மூலிகைகளை பாதுகாக்க ஒரு தோட்டம்



திருக்கழுக்குன்றம் அருகே இருக்கும் தண்டரை கிராமம்... இருளர் பழங்குடி மக்களின் அடையாளமாக அறியப்பட்ட பகுதி... ‘இருளர் பழங்குடி பெண்கள் அமைப்பு’ எனும் பெயர்ப் பலகையைத் தாண்டி உள் நுழையும்போதே ஒரு ரம்மியமான வாசம் நாசிக்குள் நுழைந்து நாபிக்குள் எதையோ ரிப்பேர் செய்கிறது.

 ‘‘ஆறாயிரம் வருஷத்துக்கு முன்னாடி நம்ம முன்னோர்கள் கிட்டத்தட்ட 2000 அரிய மூலிகைகளைப் பத்தி தெரிஞ்சு வச்சிருந்தாங்களாம். இப்ப இந்த மூலிகைப் பண்ணையில நாங்க சுமார் 350 மூலிகைகளை பராமரிக்கிறோம். இந்தக் காலத்துக்கு இதுவே பெரிய விஷயம்!’’ என அறிமுகம் தருகிறார் ராஜேந்திரன்.

இருளர் பெண்கள் அமைப்பின் முதன்மை செயல் அலுவலர் இவர். ‘‘தமிழ்நாட்டு பாம்பு வகைகளை ஆய்வு செஞ்சு அதை உலக அளவில் கொண்டு போனவர் ரோமுலஸ் விட்டேகர். அவரோட மனைவி ஷாயிதா விட்டேகரால், 1986ல் தொடங்கப்பட்ட அமைப்புதான் இது. இருளர்கள் காலம் காலமா பாம்பு பிடிக்கிறதுல கெட்டிக்காரங்க. வாசனையையும் சத்தத்தையும் வச்சே ஒரு பகுதியில பாம்பு இருக்கா இல்லையான்னு இவங்களால சொல்லிட முடியும்.

பாம்பு எந்த மூலையில ஒளிஞ்சிருந்தாலும் தேடிப் போய் உயிரோட பிடிச்சிடவும் முடியும். அது மட்டுமில்ல... இருளர்களுக்கு காடுகள்ல கிடைக்கிற மூலிகைகளைப் பத்தியும் நல்லா தெரியும். அதுவும் இந்த சமூகத்துப் பெண்களுக்கு அது அத்துப்படி. என்னா, காடுகள்ல உணவு தேடிட்டு வர்ற ஆண்களுக்கு ஏதாச்சும் விஷக்கடின்னா, இவங்கதான் காலம்காலமா மூலிகை வைத்தியம் பண்ணியிருக்காங்க. அந்தப் பாரம்பரியமான அறிவை அவங்க மூலமாவே காப்பாத்துற வேலையைத்தான் எங்க அமைப்பு செய்கிறது’’ என்கிறார் ராஜேந்திரன்.

இங்கிருக்கும் மூலிகைகள் அனைத்தும் இருளர்கள் அதிகம் வாழும் தமிழக கிராமங்களிலிருந்து சேகரிக்கப்பட்டவை. புதிதாக இங்கு அறிமுகப்படுத்தப்படும் மூலிகைக் கன்றுகளை இந்த அமைப்பு பணம் கொடுத்துப் பெற்றுக் கொள்கிறது. அதன் பிறகு அதை வளர்த்துப் பராமரிப்பது இந்த அமைப்பைச் சார்ந்திருக்கும் பெண்களின் வேலை. இங்கு உற்பத்தியாகும் மூலிகைகளை பறித்து காய வைத்து பதப்படுத்தி விற்கிறார்கள். அவற்றைப் பயன்படுத்தி பொடி, சூரணம், தைலம் என மருந்துகள் செய்தும் விற்கிறார்கள். தங்களின் பாரம்பரிய வாழ்வாதாரமான காடுகளை இழந்து தவிக்கும் இருளர் குடும்பங்களுக்கு இது பெரிய ஆபத்பாந்தவனாகவே விளங்குகிறது.

‘‘எங்க குடும்பத்துல வழி வழியா கை வைத்தியம் செஞ்சிருக்காங்க சார். சாதாரண சளித் தொல்லையில இருந்து பாம்புக்கடி வரைக்கும் எல்லாத்துக்கும் மருந்து இருக்கு!’’ என ஆரம்பிக்கிறார் இருளர் பெண்களில் ஒருவரான மீனா. ‘‘சீனி துளசின்னு ஒரு மூலிகை... சாப்பிட இனிப்பா இருக்கும். சர்க்கரைக்கு பதில் இதை சேர்த்துக்கலாம். ஆனா, ரத்தத்துல சர்க்கரை ஏறாது. அதே மாதிரி கோஷ்டம்னு ஒரு செடி.

அதை ‘இன்சுலின்’னு சொல்லியே கேட்டு வாங்குறாங்க. அந்த அளவுக்கு சர்க்கரையைக் குறைக்குதாம். அப்புறம் ஹால்ஸ் மிட்டாய் மாதிரியே சுவை இருக்குற ஒரு வகை துளசி இருக்கு. தொண்டை வலி, கரகரப்பை எல்லாம் அது தூக்கிக் கடாசிடும். நீர் நொச்சின்னு ஒரு இலை... இது இருக்குற இடத்துல கொசுவே வராது. தமிழ்நாடு அரசே அந்த இலையை வாங்கி விநியோகிக்கப் போறதா சொல்றாங்க!’’ என்கிறார் அவர் உற்சாகத்தோடு.

பெண்களுக்காகத்தான் அமைப்பு என்றாலும் சற்று கடுமையான தோட்ட வேலைகளில் இங்கே ஆண்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பாம்பு பிடித்தல் பற்றி எதைக் கேட்டாலும் ஆர்வத்தோடு ஓடி வருகிறார்கள் அவர்கள். ‘‘இருளர்கள்னா பாம்பைப் பிடிச்சி அதோட தோலை விக்கிறவங்கன்னு தப்பா நினைக்கிறாங்க சார். நாங்க பாம்புகளை தெய்வமா வணங்குறவங்க. குடியிருக்குற இடத்துல பாம்பு வந்தா அதை அடிக்காம உயிரோட புடிச்சி காடுகள்ல விடணும்.

அதுதான் எங்க குல தர்மம். நாங்க பாம்பு பிடிக்க பழகினதே அதுக்காகத்தான். நாங்க பாம்பைப் புடிக்கிறது ஒண்ணும் மாயமோ மந்திரமோ இல்ல. பாம்பும் நாய்க்குட்டி, பூனைக்குட்டி மாதிரிதான் சார். அதை தொந்தரவு பண்ணாம, பக்குவமா நடத்துக்கிட்டா நம்ம கிட்ட பாசமா விளையாடும்’’ என்கிறார் அழகேசன்.
‘‘பாம்புக்கடி வைத்தியம் பத்தி ஏதாவதுன்னா இவர்கிட்ட கேட்டுக்கங்க!’’ என ராமசாமியைக் கை காட்டுகிறார்கள் அங்கிருப்பவர்கள்.

‘‘எங்க தாத்தா, அப்பாகிட்ட இருந்து இந்த வைத்தியத்தைக் கத்துக்கிட்டேன். எல்லா பாம்பும் விஷப் பாம்பு கிடையாது. நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன்... இதெல்லாம்தான் விஷம். இதுல கட்டு விரியன்தான் அதிக விஷமுள்ள பாம்பு. கடிச்சது எந்தப் பாம்புன்னு பார்த்து அதுக்கு ஏத்த மருந்தைத்தான் கொடுக்கணும். பொதுவா பாம்புக்கடி வைத்தியருங்க பல் தடத்தை வச்சே ‘என்ன பாம்பு அது, எவ்வளவு பெருசு’ங்கற வரைக்கும் சொல்லிடுவாங்க. பாம்பு விஷம் ரத்தத்துல கலந்துட்டா அவங்களுக்கு மிளகு காரம் தெரியாது. வேப்பிலை கசக்காது. சிறியாநங்கையை சாப்பிட்டதும் இனிப்பு தெரிஞ்சா, பாம்பு விஷம் ஏறிடுச்சுன்னு அர்த்தம்.

விஷப் பாம்பு கடிச்சா, ரெண்டு மணி நேரத்துலயே கூட ஒருத்தர் செத்துப் போயிடலாம். விஷ மயக்கத்துல அவர் தூங்க நினைப்பார். ஆனா, தூங்க விடக் கூடாது. தலை சாஞ்சா விஷம் சீக்கிரம் ஏறிடும். பாம்புக்கடிக்கு 25 வகையான மூலிகைகளைக் கொண்ட சூரணத்தை இங்கேயே தயார் செய்யிறோம். எல்லா பாம்பு கடிக்கும் முக்கியமான மூலிகைச் செடியா ஆகாச கருடன் கிழங்கு பயன்படுது.

பாம்போட வகைக்கு ஏத்த மாதிரி கலவையில மாற்றம் இருக்கும். இந்த வைத்தியம் பாம்பு விஷத்தை முழுசா எடுத்து குணமாக்கிடும்னாலும் கடிபட்டவங்களோட ஆத்ம திருப்திக்காக இங்கிலீஷ் மருந்தையும் எடுத்துக்கச் சொல்றோம்’’ என்றார் ராமசாமி. ‘மூங்கில் தோட்டம்... மூலிகை வாசம்...’ என்பது இனி காதலியை மாத்திரமல்ல, ஆதித் தமிழனின் பாரம்பரியத்தையும் நினைவு
படுத்தும்!

இது அறிவியல் பூர்வமானதா?

பாம்பு விஷத்துக்கு மாற்று மருந்து என்பது மிகமிக அரிதானது... விலை உயர்ந்தது என்கிறது அலோபதி மருத்துவம். உயிர் ஆபத்து மிகுந்த இந்த சிகிச்சையில் இருளர்கள் பின்பற்றும் முறை சரியானதா? நவீன மருத்துவ உலகம் இதை அங்கீகரிக்கிறதா?  - மத்திய அரசின் சார்பாக, தமிழகத்தின் பாரம்பரிய மருத்துவம் பற்றி ஆராய்ச்சிகள் செய்திருக்கும் ஹோமியோபதி மருத்துவர் ஜாய்ஸ் திலகத்திடம் கேட்டோம்...

‘‘பாரம்பரிய மருத்துவ முறைகளை அறிவியல் முறைப்படி ஆய்வு செய்தால்தான் அது சரியா, தவறா என்று சொல்ல முடியும். ஆனா, இங்கே இதுவரை முழுமையாக எதுவும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை. இதில் தவறு இரண்டு பக்கமும் இருக்கிறது. நாட்டுப்புற மருத்துவம் என்றாலே மூட நம்பிக்கை என்பது அறிவியலாளர்களின் பொதுவான எண்ணம். பாரம்பரிய மருத்துவர்களும் தங்கள் மருத்துவத்தை முழுமையாக வெளியே சொல்வதில்லை.

ரகசியம் காக்கிறார்கள். மூலிகைச் செடியின் பெயரைச் சொன்னாலும் அதைத் தவறாக அடையாளம் காட்டுகிறார்கள். இதனால்தான், பெரும்பாலான சோதனை முடிவுகள் பாரம்பரிய மருத்துவத்துக்கு நெகட்டிவாக அமைக்கிறது. எது எப்படியோ, பாம்புக் கடி போன்றவற்றில் துரிதமான சிகிச்சையும் முதலுதவியும்தான் முக்கியம் என்பதால், இதுபோன்ற சிகிச்சைகளை மருத்துவர்கள் எதிர்ப்பதும் இல்லை... ஆதரிப்பதும் இல்லை’’ என்றார் அவர்.

டி.ரஞ்சித்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்