சம்மர் எஸ்கேப்
அடர்ந்த காடுகள், வானுயர்ந்த மரங்கள், அரிய வகை மூலிகை வாசம், எங்கு நோக்கினும் தேயிலை - காபித் தோட்டங்கள், ஆங்காங்கே மலையைப் பிளக்கும் வெள்ளிக் கம்பிகளாய் வடியும் அருவிகள் என 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில், காண்போரை கட்டிப் போடுகிறது வால்பாறையின் அழகு!
‘ஏழாவது சொர்க்கம்’ என்றே அழைக்கிறார்கள் வால்பாறையை. மற்ற ஹில் ஸ்டேஷன்களைப் போல வால்பாறையின் காற்றும் சுற்றுப்புறமும் மனிதர் புழக்கத்தால் இன்னும் மாசுபடாமல் இருப்பது
கூடுதல் ப்ளஸ்!
என்னென்ன பார்க்கலாம்?
தலநார்: பொள்ளாச்சி ரோட்டில் கவர்க்கல் என்ற இடத்திலிருந்து பிரிந்து செல்லும் இப்பகுதியில் சிற்றருவிகளும், இயற்கைக் காட்சிகளும், சோலைகளும் தாலாட்டும். இங்குள்ள இயற்கை காட்சிமுனையில் இருந்து பார்த்தால் பசுமையான பள்ளத்தாக்கு, அணைக்கட்டுகள், பழங்குடியினர் குடியிருப்பு உள்ளிட்டவற்றைக் காண முடியும். சோலையார் அணை: குரங்கு முடி எஸ்டேட்டின் ஒரு பகுதியிலிருந்து நீளும் சாலையில் நடந்து சோலையார் அணையின் அழகையும், பிரமாண்டத்தையும் காண முடியும்.
ஹார்ன்பில் வியூ பாயின்ட்: வால்பாறையை அடுத்துள்ள அட்டகட்டியில் இருக்கும் பழங்கால வியூ பாயின்ட் இது. இங்கு காலை, மாலை வேளைகளில் கூட்டமாகப் பறக்கும் ஹார்ன்பில் (இருவாச்சி) பறவைகளைக் காண முடியும். இதற்கு எதிரே உள்ள வனத்துறை சோதனைச் சாவடியில் டிக்கெட் பெற்று இதைக் காணலாம். இங்குள்ள வனத்துறையின் இயற்கை வன மையம், குழந்தைகளுக்கு குதூகலம் தரும்.
நல்லமுடி பள்ளத்தாக்கு: நீர்வீழ்ச்சியும், புல்வெளியும் நிறைந்த எழில் கொஞ்சும் பள்ளத்தாக்குக் காட்சிகளை நம் காலுக்குக் கீழே பார்த்து மகிழும் வியூ பாயின்ட் இது.லோயர் நீராறு அணை: வால்பாறையில் இருந்து 10 கி.மீ தொலைவில், கடல் போல் காட்சி தரும் பரந்த நீர்த்தேக்கம் இது. சின்னக் கல்லார் அணை: இது வால்பாறையில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. வற்றாத நீர்வீழ்ச்சிகளை தனது நீராதாரமாகக் கொண்டிருக்கும் இந்த அணையில் எப்போதும் தண்ணீர் இருந்துகொண்டே இருக்கும். மற்ற பகுதிகளை விட இங்கு ஆண்டுதோறும் அதிக மழை பெய்வதும் குறிப்பிடத்தக்கது.
எப்படிப் போவது?
வால்பாறையில் இருந்து 64 கி.மீட்டரில் உள்ள பொள்ளாச்சிதான் அருகில் இருக்கும் பெரிய நகரம். அங்கிருந்து வால்பாறைக்கு பேருந்துகள் இயக்கப் படுகின்றன. கோவை வழியாக தனி ஊர்திகளில் வருகிறவர்களுக்கும் இதுதான் ரூட். சென்னை, திருச்சி, மதுரை பகுதிகளிலிருந்து வருபவர்கள் உடுமலை - வால்பாறை சாலையில் இடதுபுறமாக ஆனைமலை சாலையைப் பிடித்தால், பொள்ளாச்சி போகாமலேயே 85 கி.மீ. தூரத்தில் வால்பாறை.
எவ்வளவு செலவாகும்?
வால்பாறையிலேயே தனியார், அரசு தங்கும் விடுதிகள் தேவையான அளவு உள்ளன. ஒரு நாளைக்கு 1000 ரூபாய் முதல் 8000 ரூபாய் வரை வாடகையில் அறைகள் கிடைக்கின்றன. சுவையான உணவுக்கும் குறைவில்லை.
எஸ்.ஜெபராஜ்