தேவதைகளின் மலை தேக்கடி



ஜிலீர் ஸ்பாட் தேடும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கேரளாவுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. பார்க்கும் இடமெல்லாம் பச்சைப் பசேல், நாசி துளைக்கும் பலாப்பழ வாடை, சுடச்சுட கிடைக்கும் நேந்திரம் பஜ்ஜி... இதையெல்லாம் அனுபவிக்க மிகச் சிறந்த இடம் தேக்கடி.

என்னென்ன பார்க்கலாம்?

பெரியாறு அணை: தமிழக - கேரள எல்லைப் பகுதியான குமுளியில் இருந்து வெறும் 4 கி.மீ தூரத்தில் உள்ள தேக்கடி, ஒரு சர்வதேச சுற்றுலாத் தலம். பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பரப்பில் இயற்கை சூழலில் வாழும் விலங்குகளைக் கண்டு ரசித்தவாறு படகு சவாரி செய்வது தனிச் சிறப்பு! அதிர்ஷ்டம் இருந்தால், கூட்டம் கூட்டமாக தண்ணீர் குடிக்க வரும் யானைகளை தரிசிக்கலாம். இங்கிருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கும் முறிக்கடியில் மிளகு, காபி மற்றும் ஏலக்காய் தோட்டங்களை கண்டு ரசிக்கலாம்.

வாகமண்: தேக்கடியிலிருந்து 45 கி.மீ தொலைவில், இடுக்கி மாவட்டம் ஏலப்பாறை அருகே கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது வாகமண். தேக்கடியிலிருந்து இது ஒன்றே கால் மணி நேரப் பயணம். இங்கே, சூசைடு பாயின்ட், பைன் மரக்காடுகள், வாகமண் அருவி, பாரா கிளைடிங் பயிற்சி இடம் ஆகியவை கண்டு ரசிக்க வேண்டிய இடம். நிறைய படங்களின் பாடல் காட்சிகள் இங்குதான் எடுக்கப்படுகின்றன. கூட்ட நெரிசல் இல்லாத அற்புத மலைப் பிரதேசம். 

இடுக்கி அணை: இதுவும் தேக்கடியில் இருந்து ஒன்றேகால் மணிநேரப் பயணம்தான். 839 அடி உயரமுள்ள குறவன் மலையையும், 925 அடி உயரமுள்ள குறத்தி மலையையும் இணைத்து 555 அடி உயரத்திற்கு கட்டப்பட்டுள்ளது இந்த இடுக்கி அணை. பாதுகாக்கப்பட்ட அணை என்பதால் ஓணப் பண்டிகை மற்றும் புத்தாண்டின்போது மட்டுமே இந்த அணையில் படகு சவாரி செல்ல அனுமதியுண்டு. மற்ற நாட்களில் வெளியிலிருந்து அணையைப் பார்க்கலாம்.

ராமக்கல்மேடு: இது தேக்கடியிலிருந்து 32 கி.மீ. தூரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 5 ஆயிரம் அடி உயரத்திலுள்ள இப்பகுதி ஆசியாவில் அதிக காற்று வீசும் பகுதிகளில் ஒன்றாகும். இங்கு மணிக்கு 35 கிலோமீட்டர் வேகத்தில் எப்போதும் காற்று வீசுவது அதிசயமே. இங்குள்ள குலும்பன் என்ற ஆதிவாசி குறவன், மனைவி குழந்தையுடன் அமர்ந்திருக்கும் பிரமாண்ட சிலை உள்ளது. இதன் உயரம் 40 அடி! மலை உச்சியிலிருந்து தமிழகத்தின் இயற்கை எழிலையும், காற்றாலைகளையும் கண்டு ரசிப்பது கண்களுக்கு விருந்தாகும்.

எப்படிப் போவது?

மதுரையிலிருந்து 140 கி.மீ, கம்பம் பகுதியிலிருந்து 23 கி.மீட்டரில் உள்ளது தேக்கடி. மதுரையிலிருந்து புறநகர் பேருந்தும், கம்பத்தில் இருந்து நகர்புற பேருந்தும் தேக்கடிக்கு தினந்தோறும் சென்று வருகின்றன. மேலும் குமுளியிலிருந்து ஆட்டோ மற்றும் ஜீப்புகள் அடிக்கடி டிரிப் அடிக்கின்றன.

எவ்வளவு செலவாகும்?

நட்சத்திர ஓட்டல் முதல் சாதாரண லாட்ஜ் வரை பலதரப்பட்ட தங்குமிடங்கள் தேக்கடியில் உண்டு. நான்கு பேர் தங்கக் கூடிய அறைக்கு ஒரு நாள் வாடகை ரூ.1000 முதல் 15000 வரை. மற்ற பகுதிகளுக்கு சென்று வர நியாயமான தொகைக்கு இங்கேயே வானங்கள் கிடைக்கின்றன.
 

கம்பம் விஜி