சாயி



ஷீரடி பாபாவின் புனித சரிதம்

வினோத் கெய்க்வாட்
தமிழில்: பி.ஆர்.ராஜாராம்

நான் உன்னுடன் இருப்பேன். உன் உள்ளே இருப்பேன்; புறத்தே இருப்பேன். நீ எப்படியிருந்தாலும், என்ன செய்தாலும் அவ்வாறு இருப்பேன்

- பாபா மொழி

தன்னுடைய அந்திமக் காலம் நெருங்கிவிட்டதை பாபா உணர்ந்து கொண்டார். ஒரு நீண்ட மற்றும் மிக வளமான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டார். ஆனால், வேலை இன்னும் முடியவில்லை.

மக்கள் குவியல் குவியல்களாக வந்துகொண்டுதான் இருந்தார்கள். எத்தனை விதமான ஜனங்கள், எவ்வளவு இன்னல்கள், தொல்லைகள்! எத்தனை மாதிரியான மனிதர்களுக்கு தரிசனம்... சிலருக்கு தத்தாத்ரேயர் கடவுள், சிலர் பிரபு ராமச்சந்திரனைத் தொழுதார்கள். வேறு சிலர் பண்டரிநாதனை, அக்கல்கோட் கஜானன் மகராஜை, பகவான் விஷ்ணுவை, ஸ்ரீகிருஷ்ணனை, ஸ்ரீசங்கரனை... பக்தர்கள்தான் எத்தனை விதம்!

கிறிஸ்தவர்கள், பார்சி, பட்டாண், இந்து, முஸ்லிம், மார்வாடி, குஜராத்தி... எத்தனை மதங்கள், எத்தனை ஜாதிகள், எத்தனை பிரதேசங்கள், எத்தனை மொழிகள்! பாபாவும் எத்தனை எத்தனை முறைகளில் இந்த மக்களுக்கு உதவி செய்திருக்கிறார்...விஜயாநந்தனுக்கு முக்தி கொடுத்தார். தாதாசாகேப் காபர்டே சிறைக்குச் செல்வதிலிருந்து காப்பாற்றினார். அவருடைய மகனை பிளேக்கிலிருந்து காப்பாற்றினார், அவருடைய மனைவிக்கு மோட்சம் கொடுத்தார், லக்ஷ்மிசந்த்திற்கு சமாதானம் செய்தார், மேகா பிராமணனுக்குக் கடவுள் தரிசனம் கொடுத்தார்... எவ்வளவு பேரைச் சொல்வது? எவ்வளவு சந்தர்ப்பங்கள்... மக்களோ மாறாமல் அப்படியே இருந்தார்கள்.

அப்பொழுது ஏதோ கீழே விழுந்த சத்தம், பாபாவின் சிந்தனையைக் கலைத்தது. ‘‘என்னப்பா ஆயிற்று?’’ - அங்கு பெருக்கிக்கொண்டிருந்த பையனைப் பார்த்து பாபா கேட்டார்.
‘‘பாபா... பெருக்கும்போது செங்கல் கையிலிருந்து நழுவிக் கீழே விழுந்து உடைந்தது... அதுதான் சத்தம்!’’ - பையன் களங்கமில்லாமல் சொன்னான். இதனால் பாபா பெரும் கலவரப்பட்டார் என்பதை அவன் அறியவில்லை. ‘‘நீ அந்தச் செங்கலை ஏன் எடுத்தாய்?’’ பாபா கோபத்தோடு கேட்டார்.

‘‘பாபா... பெருக்கும்போது செங்கல்லுக்குக் கீழே இருக்கும் தூசியையும் சுத்தம் செய்வதற்காகக் கையில் எடுத்தேன். அது தவறி...’’ பாபாவிற்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தானே அடங்கினார். அந்தப் பையனைப் போகச் சொல்லிவிட்டு, உடைந்த செங்கல்லை எடுத்து மார்பில் வைத்துக்கொண்டார். ‘‘இந்த செங்கல்லை என் குரு எனக்குக் கொடுத்தார். அது என் உயிர். செங்கல் உடையவில்லை, என்னுடைய கர்மம்தான் உடைந்தது. எதைக் குறித்து நான் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேனோ, எது எனக்கு உயிராகவும் உற்ற துணையாகவும் இருந்ததோ, அதுவே உடைந்து விட்டது. எனவே அது இல்லாமல் நான் இருக்கமாட்டேன். செங்கல், என் வாழ்க்கையுடன் ஒன்றிப்போனது. இன்று, அது என்னை விட்டுப் போய் விட்டது...’’

பாபாவின் புலம்பல் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது. ஏதோ துக்ககரமான சம்பவம் நடக்கப்போவதின் அறிகுறி இது என்று எல்லோரும் மனக்கலக்கமடைந்தார்கள்.
ஷீரடியிலிருந்த ராமச்சந்திர தாதா கோதே பாட்டீல் கடும் நோய் வாய்ப்பட்டிருந்தான். இன்று தான் இறந்துவிடுவோம் போலிருக்கிறது என்று பயந்து நடு இரவில் பாபாவின் படுக்கை அருகில் வந்து சொன்னான்... ‘‘பாபா, என்றைக்கு நான் இறப்பேன் என்பதை உறுதியாகச் சொல்லுங்கள்!’’‘‘ராமச்சந்திரா, கவலைப்படாதே. உனக்கு வந்த கண்டம் விலகியது. எனக்கு வேறொரு பயம். தாத்யாவைப் பற்றியது. 1840ம் ஆண்டு தக்ஷிணாயனே, அஸ்வினி மாதத்தில், சுக்ல பக்ஷத்தில், விஜயதசமியன்று தாத்யாவிற்கு மோக்ஷம் கிடைக்கும். ஆனால், இந்த விஷயத்தை அவனிடம் சொல்ல வேண்டாம். இதை அறிந்தால், மனதில் வருத்தப்பட்டு, பகல் இரவு விசாரப்பட்டு, துரும்பாகி விடுவான்.

மரணம் யாருக்கும் பிடிக்காது!’’ராமச்சந்திரன் மெள்ள மெள்ள உடல் தேறினான். அந்த விஷயத்தை தாத்யாவிடமிருந்து ஒளித்து வைத்தான். ஆனால், பாளா என்னும் தையற்காரனின் காதில் மட்டும் போட்டு வைத்தான்.1840ம் வருடம் அஸ்வினி மாதம் பிறந்தது. அங்கு தாத்யா உடல் நலமில்லாமல் படுக்கையில் விழுந்தான். இங்கு பாபாவுக்கும் குளிர் வாட்டி, ஜுரம் வந்தது. தாத்யாவின் கவலையெல்லாம் பாபாவைப் பற்றித்தான்.

உடம்பில் வலு இல்லாததால், நடக்க முடியவில்லை. அதனால் பாபாவைக் காண வர முடியவில்லை. அதே மாதிரி பாபாவிற்கும் முடியவில்லை. இருவருக்கும் உடல்நிலை மோசமாகிக்கொண்டே வந்தது. ஜனங்களுக்குக் கவலை அதிகரித்தது. ஒரு வழியில் பார்த்தால் பாபாவும் தாத்யாவும் சகோதரர்கள். பாய்ஜாபாயின் மகன்கள்! ‘தாத்யாவை நான் கவனித்துக் கொள்கிறேன்’ என்று முன்பொரு சமயம் பாய்ஜாபாயிற்கு பாபா சபதம் செய்து கொடுத்திருந்தார். ஆனால், இப்பொழுது அவரால் பிழைக்க வைக்க முடியவில்லை.

வஜே என்னும் பக்தனை பாபா கூப்பிட்டு, ‘‘ராமாயணத்தை தினமும் எனக்காக இங்கே படி’’ என்று கூறினார். அதே போல அவன் படித்து வந்தான். பாபா முனகிக்கொண்டே கேட்டார். மக்களுக்கு பாபாவைப் பற்றி கவலை ஏற்பட்டது. நடுநடுவில் அவர் உபதேசம் செய்தார்...‘‘யாருடைய நோக்கம் நல்லதாக இருக்கிறதோ, அவனுக்கு நல்லவையே நடக்கும். ஏழைகளை ரட்சிப்பவர் கடவுள்தான். சும்மா வாதம் செய்யாதீர்கள்.

யாராவது பத்து வார்த்தை மனது புண்படும்படி பேசினால், அதற்கு நீங்கள் ஒரு வார்த்தையில்தான் பதில் சொல்லணும். வீட்டில் பத்து பேர் இருந்தால், ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு வரும், அதற்காகச் சண்டையிடாதீர்கள். பணம் சொல்கிறது, ‘என்னை நல்வழியில் உபயோகித்தால், நான் உன் வேலைக்கு உதவுவேன்’ என்று. போகியின் மனதைவிட யோகியின் மனது சிறந்தது. ஜனங்களுக்கு ஊர் இருக்கிறது... எனக்குக் காடு... நாம் யாருக்கும் அடிமை இல்லை; கடவுளுக்குத்தான் அடிமை. கயிற்றை சத்குருவின் கையில் கொடுத்துவிட்டால், கவலைப்படத் தேவையில்லை. அல்லா எல்லோருக்கும் நன்மை செய்வார். நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் வாழுங்கள். எந்த பேதமும் செய்யாதீர்கள். எல்லோருடைய எஜமானனும்
ஒருவனே!’’

ஜனங்கள் பாபா சொல்வதைக் கேட்டார்கள். மனதில் சேமித்து வைத்தார்கள். இதயத்தில் பதித்து வைத்தார்கள். கண்களில் பயம் தெரிந்தது. பாபாவின் நோய் அதிகரித்தது. அவருடைய எல்லா பக்தர்களும் அவரைப் பார்க்கக் கூடியிருந்தார்கள். பாபா தாழ்ந்த குரலில் சொன்னார், ‘‘என்னுடைய இந்த சரீரத்தை பிறகு மாளிகையில் வையுங்கள். நான் போனால்கூட வருத்தப்படாதீர்கள். என்னுடைய எலும்புகள் சமாதியிலிருந்து பேசும். ஜனங்கள் எறும்பு போல வந்தபடி இருப்பார்கள். என்னுடைய குழந்தைகளை, நான் குருவிகள் போல காலில் கயிறு கட்டிக் கொண்டுவருவேன்...’’

இச்சமயத்தில் தாஸ்கணு பண்டரி புரத்தில் இருந்தார். இரவு பாபா அவருடைய கனவில் வந்து, ‘‘கணு, ஷீரடியில் மசூதி விழுந்திருக்கிறது. ஷீரடியிலுள்ள கடைக்காரர்கள் என்னைக் கைவிட்டுவிட்டார்கள். இப்பொழுது நான் இதை விட்டுப் போகிறேன். நிதானமாக யோசித்துவிட்டுத்தான் உன்னிடம் வருகிறேன். மலர்களால் என்னை நன்றாக மூடிவிடு. என் சிறிய ஆசையை நிறைவேற்றிவிடு. கிளம்பு... உடனே ஷீரடிக்குக் கிளம்பு!’’

பிறகு பாபா அந்தர்தியானமாகிவிட்டார். தாஸ்கணு திடுக்கிட்டு எழுந்தார். வியர்வையால் அவர் உடம்பு முழுவதும் நனைந்திருந்தது!அக்டோபர் பதினைந்தாம் தேதி. விஜயதசமி... மதிய ஆரத்தி முடிந்தவுடன் பாபுசாகேப் புட்டி, காகாசாகேப், மகல்சாபதி மற்றும் ஏனையோரைப் போகச் சொன்னார் பாபா. எல்லோரையும் வீட்டிற்குப் போய்ச் சாப்பிடச் சொன்னார். ஒவ்வொருவருடைய மனதிலும் வெவ்வேறு விதமான கவலைகள். ராமச்சந்திர கோதே பாடிலும் பாளா ஷிம்பியும் மனதில் எண்ணிப் பார்த்துக்கொண்டார்கள். அதாவது, தாத்யாவுக்கு இன்றுதான் இறுதி நாள் என்று பாபா சொல்லி
யிருந்தார். லக்ஷ்மிபாய், பயாஜி கோதே பாடில், நாநாசாகேப் நிமோன்கர் போன்றவர்கள் அங்கு குழுமி இருந்தார்கள்.

மாதவராவ் தேஷ்பாண்டே எனும் பாபாவின் செல்லமான ஷாமா, வாசற்படியில் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு அழுதுகொண்டிருந்தான். லக்ஷ்மிபாய்க்குத் தன் பையிலிருந்து ஒன்பது ரூபாய் எடுத்துக் கொடுத்தார் பாபா. அவள் அதை வாங்கிக்கொண்டு அழலானாள்.‘‘என்னுடைய தாத்யா குணமடைவான். அவன் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லுடா ராமச்சந்திரா...’’ என பாபா கூறியதும், ராமச்சந்திரன் திடுக்கிட்டு எழுந்து நின்றான்.‘‘ஷாமா...’’

ஷாமா கண்ணைத் துடைத்துக்கொண்டு, அருகில் வந்தான். ‘‘என்ன பாபா...’’‘‘அடேய், என்னுடைய தலையை பயாஜியின் மடியில் கிடத்துங்களப்பா...’’
பயாஜி அவசரத்துடன் கீழே உட்கார்ந்தான். பிறகு பாபாவின் தலையை அவன் மடியில் இருத்திக் கொண்டான். அவனுடைய கண்ணீர்த் துளி ஒன்று பாபாவின் நெற்றியில் விழுந்தது. பாபா ஒருகணம் வேதனை தாங்காமல் கண்ணை மூடிக்கொண்டார். பிறகு சொன்னார்... ‘‘ஷாமா, நான் மகல்சாபதிக்கு ஒன்றுமே கொடுக்கவில்லையப்பா! ஆனால், அவர் எதை வாங்கினாரோ... அது அற்புதமானது!’’சிறிது நேரம் அமைதி.

பிறகு பாபாவின் வாயிலிருந்து கடைசிப் பேச்சு வெளியில் வந்தது. ‘‘அடேய், நாம் எல்லோரும் பாபுசாகேப் புட்டியின் மாளிகையில் ஒன்றாக இருந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்கணும் என்று முடிவு எடுத்தோம் இல்லையா ஷாமா? அதை நிறைவேற்றப் பார்? எனக்கு இங்கே இருக்கப் பிடிக்கவில்லை... என்னை அந்தக் கட்டிடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். அப்பொழுதுதான் எனக்கு சரிப்படும். நான் அங்கு அமைதியாக இருப்பேன்...’’ என்றவாறே பாபா உயிர் துறந்தார்.

பாகுஜி இதைப் பார்த்து, கீழே உட்கார்ந்திருந்த நாநாசாகேப் நிமோண்கருக்குச் சொன்னார். அவர் சட்டென்று எழுந்து தண்ணீர் கொண்டுவந்து பாபாவின் வாயில் ஊற்றினார். தண்ணீர் வெளியே வந்துவிட்டது. ‘‘என் கடவுளே...’’ என்று பெரிதாகக் கத்தி அலறினார்.

மகல்சாபதி போன்றவர்கள் தாவி வந்தார்கள். ‘‘பாபா...’’ மகல்சாபதி கத்தினார். ‘‘என்ன இப்படிச் செய்துவிட்டீர்கள்? கடைசித் தருணத்தில் என்னை தூரத் தள்ளிவிட்டீர்களே... ஆண்டவனே! ஆயுள் உள்ளவரை என்னை அருகில் வைத்துக்கொண்டீர்களே. தூக்கத்தில்கூட இருவரும் ஒன்றாக இருந்தோம், கடைசியில் ஏமாற்றிவிட்டீர்களே. இது எப்படி நடந்தது கடவுளே...’’
அவருடைய கூக்குரலைக் கேட்டு எல்லோரும் கண்ணீர் விட்டார்கள்.

எங்கிருந்தோ நாநாவல்லி வந்தான். அந்தச் சமயத்தில் அவன் ‘‘பூ... பூ...’’ என்று பெரிதாக சத்த மிட்டு வரவில்லை. குதித்து வரவும் இல்லை. அவனைச் சுற்றிலும் பசங்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் ஆழ்ந்த மௌனத்தில்! ‘‘என்னுடைய ராமன் போய்விட்டான்... பசங்களா...’’ - நாநாவல்லி ஓவென்று கத்தினான். பாபாவின் உடல் மீது புரண்டு, ‘‘இனி இந்தப் பைத்தியத்தை யார் அனுமன் என்று அருகில் வைத்து அன்பு காட்டுவார்கள்? பாபா... ‘உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்திருங்கள்’ என்று இனி யாரைச் சொல்லுவேன்?’’

அவனுடைய பைத்தியக்காரத்தனமான புலம்பலைக் கேட்டு, கூடியிருந்தவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் அணை வெடித்தது.விம்மி விம்மி அழுத ஷாமா, ரம்ஜான் என்பவனை கட்டியணைத்து, ‘‘ரம்ஜான்... நாமெல்லோரும் அனாதைகளாகி விட்டோம். இவ்வுலகின் சூரியன் மூழ்கிவிட்டான்...’’ என்றான்.ராம்ஜானும் ஷாமாவைத் தட்டிக் கொடுத்துக்கொண்டே தேம்பித் தேம்பி அழுதான்!

(நிறைந்தது)