கண்ணகிக்கு ஒரு வழி சொல்லுங்க!



கண்ணகியை கற்புக்கரசியாகத்தான் நமக்குத் தெரியும்.

கடவுளாக..?


‘நிச்சயம் கண்ணகி எங்கள் கடவுள்தான். குடும்பக் கஷ்டங்கள் நீக்கும் கடவுள்’ என்கிறார்கள் கேரள - தமிழக எல்லையில் சஞ்சரிக்கும் குமுளி பகுதி மக்கள். இங்கே மங்களாதேவி என்றழைக்கப்படும் கண்ணகியின் கோயிலுக்கு வருடம் தோறும் சித்ரா பௌர்ணமி அன்று மட்டுமே பூஜை. சரியான சாலை வசதி இல்லை... வனத்துறையினர் கெடுபிடி அதிகம் என ஆயிரம் சிக்கல் இருக்கட்டுமே... அத்தனையையும் தாண்டி வருடா வருடம் கூட்டமும் பிரமாண்டமும் கூடிக் கொண்டே போகிற இந்த சித்ரா பௌர்ணமி பூஜையே சொல்லி விடுகிறது கண்ணகி யின் செல்வாக்கை!

‘‘இமயமலையில் இருந்து கல் கொண்டு வந்து சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கட்டின கோயில் இது. கேரளாவோட தொல்பொருள் ஆய்வுத் துறையே இது 9ம் நூற்றாண்டைச் சேர்ந்ததுன்னு சொல்லியிருக்கு. நாங்க இந்தக் கோயிலை கண்ணகிக் கோட்டம்னு சொல்லுவோம். இங்கிருக்குற கண்ணகி ரொம்ப சக்தி வாய்ந்த சாமி. பிரிஞ்ச கணவன் - மனைவி ஒண்ணு சேரவும், கணவர் ஆயுள் கூடவும் இங்க வேண்டிக்கிறாங்க பெண்கள். வர்ற மே 14, சித்ரா பௌர்ணமி பூஜைக்காக நாங்க காத்திருக்கோம்’’ என்கிறார்கள் குமுளி பகுதியைச் சேர்ந்த கண்ணகி
பக்தர்கள்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 4380 அடி உயரத்தில் மலை உச்சியில் காலம் தந்த சிதிலங்களோடு நிமிர்ந்து நிற்கிறது கண்ணகி கோட்டம். வெயில் ஒரு புறம் காய்ச்சி எடுத்தாலும், குளிர்ந்த காற்று வீசி வெப்பத்தைத் தணிக்கிறது. அன்று, மதுரையை எரித்து விட்டு வெம்மையோடு வந்து நின்ற கண்ணகியை இந்தக் காற்று தான் குளிர்வித்திருக்க வேண்டும். இந்த இடத்தில்தான் கண்ணகியை கோவலன் புஷ்பக விமானத்தில் வந்து வானுலகத்திற்கு அழைத்துச் சென்றதாகச் சிலப்பதிகாரம் சொல்கிறது. கண்ணகி கோயிலின் அடியிலிருந்து சுரங்கப்பாதை ஒன்று மதுரை நகர் நோக்கிப் போகிறது என்ற செவிவழிச் செய்தி இன்றைக்கும் பக்தர்களிடையே அடிபடுகிறது.

கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளாகவே இந்தக் கோயிலில் கண்ணகி வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருவதாகச் சொல்கிறார்கள். தற்போது, பெரியாறு புலிகள் சரணாலயத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் இந்தக் கோயில் மாட்டிக் கொண்டதே சிக்கல். கேரள எல்லைக்குள் வேறு வருவதால், அம்மாநில அரசின் அனுமதி இல்லாமல் யாரும் கண்ணகிக் கோட்டத்தினுள் நுழைய முடியாது. சித்ரா பௌர்ணமி பூஜை தினத்திலும் அதிகாலை 5.30 முதல் மாலை 5.30 மணி வரைதான் பக்தர்களுக்கு அனுமதி. அதற்கும் கேரள அரசின் வனத்துறை, மத்திய அரசின் வனத்துறை என அனைவரிடமும் அனுமதி பெற வேண்டும்.

மற்ற நாட்களில் கோயிலின் உள்ளே கண்ணகி சிலை கூட இருப்பதில்லை. சித்ரா பௌர்ணமி அன்று, ‘கம்பம் கண்ணகி அறக்கட்டளை’யைச் சேர்ந்தவர்கள், பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட கண்ணகி சிலையை இங்கு கொண்டுவந்து பிரதிஷ்டை செய்துதான் பூஜை நடத்துகிறார்கள். புது மஞ்சள் தாலி, கண்ணாடி வளையல்களை கண்ணகி சிலை முன் வைத்து பூஜை செய்த பிறகு பெண்கள் அணிகிறார்கள். அன்னதானம், அரவணை பாயசம் என அந்த நாளே அமர்க்களப்படுகிறது.

‘‘ஒரு காலத்தில் ஏழு நாள் விமரிசையாக நடந்துகிட்டிருந்த விழா இது. இப்போ கேரள அரசோட கெடுபிடியால ஒரே நாளா சுருங்கிடுச்சு’’ என ஆதங்கத்தோடு ஆரம்பிக்கிறார் தமிழ் ஆதன். கம்பம் கண்ணகி அறக்கட்டளையின் தலைவர் இவர்.‘‘எனக்கு விவரம் தெரிஞ்ச நாளிலிருந்தே இந்த பூஜையில கலந்துக்கிட்டிருக்கேன். எப்பவுமே கண்ணகி கோயிலுக்குப் போறது ரொம்பக் கஷ்டம்தான். இப்ப வரைக்கும் இங்கே போக சரியான ரோடு இல்ல. ஜீப் வழியா போனா 12 கி.மீ. அதுல 6 கி.மீ அடர்ந்த காட்டுப் பாதை.

அந்த வழியா போகவே தனியா கேரளா கவர்மென்ட் பர்மிஷன் வேண்டியிருக்கு. நம்ம தமிழ்நாட்டுப் பகுதியிலயே நடந்து போக ரெண்டு ரூட் இருக்கு. அது வெறும் 9 கி.மீட்டர்தான். ஆனா, வேர்க்க விறுவிறுக்க டிரெக்கிங் பண்ணிப் போகணும். இளந்தாரிப் பசங்களாலதான் அப்படி மலையேறி வர முடியும். பெரும்பாலும் இது பெண்கள் வழிபடுற கோயில்ங்கறதாலதான் பிரச்னையே’’ என்றார் அவர் வருத்தமாக.

தமிழகத்திலேயே பளியங்குடி பகுதியிலிருந்து சாலை அமைத்துத் தந்தால் கேரள அரசிடம் அனுமதி பெற வேண்டியதில்லை என்பது இந்தப் பகுதி மக்களின் நெடுநாள் கோரிக்கை. கண்ணகிக் கோட்டத்தில் இருக்கும் கண்ணகி... அதாவது மங்களாதேவி சந்நிதியுடன் சிவன், கணபதிக்காக தனியே சந்நிதிகளும் உள்ளன. கோயிலின் சுற்றுப்புறச் சுவரில் கருப்பசாமி போன்ற சிறு கடவுளர்களின் சிலைகளும் உண்டு. கோயில் சுவர்களில் இருக்கும் தமிழ்க் கல்வெட்டு ஒன்று, தமிழ்நாட்டுக்கும் இந்தக் கோயிலுக்குமான பந்தத்தை இன்றும் பறைசாற்றுகிறது.

‘‘சமீப காலமா இந்தக் கோயில் ரொம்பவும் சேதமாகிட்டு வருது. வருஷம் முழுக்க யானைகள் நடமாட்டம் இருக்கறதாலதான் சேதமாகுதுன்னு சொல்றாங்க. உண்மை என்னன்னு தெரியல. சரியான சாலை வசதி ஏற்படுத்தி, கோயிலையும் சீரமைச்சுக் கொடுத்தா, கண்ணகிக் கோயிலோட மகிமை இன்னும் பல பேருக்கும் போய்ச் சேரும். ரெண்டு மாநிலமும் அதுக்கு மனசு வைக்கணும்!’’ எனக் கோரிக்கையோடு முடிக்கிறார் தமிழ் ஆதன்.நடக்கப் போகும் சித்ரா பௌர்ணமி விழாவுக்காக சமீபத்தில்தான் தேனி மாவட்ட ஆட்சியரும் கேரளாவின் இடுக்கி மாவட்ட ஆட்சியரும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். பேச்சுவார்த்தை பெரிய அளவில் நடக்கப் போவது எப்போதோ!

- பிஸ்மி பரிணாமன்