பேசும் சித்திரங்கள்



பொசுங்கும் உதடுகள்

பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது...
- தந்தை பெரியார்மீசை என்பது வெறும் பாலினக் குறியீடு அல்ல; அது அதிகார வர்க்கத்தின் துர்வாசம் வீசும் எச்சம். அதிகார போதை தலைக்கு ஏற ஏற, மனிதாபிமானமும், மனிதர்கள் மீதான வாஞ்சையும் கொஞ்சம் கொஞ்சமாக நம்மைவிட்டு அகன்று போய்விடும். வெறுமனே பிள்ளை பெறும் எந்திரமாக மட்டுமே பாவிக்கப்பட்டு, பெண்கள் மீது ஆண்கள் செலுத்திய வன்
முறைக்கு அளவே இல்லை.

‘மனம் அடிமைப்பட்டுக் கிடக்கும் வரை உடலுக்கு விடுதலை இல்லை’ என்கிற மார்ட்டின் லூதர் கிங்கின் வரிகளை பெண்ணினம் எங்கோ ஒரு புள்ளியில் புரிந்து கொள்ள தொடங்கியதன் விளைவுதான், ஆணுக்கு நிகராக தங்களை உருவாக்கிக்கொள்ளும் பக்குவம். தமிழ்நாட்டில் பெண்ணடிமைத் தனத்தை மட்டுப்படுத்தியதில் பெரியாரின் பங்கு அதிகம். பெரியாரின் வழியில் தோன்றியவர்களும், தொடர்ச்சியாக இலக்கியங்கள் மூலமாகவும், சினிமா மூலமாகவும் பெண்ணடிமைத் தனத்திற்கு எதிராகப் போராடி வருகிறார்கள்.

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பத்திரிகையில் எழுதிய ‘பொசுங்கும் உதடுகள்’ சிறு கதையை, சுரேந்திரன் செல்வராஜ் ‘மீசை’ என்கிற குறும்படமாக காட்சிப்படுத்தி இருக்கிறார். தலைப்பை மாற்றியதிலேயே பல உள்ளர்த்தங்கள் இருக்கின்றன. ஆண்களின் அடையாளமாகக் கருதப்படும் மீசையை, ஆணாதிக்கத்திற்கு எதிரான குறியீடாகப் பார்ப்பதும், மீசையை புதுமைப் பெண்களுக்கான குறியீடாக மாற்றிக் கொண்டாடுவதும் மிக முக்கியமானஅணுகுமுறை.

பாரதிதாசனின் ‘குடும்ப விளக்கு’ கதாபாத்திரமாகவே வாழும் சித்ரா, காலையில் எழுந்து, காபி போட்டு, கணவனுக்குப் பணிவிடைகள் செய்து, காலை உணவையும் தயார் செய்து வைக்கிறாள். கணவன் எழுந்து குளித்து, வேலைக்குக் கிளம்ப முற்படுகிறான். திருமணமாகி வெகு சில நாட்களே ஆன நிலையில், ‘‘இன்னும் மூன்று நாட்கள் அலுவலகத்திற்கு விடுமுறை சொல்லி விடவா’’ என்று மனைவியிடம் கொஞ்சுகிறான். ‘‘ஹனிமூனுக்கு போகும்போது விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். இப்போ வேலைக்குப் போங்க’’ என்கிற மனைவியின் சொல்லுக்கேற்ப அலுவலகம் கிளம்புகிறான். கார் சாவியை மறந்துவிட்டு, மீண்டும் வீட்டுக்கு வந்து பார்க்கிறான்... அதிர்ச்சியில் உறைந்து போகிறான். எதிரில் அவன் மனைவி சிகரெட் பிடித்துக்கொண்டிருக்கிறாள்.

குடும்பப் பஞ்சாயத்து கூடுகிறது. சித்ராவின் தந்தையும், சகோதரனும் அவளை திட்டித் தீர்க்கிறார்கள். எதையும் கண்டுகொள்ளாமல், கணவன் ஒரு பக்கம் தொடர்ச்சியாக சிகரெட் பிடித்துக்கொண்டிருக்கிறான். ‘‘எப்படி உனக்கு இந்த பழக்கம் வந்தது’’ என்று அண்ணன் கேட்க, ‘‘நீயும் அப்பாவும் மட்டுமே காரணம்’’ என்கிறாள் சித்ரா. கோபமான தந்தை, ‘‘இனி நான் எப்படி வெளியில் தலை காட்டுவேன்? வாடா, எல்லாரும் போய் தற்கொலை பண்ணிக்கிட்டு சாகலாம்’’ என்று சொன்னபடி ஒரு சிகரெட்டைப் பற்ற வைக்கிறார்.

‘‘இனி நான் இப்படி பண்ண மாட்டேன். அவரை என்கிட்டே பேசச் சொல்லுண்ணா’’ என்று தன் அண்ணனிடம் கெஞ்சுகிறாள் சித்ரா. அண்ணன் அவளுக்காக, மாப்பிள்ளையிடம் பரிந்து பேசுகிறான். ‘‘உன் பொண்டாட்டி சிகரெட் பிடிச்சா நீ சும்மா இருப்பியா? இன்னும் என்னென்ன தப்பு செஞ்சிருக்காளோ உன் தங்கச்சி’’ என்று கொதிக்கிறான் கணவன். கோபம் தாங்காமல் அண்ணனும் இன்னொரு பக்கமாகத் திரும்பி சிகரெட் பிடிக்கிறான். ஒரு முனையில் கணவன், இன்னொரு முனையில் அண்ணன், அருகே தந்தை... மூவரும் தங்களின் ஆற்றாமையை, கோபத்தை, புகையாக வெளியே தள்ளிக்கொண்டிருப்பதை சித்ரா உற்றுநோக்குகிறாள். அடுத்து அவள் என்ன செய்தாள் என்பதை ஆணாதிக்க சமூகத்திற்கு சவுக்கடி கொடுத்துச்சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

‘மீசை’ குறும்படத்தின் இறுதி யில் கொஞ்சம் பிரசார வாசம் வீசினாலும், அதை நோக்கி நகரும் காட்சிகள் அதனை மட்டுப்படுத்துகிறது.இதே போன்று பெண்ணடிமைத்தனத்தைப் பதிவு செய்த, ஸ்டீவன் ஸ்பீல்பெர்கின் ‘தி கலர் பர்ப்பிள்’ திரைப்படத்தின் இறுதியில், கதையின் மைய பாத்திரமான ஷக் தன் தந்தையிடம் சொல்லுவாள்... ‘‘அப்பா, பாவிகளுக்கும் இதயம் இருக்கிறது’’ என்று! இந்த வரிகளுக்கு அப்படியே எதிர் திசையில் பயணிக்கிறது, இங்கு சித்ரா இறுதியில் பேசும் வசனம்.

‘‘ஆண்கள் சிகரெட் பிடித்தால் உடலுக்குக் கேடு, பெண்கள் சிகரெட் பிடித்தால், ஒழுக்கக்கேடா?’’ கணவனின் அரவணைப்பையும், தந்தையின் ஆதரவையும், சகோதரனின் தோழமையையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சித்ராவிற்கு கிடைக்கும் ஏமாற்றமும், வலியும் அவளை இந்த மனநிலைக்கு உந்தித் தள்ளுகிறது.

‘மீசை’ குறும்படத்தின் மையம், ஒரு பெண் சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் குடும்பப் பிரச்னைகளும், அதனூடாக அவளுக்கு ஏற்படும் உளவியல் சிக்கலும், அதிலிருந்து மீள அவள் மேற்கொள்ளும் நடவடிக்கையும் மட்டுமே. ஆனால் இந்த மையத்தை நோக்கிச் செல்ல சில புறக்காட்சிகள் அவசியம்.

முதல் மூன்று நிமிடங்களுக்குள், ‘இவர்கள் புதிதாக திருமணம் ஆனவர்கள்’ என்பதையும், அவர்களுக்குள் இருக்கும் நெருக்கத்தையும், சித்ரா எத்தனை தூரம் ஒரு ஆணுக்குத் தேவையான அத்தனை பணிவிடைகளையும் முறையாகச் செய்கிறாள் என்பதையும் அடுத்த சில நொடிகளிலும் சொல்லிவிடுகிறார்கள். இறுதியில் அவள் எடுக்கும் முடிவு ‘சரியா,  இல்லையா’ என்பதை பார்வையாளன் முடிவு செய்ய இந்த புறக் காட்சிகள்தான் உதவுகின்றன.

இதன் படத்தொகுப்பு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. சித்ரா புகைபிடிப்பதைப் பார்த்துவிடும் கணவனைக் கண்டு அவள் அதிர்ச்சியில் உறையும் காட்சிக்கடுத்து, அவளது கணவன் சிகரெட் பற்ற வைக்கும் காட்சி வருகிறது. இரண்டு காட்சிகளுக்கும் இடையே உள்ள உறவையும் பகுத்தறிந்தால், பெண்ணடிமைத்தனத்தை இதைவிட சிறப்பாகச் சொல்லமுடியாது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இருக்கும் திப்பு சுல்தானின் குளிர்கால அரண்மனையில் ஏராளமான சுவரோவியங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றில், ஒரு மகாராணி ஒய்யாரமாக அமர்ந்தபடி ஹூக்கா புகைத்துக் கொண்டிருப்பார். அவரைச் சுற்றிலும் பலர் பணிவோடு அமர்ந்திருப்பார்கள். குளிர்நாட்களில் தங்களை கதகதப்பாக்கிக் கொள்ள சுருட்டு புகைக்கும் கிழவிகள் இன்னமும் கிராமங்களில் உண்டு. இவர்களை சூனியக்காரக் கிழவிகள் போல சித்தரிக்கும் கதைகள் நிறைய...

‘பொதுவெளியில் பெண்கள் புகை பிடிப்பது குற்றச்செயல்... அத்தகைய பெண்கள் குடும்பத்திற்கு உகந்தவர்கள் அல்ல’ எனக் கருதுகிற ஆண்களின் மனப்போக்கை கண்டிக்கும் விதமாகவே இந்தக் குறும்படத்தை எடுத்ததாகச் சொல்கிறார் இயக்குனர் சுரேந்திரன் செல்வராஜ். ஆணோ, பெண்ணோ... யாருமே புகை பிடிப்பதை எந்த வகையிலும் நியாயப் படுத்த முடியாது. ஆனால் ஆண்கள் புகை பிடிப்பதை ஒரு கோணத்திலும், பெண்கள் புகை பிடிப்பதை இன்னொரு கோணத்திலும் பார்ப்பதில்தான் பிரச்னை இருக்கிறது!

பதற்றம்

படத்தின் இறுதிக் காட்சியில், சித்ரா வீட்டிலிருந்து நடந்து சென்று, அருகில் இருக்கும் கடையில் ஒரு சிகரெட்டை வாங்கிப் பற்ற வைப்பார். படப்பிடிப்பிற்கு முன்பே வீட்டு மாடியில் நிறைய முறை ரிகர்சல் செய்துவிட்டாலும், இந்தக் காட்சியை படமாக்கும்போது அருகில் இருந்தவர்கள் திரண்டு விட்டதால், அடுத்து என்ன நடக்கும் என்கிற பதற்றத்திலேயே படம் பிடித்திருக்கிறார்கள்.

என்னதான் பெண்ணடிமை பற்றிப் பேசினாலும், அனுபவமே இல்லாமல் புதிதாக சிகரெட் பற்ற வைத்தபோது அபிநயாவிற்குள் பதற்றம் ஏற்பட்டது; இப்படி புகை பிடிப்பதால் ஏதாவது நேர்ந்துவிடுமோ என்கிற அவரது அச்சத்தையும் போக்கி சிறப்பாக படம் பிடித்திருக்கிறார்கள்.

(சித்திரங்கள் பேசும்...)

தமிழ் ஸ்டுடியோ அருண்