எப்போதும் ரஜினியின் புதுப்பட அறிவிப்புதான் தமிழ் சினிமாவின் நம்பிக்கை வரலாறு! ‘லிங்கா’ அந்த வரலாற்றில் இன்னொரு மைல்கல். ‘திரையில் தலைவரின் தரிசனம் பார்த்து மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது’ என காய்ந்து போய் இருக்கும் ரசிகர்களுக்காக இதோ மீண்டும் களமிறங்கிவிட்டார் ரஜினி.
கடந்த 2ம் தேதி மைசூரில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்க, தமிழகத்திலும் கர்நாடகத்திலும் பரபரப்புக்கு பஞ்சமில்லை. நட்பான விட்டுக் கொடுத்தல்களும், நெகிழ்ச்சியான நன்றிக்கடன்களுமாக ‘லிங்கா’ உருவான கதை, ‘லிங்கா’வின் கதையைவிட சுவாரசியமானது.
தான் நன்றிக்கடன் செலுத்த வேண்டிய முதல் நபராக ரஜினி நினைத்தது, கே.எஸ்.ரவிக்குமாரை! ‘ஜக்குபாய்’, ‘ராணா’ என தொடர்ந்து ரஜினி புராஜெக்ட்கள் கைகூடாதபோதும், கதை விவாதங்களிலும், ஏற்பாடுகளிலும் நிறைய நேரம் செலவழித்திருந்தார் ரவிக்குமார்.
இதனால் பிற வாய்ப்புக்களையும் தவிர்த்தார். விக்ரம் படமும், வடிவேலு ரீ-என்ட்ரி படமும் அப்படித் தவிர்த்த படங்களில் இரண்டு. இதனால் ரவிக்குமார் இழந்தது நிறைய. இதை ரஜினியும் உணர்ந்திருந்தார். ரவிக்குமாரின் மகள் திருமணத்திற்கு வந்த ரஜினி, ‘‘சீக்கிரமே நல்ல செய்தி சொல்றேன்’’ என்று ரவிக்குமார் காதில் கிசுகிசுத்து விட்டுப் போயிருந்தார்.
ரவிக்குமாரின் எல்லா காயங்களுக்கும் ‘லிங்கா’ மூலம் மருந்து தடவியிருக்கிறார் ரஜினி. தொடர் தோல்விகளால் நொந்து போயிருக்கும் பிரபல தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷுக்காக இந்தப் படத்தை ரஜினி செய்கிறார். இதில் ரஜினியின் அண்ணன் குடும்பத்தினருக்கும் ஒரு தொகை கிடைக்கும் என ஏற்பாடு. தன் சம்பளத்திற்கு முன், ரஜினி பேசியது ரவிக்குமாரின் சம்பளம்தான். இத்தனை நாள் காத்திருந்தது, ‘ஜக்குபாய்’ மற்றும் ‘ராணா’ நின்று போனதற்கான இழப்பிற்கு என எல்லாம் சேர்த்துத்தான் அவருக்கு சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. இதற்குத் தோதாக ரஜினி தன் சம்பளத்தில் குறைத்துக் கொண்டதும் முதல் தடவையாக நடந்திருக்கிறது.
எந்தத் தாமதமும் இல்லாமல் ‘லிங்கா’வை ஆறு மாதங்களுக்குள் முடிக்கத் தீர்மானித்திருக்கிறார்கள். வழக்கம்போல ரஹ்மானிடம் பாடல் வேண்டி நின்றார்கள். அவர் முன்பு போட்டு வைத்திருந்த நல்ல டியூனைக் கொடுத்து, வைரமுத்து எழுதி, ஒரே ஒரு பாடலை ரெடி செய்தாயிற்று! அதைத்தான் சோனாக்ஷியை வைத்து எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். ‘‘இரண்டு மாதங்களில் இதர பாடல்கள் எல்லாவற்றையும் முடித்துக்கொடுத்து விடுகிறேன்’’ என ரஹ்மான் ப்ராமிஸ் செய்துவிட்டார்.
ரஜினிக்கு இரட்டை வேடம். அனுஷ்கா, சோனாக்ஷி என இரண்டு ஜோடிகள். சோனா வந்துவிட, அனுஷ்கா மட்டும் ராஜமௌலியின் தெலுங்கு படத்தை முடித்த பிறகுதான் வருகிறார். அதனால் கடைசியாக அவர் போர்ஷனை எடுக்கப் போகிறார்கள். ஷூட்டிங்கின்போது ரஜினியின் உடல்நிலையைப் பார்த்துக்கொள்ள இரண்டு டாக்டர்கள் எப்போதும் இருக்கிறார்கள். ரஜினி இந்தப் படத்திற்கு 47 நாட்கள்தான் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். உடல்நிலையை கருத்தில் கொண்டே இந்த முடிவு.
முதல்நாள் ஷூட்டிங் வந்த சோனாக்ஷி, நெடுஞ்சாண்கிடையாக ரஜினி காலில் விழுந்து வணங்கியிருக்கிறார். யூனிட்டே சிலிர்த்து நின்ற காட்சி அது. ஆனால், அவரைத் தொட்டு நடிக்கவே ரஜினி கூச்சப்படுவதுதான் உண்மை. இரண்டு நாட்களில் உற்சாகமாகிவிட்ட சோனாக்ஷி‘‘அங்கிள், கூச்சத்தை விடுங்க’’ என ரஜினியிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாராம்.
சாபி சிரிலின் கைவண்ணத்தில் மைசூர் அருகே பெரிய அணை செட் போடப்பட்டுள்ளது. அத்துமீறியோ அனுமதியின்றியோ யாரும் நுழையாத வண்ணம் பலத்த பாதுகாப்பு வளையத்துடன் அங்கு படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குக்கின் கதையே ‘லிங்கா’வின் அடிநாதமாக இருக்கும் என்கிறார்கள். அணையை உருவாக்கும் பொறியாளராக வரும் ரஜினி, சமூக விரோதிகளின் பிடியிலிருந்து அணையைக் காக்கும் போராட்டத்தில் வெல்வதே திரைக்கதை. ‘சாருலதா’ கன்னடப் படத்தின் இயக்குனர் பொன்குமரன் எழுதிய கதையே இது.
கதை ரெடியானதுமே, ரஜினியின் கெட்டப் பற்றித்தான் பிரதானமாக விவாதிக்கப்பட்டது. ‘சந்திரமுகி’ படத்தில் ஃபிளாஷ்பேக் காட்சியில் வேட்டைய ராஜாவாக வந்து வில்லத்தனம் காட்டுவார் ரஜினி. அவரது இரண்டு மகள்களுமே அந்த கெட்டப் பற்றி சிலாகித்துச் சொல்லியிருக்கிறார்கள். ரஜினிக்கும் அந்த கெட்டப் மீது தீராக் காதல் இருக்கிறது. அந்தக் காதல் ‘லிங்கா’வில் நிறைவேறுகிறது. சற்றே வில்லத்தன சாயல் கொண்ட ஒரு ரஜினி இப்படித்தான் படம் முழுக்க வருகிறார்.
-நமது நிருபர்கள்