம். ஹான்ஸ் ஜிம்மரின் இசை, ஓகே ரகம்.

இன்னும் கொஞ்சம் ஜனரஞ்சகம் ஏற்றி ஜானரை மாற்றியிருந்தால் குக்கிராமங்களிலும் கும்மியடித்திருப்பான் ஸ்பைடர்மேன்! (‘என்ன இது புதுசா... பேட் ஹேபிட்? இங்கிலீஷ் படத்துக்கெல்லாம் விமர்சனம்’னு பார்க்கறீங்களா? என்னங்க பண்றது... நாங்களும் தமிழ்ப்படம் பார்க்கலாம்னுதான் தியேட்டருக்குப் போனோம். அதெல்லாம் எந்த ஷோ ஓடுதுன்னே கண்டுபிடிக்க முடியல.

சிட்டி பூரா இந்த ஸ்பைடர் மேனைத்தான் வளைச்சி வளைச்சி ஓட்டுறாங்க. அதுக்காக எழுதின கை சும்மா இருக்குமா? அதான் ஓடுற படத்துக்கே எழுதிட்டோம். வரவர இங்கிலீஷ் படங்கள் இங்க டப் ஆகி டப்பு அள்றதைப் பார்த்தா, வருங்காலத்துல கேமரூனும் ஸ்பீல்பெர்க்கும் கூட பட புரமோஷனுக்கு சத்யம் தியேட்டர்ல வந்து உக்கார்ந்துடுவாங்களோன்னு கவலையா இருக்கு. அவ்வ்வ்!)

- குங்குமம் விமர்சனக் குழு