‘‘அண்ணாச்சி, போன வாரம் உங்க கடையில வாங்கின அரிசி சரியில்லை. ஒண்ணு, சரியா வேக மாட்டேங்குது... இல்லன்னா கஞ்சி மாதிரி ஆகிடுது’’ - காரில் வந்த அந்தப் பெண் மளிகைக் கடை ஓனரிடம் முறையிட்டாள்.
கடையில் நுழைய இடம் இல்லாமல் கூட்டம். ஏகப்பட்ட கஸ்டமர்கள் காத்திருந்தார்கள். அந்த பிஸியிலும் கல்லாவில் இருந்த அண்ணாச்சி சலித்துக்கொள்ளவில்லை.
‘‘அடடே... உடனே கொண்டு வந்திருக்க வேண்டியதுதானே?’’ என்றவர், சட்டென கடைப்பையனை அழைத்தார். அடுத்த நிமிடமே கார் டிக்கியில் இருந்த அரிசி மூட்டைக்கு பதில் வேறு நல்ல அரிசி வைக்கப்பட்டது!
அந்தப் பெண் தேங்க்ஸ் சொல்லிப் புறப்பட்டாள். கூட்டம் குறைந்ததும் கடைப் பையன் அண்ணாச்சியிடம் வந்தான்... ‘‘அண்ணாச்சி, அந்த அம்மா நம்மளை ஏமாத்திட்டாங்க. அவங்க கொண்டுவந்த அரிசி நம்ம கடையில் வாங்கினதே இல்லை!’’ ‘‘எனக்கும் அது தெரியும்டா. இப்ப நாம வாக்குவாதம் பண்ணினா,
பல பேர் முன்னாடி கெட்ட பேர் வரும். அந்த அம்மாவும் நாளைக்கு கடைக்கு வர மாட்டாங்க. இப்ப பாரு... எல்லார் பார்வையிலும் நாம உயர்ந்து நிற்கறோம். வியாபாரத்தில் ஜெயிக்கணும்னா சில சின்ன இழப்புகளை கண்டுக்கக் கூடாது’’ என்றார் அண்ணாச்சி. அவரின் யுக்தியைப் பார்த்து, மலைத்து நின்றான் பையன்!
அமுதகுமார்