எஞ்சினியரிங்கில் எது பெஸ்ட்?



+2வுக்குப் பிறகு...
உடனடி வேலைவாய்ப்பு தரும் சூப்பர் கோர்ஸ்கள்

எஞ்சினியரிங் படிப்பை பற்றி பல்வேறு அவநம்பிக்கைகள் உலா வந்தாலும் அதன் மீதான மோகம் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் குறைந்தபாடில்லை. கொடுக்கத் தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே எஞ்சினியரிங் படிப்புக்கான விண்ணப்பங்கள் ஒரு லட்சத்தைத் தாண்டி விற்றுத் தீர்ந்து விட்டன.

எஞ்சினியரிங்கைப் பொறுத்தவரை, அது ஒரு ‘மினிமம் கியாரண்டி’ படிப்பு என்பதில் சந்தேகமில்லை. பொறியியல் துறையில் வேலைவாய்ப்புகளுக்கும் குறைவில்லை. வேலை கிடைக்கவில்லை என்று ஒரு தரப்பு சொல்லிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், ‘எங்களுக்குத் தகுதி வாய்ந்த பொறியாளர்கள் கிடைக்கவில்லை’ என்று தொழில் நிறுவனங்கள் சொல்கின்றன. அதனால் எப்படி படிக்கிறோம்;

எங்கு படிக்கிறோம் என்பதைப் பொறுத்தே வேலைவாய்ப்பு தீர்மானிக்கப்படுகிறது. தமிழகத்தில் 570 பொறியியல் கல்லூரிகள் உண்டு. இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் உயரக் கூடும். எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால் தமிழ்நாட்டில் 2 லட்சத்து 50 ஆயிரம் பொறியியல் இடங்கள் உண்டு. 89 விதமான படிப்புகளும் இருக்கின்றன. ‘‘ஏராளமான சிறப்பு பிரிவுகள் இருந்தாலும் ‘கோர் கோர்ஸ்’ எனப்படும் அடிப்படை பொறியியல் படிப்புகளே பாதுகாப்பானவை’’ என்கிறார்கள் நிபுணர்கள்.

‘‘அந்தக் காலத்தில் எஞ்சினியரிங் என்றாலே ‘சிவில்’தான். இன்றைய ‘காலேஜ் ஆஃப் எஞ்சினியரிங்’, 220 ஆண்டுகளுக்கு முன்பு ‘சர்வே ஸ்கூல்’ என்ற பெயரில்தான் தொடங்கப்பட்டது. சிவில் வந்த பிறகு மெக்கானிக்கல் அறிமுகமாகியது. அதன்பிறகு எலெக்ட்ரிக்கல். 60களில்தான் எலெக்ட்ரானிக்ஸ் வந்தது. 70களுக்குப் பிறகு கம்ப்யூட்டர் எஞ்சினியரிங். 2002-2003ல் அறி முகமானது பயோ  டெக்னாலஜி.

இவற்றையே ‘கோர் கோர்ஸ்’ என்கிறோம். பிற பிரிவுகள் அனைத்துமே இவற்றிலிருந்து பிரிக்கப்பட்டு தனிப் படிப்பாக ஆக்கப்பட்டவைதான். பி.இ படிப்பைப் பொறுத்தவரை கோர் கோர்ஸ்களே பாதுகாப்பானவை’’ என்கிறார் அண்ணா பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுகள் மற்றும் சேர்க்கைப் பிரிவின் முன்னாள் இயக்குனர் ப.வே.நவநீதகிருஷ்ணன்.

‘‘கிராமப்புற மாணவர்களே பெரும்பாலும் பொறியியல் படிக்க வருகிறார்கள். குடும்பக் கடமைகள், கல்விக்கடன் என அவர்களுக்கு பல பொறுப்புகள். படித்தவுடன் வேலை கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருக்கும். அவர்களுக்கான சாய்ஸ், கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகள்தான். கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் படிப்புகளுக்கு எக்காலமும் வாய்ப்புண்டு. அதைப் பற்றி நிலவும் தவறான கருத்துகளை நம்ப வேண்டாம். பிறநாடுகளில் அத்துறையில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் ஏதும் இந்தியாவை பெரிதாகப் பாதிப்பதில்லை. இன்றும் கல்லூரிகளுக்கு கேம்பஸ் இன்டர்வியூவுக்கு வரும் நிறுவனங்களில் 70% கம்ப்யூட்டர் சார்ந்த நிறுவனங்கள்தான்.

அடுத்து சிவில். இந்தியா போன்ற வளரும் நாட்டுக்கு ஏகப்பட்ட கட்டுமானப் பொறியாளர்கள் தேவை. உலகமெங்கும் வேலைவாய்ப்புகள் பெருகிக் கிடக்கின்றன. ஜியோ இன்ஃபர்மேடிக்ஸ் படிப்பும் மாணவர்களுக்கு உகந்ததுதான். இது சிவில் எஞ்சினியரிங்கின் ஒரு பிரிவு. ஜியாலஜி, கிராபிக்ஸ், நில அளவை, போட்டோகிராமெட்ரி உள்பட ஏராளமான நவீனங்களைக் கற்றுத்தரும் படிப்பு. இந்திய சர்வே, தேசிய தொலை உணர்வு ஏஜென்சி, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறையில் வேலைவாய்ப்புகள் ஏராளம்.

எலெக்ட்ரானிக்ஸ் படிப்பதும் நல்ல முடிவு. தொலைத்தொடர்பு தனியார்மயமான பிறகு இத்துறை பெரும் வளர்ச்சியை எட்டியிருக்கிறது. இம்மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் துறையிலும் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. அதனால் இப்பிரிவை தேர்வு செய்யும் மாணவர்கள் பகுதிநேரமாக கம்ப்யூட்டர் பயிற்சி எடுத்துக்கொள்வது நல்லது. பவர் செக்டாரின் வளர்ச்சி அதிவேகத்தில் நிகழ்ந்து வருவதால் எலெக்ட்ரிக்கல் படிப்பவர்களுக்கும் வாய்ப்பு குறையவில்லை. இத்துறையில் மேற்படிப்பு படித்தால் உயர்நிலைகளை எட்டலாம்.

மரைன் டெக்னாலஜி சற்று காஸ்ட்லி. ஆனால் வேலைவாய்ப்பு குறைவின்றி கிடைக்கிறது. கடலையும், கப்பலையும் ரசிக்கும் மாணவர்கள் மட்டும் மரைன் படிப்புகளைத் தேர்வு செய்யலாம். ஆட்டோமொபைல், இண்டஸ்ட்ரியல், மேனுஃபேக்சரிங் எஞ்சினியரிங் படிப்புகள் மீதும் மாணவர்களுக்கு ஈர்ப்பு இருக்கிறது. இவற்றுக்கும் நல்ல எதிர்காலம் உண்டு. இப்படிப்பை முடிப்பவர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஆனால் இவர்கள் மெக்கானிக்கல் படித்துவிட்டு, முதுநிலைப் பட்டத்தில் இதுபோன்ற சிறப்புப் பிரிவுகளை படிப்பது நல்லது.

பயோ டெக்னாலஜிக்கு என்றைக்கும் தேவையுண்டு. உயிரியலும், வேதிப் பொறியியலும் சேர்ந்த துறை. வேளாண்மை, உணவியல், மருத்துவம், மருந்தியல் உள்ளிட்ட பல துறைகளிலும் இதன் பங்களிப்பு உண்டு. இந்தியாவில் இத்துறை நல்ல வளர்ச்சியை எட்டியிருக்கிறது. பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ், பயோ மெடிசின் படிப்புகள் பரவலாக கவனம் பெற்றிருக்கின்றன. கெமிக்கல் எஞ்சினியரிங் படிப்புக்கும் நல்ல எதிர்காலம் உண்டு. இதற்கு உள்நாட்டை விட வெளிநாட்டில் வேலைவாய்ப்புகள் அதிகம். மேற்படிப்புக்கும், ஆராய்ச்சிக்கும் கூட வாய்ப்புள்ள துறை இது.

மெக்கட்ரானிக்ஸ் படிப்பு கடந்த சில வருடங்களாக அதிக கவனம் பெற்று வருகிறது. மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல் இணைந்த இந்தப் படிப்பையே கல்வியாளர்கள் மாணவர்களுக்கு பரிந்துரைக்கிறார்கள். ஃப்ளூயிட் மெக்கானிக்ஸ் மற்றும் மெஷினரி, மின்பொறிகள் மற்றும் இயக்கிகள், டிஜிட்டல் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், சி.என்.சி எந்திரங்கள், சிகிஞி, சிகிவி,   பவர் எலெக்ட்ரானிக்ஸ், ரோபாடிக்ஸ், ட்ரைபாலஜி உள்ளிட்ட பாடங்கள் இதில் அடக்கம். அத்தனை துறைகளிலும் பணி வாய்ப்புகள் இருக்கிறது.

கனிமத்தொழில் இந்தியாவில் பெரும் வளர்ச்சியை எட்டியிருக்கிறது. வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் ஏராளம் உண்டு. அதனால் மெட்டலர்ஜி, மைனிங் எஞ்சினியரிங் படிப்புகளைத் தேர்வு செய்யலாம். தாதுக்களில் இருந்து கனிமங்களைப் பிரித்தெடுத்தல், எரிபொருள், உலை, துரு மற்றும் மேற்பரப்பு பொறியியல் உள்பட பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய படிப்பு மெட்டலர்ஜி. சுற்றுச்சூழலியல், சர்வே, தரையடிச் சுரங்கம் உள்பட இயந்திரவியலை அடிப்படையாகக் கொண்டது மைனிங் எஞ்சினியரிங்.

இண்டஸ்ட்ரியலில் சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு பாலிமர் டெக்னாலஜி, ரப்பர் டெக்னாலஜி, பிளாஸ்டிக் டெக்னாலஜி, டெக்ஸ்டைல் டெக்னாலஜி படிப்புகள் உகந்தவை. நேரடித் தொழிலகப் பயிற்சிகளும் அடங்கிய இப்படிப்புகள் பெரிய அளவில் கவனம் பெறவில்லை. இவற்றை தாராளமாக தேர்வு செய்யலாம். நானோ டெக்னாலஜி பற்றியும் பேசுகிறார்கள். இந்தியாவில் இத்துறை இன்னும் பல கட்டங்களை எட்ட வேண்டியிருக்கிறது. நல்ல உள்கட்டமைப்புள்ள கல்லூரிகளில் இதைப் படிக்கலாம்.

விவசாயப் பொறியியல் படிப்புகளையும் பெரும்பாலான மாணவர்கள் விரும்புவதில்லை. ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில் அப்படிப்புகளுக்கு பெருமளவு வேலைவாய்ப்பு பெருக வாய்ப்புள்ளது. அக்ரிகல்சர் எஞ்சினியரிங், அக்ரிகல்சர் அண்ட் இர்ரிகேஷன் படிப்புகள் சிறந்தவை. அண்மைக்காலத்தில் அறிமுகமான சில படிப்புகள் பிரகாசமான வாய்ப்புகளைக் கொண்டுள்ளன. ஆட்டோமேடிவ் எஞ்சினியரிங், கெமிக்கல் பிராசஸ் எஞ்சினியரிங், எனர்ஜி எஞ்சினியரிங், நாலட்ஜ் எஞ்சினியரிங், நியூக்ளியர் எஞ்சினியரிங், பயோ மெடிக்கல் இன்ஸ்ட்ரூமென்டேஷன், வேஸ்ட் மேனேஜ்மென்ட், விண்ட் மேனேஜ்மெண்ட், ரெனீவல் எஞ்சினியரிங், ஓஷன் எஞ்சினியரிங், ஃபுட் டெக்னாலஜி,

ஜெனடிக் எஞ்சினியரிங், எலெக்ட்ரோ கெமிக்கல், ஃபேஷன் டெக்னாலஜி, இன்ஃபர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன், இண்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி, மெடிக்கல் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிகல் டிசைனிங் போன்ற சிறப்புப் பிரிவு படிப்புகள் நல்ல சாய்ஸ்.

ஆனால் இப்படிப்புகளை முழுமையாகக் கற்றுத் தேறும் அளவுக்கு கல்லூரி களில் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா என்று பாருங்கள். ‘கோர் கோர்ஸ்’கள் தவிர வேறு எந்தப் படிப்பைத் தேர்வு செய்தாலும் அது ஒருவழிப்பாதையாக மட்டுமே இருக்கும். படிப்பின் பெயரைப் பார்த்து மயங்காதீர்கள். அடுத்த 10 ஆண்டுகளை மனதில் வைத்து யோசித்து, விருப்பத்தின் அடிப்படையில் 5 பாடங்களை வரிசைப்படுத்தி எழுதிக் கொள்ளுங்கள்...’’ என்கிறார் நவநீதகிருஷ்ணன்.

சரி... படிப்பைத் தேர்வு செய்தாயிற்று! அடுத்த சவால் கல்லூரி யைத் தேர்வு செய்வது. இதற்கு படிப்பைத் தேர்வு செய்வதை விட அதிக கவனம் தேவை. 
அதற்கான சூத்திரங்களை அடுத்த வாரம் பார்க்கலாம்.

‘கோர் கோர்ஸ்’கள் தவிர வேறு எந்தப் படிப்பைத் தேர்வு செய்தாலும் அது ஒரு வழிப் பாதையாக மட்டுமே இருக்கும்.

- வெ.நீலகண்டன்
படம்: ஆர்.சந்திரசேகர்