நியூஸ் வே



*‘காதல் கசக்குதய்யா...’ பிந்துமாத விக்கு பிடித்த பாடல் இது. கல்லூரியில் படிக்கும்போது உடன் படித்த மாணவருடன் காதலாகி கசிந்துருகிய பிந்துவின் காதல் கடைசியில் தோல்வியில் முடிந்ததாம். ‘நடிகையாகி சாதித்துக் காட்டுகிறேன் பார்’ என்று காதலனுக்கு விட்ட சவாலில் ஜெயித்து காட்டிய திருப்தி மட்டுமே இப்போது மிச்சம்.

*ரகுவரனின் மகன் வளர்ந்துவிட்டார். அப்பா நடித்த படங் களை மட்டும் ஆர்வத்தோடு பார்த்து வருகிறார். சினிமாவிற்கு வர பெரிதும் வாய்ப் பிருக்கிறது. ரகுவரன் ‘புரியாத புதிர்’ படத்தை மட்டும் மகன் பார்ப்பதை எப்போதும் விரும்பமாட்டார்.

*புத்தகங்களை படித்துவிட்டு லைப்ரரி வைத்திருக்கிறார் கமல். யார் எந்தப் புத்தகத்தை தனக்கு அன்பளித்தது என்பது வரைக்கும் ஞாபகம் வைத்திருப்பார். வெளியில் இருந்து கூட இரண்டாவது அலமாரி, மூன்றாவது அடுக்கு, நாலாவது புத்தகம் என்பது வரைக்கும் எடுத்துச் சொல்லி புத்தகங்களை எடுத்துக் கொண்டு வரச் சொல் வார்.

*வடிவேலு படம் எதிர்பார்த்தபடி பிரமாதமான வெற்றி பெறவில்லைதான். ஆனால், வடிவேலு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப அது உதவியிருக்கிறது. ; ரஜினி படத்திற்குப் பிறகு தொடர்ந்து நடிக்க ஆரம்பித்து விடுவார் என எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். அடுத்தும் யுவராஜ் டைரக்ஷனில் நடிக்கிறார் வடிவேலு. 18ம் நூற்றாண்டு + நிகழ்காலம் இணைந்த கதை இது.

*சமீபகாலமாக லட்சுமிராயை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது கன்னட மோகம். கன்னடக் கதைகளைக் கேட்க அதிக ஆர்வம் காட்டுகிறார். இப்போது ரவிச்சந்திரன் ஜோடியாக ‘ஷ்ருங்கார ராமா’வில் நடித்து வருகிறார் அவர்.

*‘கத்தி’ முடித்த பிறகு சூர்யாவும் ஏ.ஆர்.முருகதாசும் இணைந்து படம் செய்வதாக முடிவாகிவிட்டது. அவருக்கு வெற்றி தருவதை கௌரவப் பிரச்னையாக முருகதாஸ் நினைப்பதால் அருமையாக திரைக்கதை அமைத்து வருகிறார். அடுத்த வருடம் ஜனவரியில், வெங்கட் பிரபுவின் படத்தை சூர்யா முடித்த பிறகு இதை ஆரம்பிக்கிறார்.

*நாட்டின் முதல் வாக்காளருக்கு இப்போது வயது 97. இமாசலப் பிரதேச மாநிலம் கல்பா கிராமத்தில் வசிக்கும் சியாம்சரண் நேகி, முதல் பொதுத் தேர்தலிலிருந்து இப்போது வரை தொடர்ச்சியாக வாக்களிக்கிறார். முதல் நாடாளுமன்றத் தேர்தல் 1951ல் தொடங்கி கிட்டத்தட்ட 9 மாதங்கள் நடந்தது. அப்போது இந்தியாவிலேயே முதலாவதாக வாக்களித்தவர் இவர்தான். அப்போது நேகிக்கு 34 வயது. இந்தத் தேர்தலில் தன் மனைவி ஹிராமணியோடு வந்து வாக்களித்த நேகி, ‘‘முதுமையை உணர்கிறேன். அநேகமாக இதுதான் நான் வாக்களிக்கும் கடைசித் தேர்தலாக இருக்கும்’’ என்றிருக்கிறார்.

*இயக்குனர் பிரபு சாலமன் குடும்பத்தோடு ஜெருசலேமுக்கு புனிதப் பயணம் போயிருக்கிறார். திரும்பி வந்ததும் ‘கயல்’ ரிலீசுக்கு திட்டமிட்டி ருக்கிறார். அதனைத் தொடர்ந்து இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் யோசனையில் இருக்கிறாராம்.

*அமெரிக்க அதிபராக இருந்த கிளின்டனுடன் தவறான உறவில் இருந்ததால் சர்ச்சைக்கு ஆளான மோனிகா லெவின்ஸ்கி முதல் முறையாக இந்த வாரம் மனம் திறந்து பேசியிருக்கிறார். இப்போது 40 வயதாகும் மோனிகா, ‘‘கிளின்டனின் அதிகார வாழ்வைப் பாதுகாக்க நான் பலிகடா ஆக்கப்பட்டேன்’’ என்கிறார். ‘‘கிளின்டன் வரம்பு மீறினார். அந்த நேரத்தில் நானும் இணங்கினேன். ஆனால் அதன்பின் நரக வேதனை அனுபவித்தேன். எங்கும் வேலை கிடைக்கவில்லை. பலமுறை தற்கொலைக்கு முயன்றேன்’’ என்கிற அவர், ‘‘என் கதையின் முடிவை இப்போது மாற்ற ஆசைப்படுகிறேன்’’ என்றிருக்கிறார்.

*பஞ்சாப் அணியின் மேக்ஸ்வெல் அடித்து நொறுக்கிக் கொண்டிருக்க, இன்னமும் ஐ.பி.எல் மைதானங்களில் கெயில் புயல் வீசிய பாடில்லை. முதுகு வலியிலிருந்து முழுசாகத் தேறாததால், டென்ஷனில் பெங்களூர் அணியினர் நகம் கடித்துக் கொண்டிருக்கிறார்கள். கிரிக்கெட்தான் ஆட முடியவில்லையே தவிர, மற்ற ஆட்டங்களுக்குக் குறைச்சல் இல்லை. பெங்களூருவில் ஒரு நிகழ்ச்சியில் பெல்லி டான்ஸ் அழகிகளுடன் அவர் ஆடியதை சினிமாக்காரர்கள் பார்த்தால், அயிட்டம் சாங் ஆட அழைத்துப் போய்விடுவார்கள்.

*‘‘எதுவாக இருந்தாலும் அப்புறம் பார்த்துக்கலாம்...’’ துளசியின் கால்ஷீட் கேட்டு வருபவர்களிடம் அம்மா ராதா சொல்லி வரும் பதில் இதுதான். முதல் படமே மணிரத்னத்தின் அறிமுகமாக அமைந்தாலும், படம் தோல்வி அடைந்ததால் கவனம் காக்கிறார் ராதா. ரவி கே.சந்திரனின் ‘யான்’ படத்தை அதிகம் எதிர் பார்க்கும் ராதா, அந்தப் படம் ரிலீஸ் ஆகும் வரை எந்தப் படத்துக்கும் துளசியின் கால்ஷீட் தர மறுக்கிறார்.

*கோதுமை தேசத்திலிருந்து இறக்குமதியாகி இருக்கிறது இன்னொரு கிளி. பெயர், சோனம் ப்ரீத் பஜ்வா. ஷங்கரின் உதவியாளர் கார்த்திக் ஜி.கிருஷ் இயக்கி வரும் ‘கப்பல்’ படத்தில் அறிமுகமாகும் சோனம், ‘கிளாமருக்கு ரெடி’ என சிக்னல் காட்டுகிறார்.

*சிம்புவை வைத்து பாண்டி ராஜ் இயக்கும் படத்தை சீக்கிரம் முடிக்காததில் நயன்தாராவிற்கு சிறிது வருத்தம் இருந்தது. த்ரிஷா கொடுத்த பிறந்தநாள் பார்ட்டியில் சிம்புவை சந்தித்த பிறகு அதுவும் சரியாகிவிட்டது. மீண்டும் இந்த வாரம் ஆரம்பிக்கும் ஷூட்டிங்கிற்கு இரண்டு பேரும் ரெடி.

*அனிருத் காட்டில் மழை. ‘கத்தி’ பாடல்களில் மூன்று ரெடியாகிவிட்டது. பாடல்களைக் கேட்ட விஜய் மிரண்டு விட்டாராம். பாசத்தை கொட்டியதைப் பார்த்தால், ‘இனிமேல் அவரின் அடுத்தடுத்த படங்களுக்கு அனிருத்தே இசையமைப்பார்’ என்கிறார்கள்.

*தல ஸ்டைலுக்கு மாறியிருக்கிறார் மம்முட்டி. தற்போது அவர் ‘மங்கிலீஷ்’ படத்தில் நடித்துவருகிறார். கடந்த வாரம் ஒரு நாள் படப்பிடிப்பில் திடீரென அடுப்பு பற்ற வைத்து பிரியாணி கிண்ட ஆரம்பித்து விட்டாராம். இரண்டே மணி நேரத்தில் ரெடியான தம் பிரியாணியை சாப்பிட்டு யூனிட்டே பரவசமானதாம்!

*திருமண அறிவிப்புக்குப் பிறகு அமலாபாலின் ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றாக ரத்தாகிக் கொண்டிருக்கிறது. தெலுங்குப் படத்தைத் தொடர்ந்து சமுத்திரகனி இயக்கும் ‘கிட்ணா’ படத்திலிருந்தும் விலக்கப்பட்டுள்ளார் அமலா. நஸ்ரியாவுக்கும் இதே நிலைதான். தமிழில் அவரது கடைசி படம் ‘திருமணம் என்னும் நிக்கா’. நடிப்பது பற்றி திருமணத்துக்குப் பிறகு முடிவெடுக்கலாம் என்று மாமனார் வீட்டில் கட்டுப்பாடு விதித்ததால் மலையாள வாய்ப்புகளையும் உதறிவருகிறார்.

*கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித்திற்குப் பெயர் ‘சத்யதேவ்’. அனேகமாக படத்தின் பெயராகவும் அது அமைந்து விடலாம். இதில் நான்காவது முறையாக அஜித் ஜோடியாகிறார் த்ரிஷா. இரட்டை வேடத்தில் இன்னொரு அஜித்துக்கு அனுஷ்கா ஜோடி. ‘ஜி’, ‘கிரீடம்’, ‘மங்காத்தா’ படங்களைத் தொடர்ந்து தலயுடன் மீண்டும் இணைந்திருக்கிறார் த்ரிஷா.